ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

இணையதளம் மூடப்பட்டிருப்பது குறித்து அடக்கி வாசிக்கும் உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம், ஜம்மு-காஷ்மீரில் இணையதளம் முறையற்றமுறையில் மூடப்பட்டிருப்பது குறித்து ஆய்வு செய்திட எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முந்தைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், இணைய தளம் மூடப்பட்டிருப்பதை அகற்ற வேண்டும் என்று கோரிய, அனுராதா பாசின் (எதிர்) இந்திய அரசு (2020) வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகவும் எரிச்சலூட்டும் விதத்தில் அமைந்துள்ளது. நீதிமன்றமானது பேச்சுரிமையின் முக்கியத்துவம் குறித்தும், பத்திரிகைகள், இணையதளம்  ஆகியவை கருத்துக்களை வெளியிடும் கருவியாக இருக்கின்றன என்றும் இவற்றின்மீது அனைத்துத்தரப்புக் கூற்றுக்களையும் நடைமுறைகளையும் அலசி ஆராய வேண்டியது அவசியம் என்றும் மிகவும் நீண்ட நெடிய விரிவான விவாதங்களைச் செய்துள்ளது. இருப்பினும், கடைசியில்  அது அளித்துள்ள “முடிவுகளோ” அவற்றிற்கு முற்றிலும் முரணாக இருக்கின்றன மற்றும் நீதிமன்றம் விவாதித்துள்ளவற்றின் சுவடு அநேகமாக எதுவும் இல்லாத நிலையில் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, ஜம்மு-காஷ்மீரில் இணைய தள சேவையை நிறுத்தி வைத்திருப்பதற்கான ஆணைகளின் நகல்களை அளித்திட அரசாங்கம் மறுப்பது ஏன் அனுமதிக்கத்தகாதது என்று நீதிமன்றம் விவாதித்திருக்கிறது. நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், இந்திய சொலிசிடார் ஜெனரல் அரசாங்கத்திற்காக விவாதம் மேற்கொண்ட சமயத்தில், இதுதொடர்பான ஆணைகள் அனைத்தையும் “தனிச்சலுகை” அடிப்படையில் தாக்கல் செய்வது சாத்தியமில்லை என்று கூறியதுடன், அவ்வாறு எந்தச் சட்டத்தின் அடிப்படையில் அவர் காட்ட மறுக்கிறார் என்பதையும் அவரால் கூற முடியவில்லை. இறுதியாக, தனிச்சலுகை என்பதை நீக்கியபின்னர், “மாதிரி ஆணைகள்” தாக்கல் செய்யப்பட்டன.

இவ்வாறு  அரசாங்கத்தின் தரப்பில் மறுதலிக்கப்பட்டபோதிலும், இதன்மீது நீதிமன்றம் எதுவுமே செய்திடவில்லை. சாட்சியத்தின் முக்கியமான விதி, ஓர் ஆவணத்தை வைத்திருக்கும் தரப்பினர், அதனை நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்திட வேண்டும், அவ்வாறு தாக்கல் செய்ய மறுக்குமானால் நீதிமன்றம் அந்தத் தரப்பினருக்கு எதிரான முறையில் முடிவினை மேற்கொள்ள வேண்டும்.  இணையதள சேவையை நிறுத்தி வைத்து பிறப்பித்துள்ள ஆணைகளை அரசாங்கம் தாக்கல் செய்யத் தவறும்பட்சத்தில், நீதிமன்றமானது அதுபோன்று ஓர் ஆணையே இல்லை என்று ஊகித்துக்கொண்டு, எனவே இவ்வாறு இணையதள சேவையை நிறுத்தி வைத்திருப்பது சட்டவிரோதமானது என்றும் அதனை உடனடியாக சரிசெய்து சேவையைத் தொடர அனுமதித்திட வேண்டும் என்றும் கூறியிருக்க வேண்டும். ஆனால், உச்சநீதிமன்றம் இவ்வாறெல்லாம் செய்திடவில்லை. மாறாக, தன்னுடைய தீர்ப்புரையை, அரசாங்கமானது இணையதள சேவையை நிறுத்தி வைத்திருக்கும் ஆணைகளை குறைந்தபட்சம் வெளியிடவாவது முன்வர வேண்டும் என்றும், அப்போதுதான் மக்கள் அதனை ஆட்சேபித்து, எதிர் காலத்தில் ஏதேனும் ஒரு தேதியில் நீதிமன்றத்தை அணுக முடியும் என்றும் சோகத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறது.

மற்ற பிரச்சனைகள் குறித்தும் நீதிமன்றம் இதே மாதிரி செயல்படுமானால், உரிமைகள் குறித்தும், தேசப் பாதுகாப்பு குறித்தும், அடிப்படைச் சுதந்திரங்கள் முதலானவை குறித்தும், அரசாங்கத்தரப்பில் முன்மொழிபவைகளைக் கிட்டத்தட்ட மறுத்தால், பின்னர் மனுதாரர்களுக்கு அர்த்தமுள்ளவிதத்தில் நிவாரணம் எதுவும் கிடைக்காது. அது அரசாங்கத்திற்கு அளித்துள்ள இரு “கட்டளைகளுக்கு”, அவற்றை நிறைவேற்றுவதற்காகக் கால நிர்ணயம் எதையும் நீதிமன்றம் ஏற்படுத்திடவில்லை.  அரசாங்கம் நீதிமன்றம் பிறப்பித்த கட்டளைக்குக் “கீழ்ப்படிந்திட” அற்ப அளவில் முயற்சிகளை எடுக்கக்கூடிய  விதத்தில் போதுமான அளவிற்கு தெளிவற்ற விதத்திலேயே அமைந்திருக்கிறது. உண்மையில், நீதிமன்றத்தின் இத்தகைய விளைபயனற்ற கட்டளையின் காரணமாக, அரசாங்கம், ஜம்மு-காஷ்மீரில் பெயரளவில் ஒருசில இணைய தளங்களுக்கு மட்டும் தொடர்ந்து சேவை செய்திட அனுமதி அளித்துவிட்டு, அங்கே இணையதள சேவை நிறுத்தப்பட்டிருந்த ஆணைகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டது என்ற முறையில் கூற முடியும்.   

இணையதள சேவை துண்டிப்பு தொடர்பாக அரசாங்கத்தின் நடவடிக்கைகுறித்து அரசமைப்புச்சட்டத்திற்கான நீதிமன்றம் தன்னுடைய ரிட் அதிகாரவரம்பெல்லைக்கு உட்பட்டு, ஆய்வு செய்வதற்குப் பதிலாக, அரசாங்கத்திற்கு உதவிகரமானமுறையில் ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் அளிக்கக்கூடிய ஒரு கொள்கை ஆவணமாகவே தீர்ப்பு அமைந்திருக்கிறது என்றே கடுமையான முறையில் பார்க்க வேண்டும்.  இத்தகையதொரு தீர்ப்பு, மிகவும் பரிமாணத்துடன் கூடிய ஒரு பிரச்சனைமீது இத்தகைய முறையில் வந்திருக்கும் தீர்ப்பை வாசித்திடும் ஒருவர் இது அரசாங்கத்திற்கு உடந்தையாக இருக்கின்ற ஒன்று என்றோ அல்லது கோழைத்தனமான ஒன்று என்றோதான் முடிவுக்கு வருவார்.

இந்தியாவில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டிருப்பதுபோல் உலகில் வேறெந்த நாட்டிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. சமீபத்திய துண்டிப்பு ஜம்மு-காஷ்மீரில் இணையதளம் துண்டிக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. இப்போது மிகவும் வரையறுக்கப்பட்ட அளவிலேயே இங்கொன்றும் அங்கொன்றுமாக இணையதள சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.  இத்தகைய நடவடிக்கைகளுக்கான சட்டரீதியான அதிகாரம், 1974ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144ஆவது பிரிவின்கீழும் (காலனியாட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இச்சட்டப்பிரிவு அநேகமாக மாற்றப்படாமலே நீடித்துக்கொண்டிருக்கிறது), 1885ஆம் ஆண்டு டெலகிராப் சட்டத்தின் 7ஆவது பிரிவின்கீழ் இயற்றப்பட்ட 2017ஆம் ஆண்டு டெலிகாம் சேவைகள் தற்காலிக இடைநீக்கம் (பொது அவசரநிலை அல்லது பொதுப் பாதுகாப்பு) விதிகளின் கீழும் தங்களுக்கு இருப்பதாக அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. காலனிய ஆட்சிக்காலத்தில் வேரூன்றிய இவ்விரு சட்டங்களுமே இணையதள சேவை துண்டிக்கப்பட்டது பற்றி நமக்கு ஆழமான முறையில் சிலவற்றைக் கூறுகின்றன. 

இணையதளம் இன்றைய தினம் இந்திய மக்கள்தொகையில் மிகப்பெரிய அளவிலானவர்களுக்கு வாழ்வின் மிக முக்கியமானதொரு அங்கமாக இருக்கிறது. நகரக் குடியிருப்புவாசிகள் மற்றும் ஆங்கிலத்தில் பேசக்கூடியவர்களின் ஏகபோகமாக இருந்த நிலை இப்போது இல்லை. இதற்கு மிகவும் மலிவான கட்டணத்தில் தொடர்புகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், அவற்றில் பல மொழிகளின் சாராம்சங்கள் இருப்பதற்கும், நன்றி கூற வேண்டும். இதன் காரணமாக இந்தியாவில் இணையதளத்தை உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட அரை பில்லியனை எட்டியிருக்கிறது. இது சீனாவிற்கு அடுத்த இரண்டாவது இடமாகும்.

இணையத் தொடர்புகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை விரிவாகியிருப்பது, அவற்றின் மீது அரசு கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதில் பிரச்சனைகளை உருவாக்கி இருக்கிறது. இணையதளத்தைப் பெரிய அளவில் பயன்படுத்திட ஊக்குவிக்கும் அரசாங்கம், அதே சமயத்தில் அவற்றைத் துஷ்பிரயோகம் செய்பவர்களைத் தடுத்திடவோ, தண்டித்திடவோ முடியாமல் அதற்கான திறனின்றி திண்டாடுகிறது. அரசாங்கம் இணையதள சேவைகளை மக்கள் பயன்படுத்த முடியாமல் அடிக்கடி மூடுவதற்கு இரு காரணிகள் அதனை உந்தித் தள்ளுகின்றன. முதலாவதாக, இந்த மொக்கையான கருவியை காவல்துறையும், அரசு எந்திரமும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. ஏனெனில் கொந்தளிப்பான நிலைமை ஏற்படும் சமயத்தில் அவர்களுக்கு இதைத்தவிர வேறு சிறப்பான வழி எதுவும் தெரியவில்லை.  இரண்டாவதாக, பொது மக்களுக்கு எதிராக இணைய தள சேவைகளை முடக்குவது போன்று பெரிய அளவில் சட்டபூர்வமற்ற நடவடிக்கை எடுத்தாலும் அதனைத் தொடர்ந்து எந்தவிதமான விளைவுகளும் ஏற்படுவதில்லை. இணையதள சேவை முடக்கப்பட்டதன் விளைவாக ஒருவருக்கு ஏற்படும் பொருளாதார ரீதியான இழப்புக்குப் பரிகாரம் எதுவும் உடனடியாக அளிக்கப்படுவதில்லை.

அனுராதா பாசின் வழக்கு, இணைய தளங்களை மூடுவதன் மூலமாக இவ்வாறு ஏற்படும் இழப்புகளைச் சரி செய்வதற்காவது ஒரு வாய்ப்பினை அளித்திட வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்சநீதிமன்றத்தை அணுகியது. நாட்டுப் பாதுகாப்பை அல்லது சட்டம் – ஒழுங்கைச்சுற்றியுள்ள பிரச்சனைகளின் அடிப்படையிலாவது ஒருசில நடவடிக்கைகளை அது அளித்திருக்க முடியும். அதன்மூலம் கருத்துவேறுபாடுகளைத் தெரிவிக்கும் மக்கள் மீது கடும் தண்டனையைக் விதித்து தீர்ப்பளித்திருக்கலாம். எனினும், உச்சநீதிமன்றம்,  தன்னுடைய சொந்த நம்பகத்தன்மை மற்றும் நம்முடைய உரிமைகளுக்கு ஊறு விளைவிக்கும் விதத்தில், ஜார்ஜ் பெர்னார்ட் ஷா ஒருதடவை பொழிப்புரை வழங்கியிருப்பதைப்போல, ஒரு வாய்ப்பைத் தவறவிடுவதற்கு ஒரு வாய்ப்பை  அது மீண்டும் ஒருமுறை எடுத்திருக்கிறது.   

Back to Top