ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

மூடி மறைக்கப்படும் ரஃபேல் விசாரணை

ரஃபேல் குறித்து அடுத்தடுத்து வெளியாகும் உண்மைகள் பிரதமர் அலுவலகத்தின் பங்கை ஆராயக் கோருவதுடன் அரசாங்கத்தின் கூற்றுகளையும் பலவீனமாக்குகிறது.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

2019 மக்களவை பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் ரஃபேல் விவகாரம் எதிர்க்கட்சிகளை செயலூக்கம் பெறவைத்துள்ளது. ரஃபேல் ஒப்பந்தத்தில் நிலவும் முறைகேடுகளுக்கான பொறுப்பை அனில் அம்பானியும் அரசாங்கமும் ஏற்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன. மறுபுறத்தில் அரசாங்கத்தின் பிரதிநிதிப் பேச்சாளர்கள் இந்தச் சிக்கலிலிருந்து அரசாங்கத்தை விடுவிக்க எல்லா முயற்சிகளையும் எடுத்துவருகிறார்கள். ஆனால் சமீபத்தில் வெளியான உண்மைகள் இந்த சர்ச்சைக்குள் அரசாங்கத்தை மேலும் மேலும் ஆழமாக சிக்கவைப்பதுடன் அரசாங்கம் தவறிழைத்திருப்பதையும், ஊழல் நடந்திருப்பதையும் காட்டுகின்றன.

பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸால்ட் ஏவியேஷனால் தயாரிக்கப்படும் ரஃபேல் ஜெட் விமானங்களை இந்திய விமானப் படை வாங்கும் ஒப்பந்தத்தின்படி இந்த வர்த்தகத்தின் ஒரு பங்கை 2015 ஏப்ரலில் அம்பானியின் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனம் வாங்கியது. ஒப்பந்தத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்தின் முதலீட்டிற்கு கிடைத்த உடனடி லாபம் இது. இந்த ஒப்பந்தமே திடீரெனத்தான் பொதுமக்களின் பார்வைக்கு வந்தது. தான் ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டில் உலகின் முக்கியமான நாடுகளுக்கு நேசக்கரம் நீட்டும் பயணத்தில் தனது பிரான்ஸ் விஜயத்தை பிரதமர் நரேந்திர மோடி முடித்திருந்தார். இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளின் பின்னணியை மறுகட்டமைப்பு செய்வதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்று சொல்லப்பட்டது. இது “தலைவர்கள் அளவிலான விஜயம்”, “இப்போது நடந்துகொண்டிருக்கும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் பற்றிய ஆழமான விவரங்களில்” இது தலையிடாது என பிரான்ஸ் விஜயத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் எஸ். ஜெய்சங்கர் விளக்கினார்.

இதற்கு முன்னர் இருந்த அரசாங்கமானது 2007ல் தொடங்கிய சிக்கலான பேச்சுவார்த்தைகளின் முடிவில் “முன்மொழிதல்களுக்கான விண்ணப்பம்” ஒன்றின்படி தஸ்ஸால்ட்டுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன்படி 18 போர் விமானங்கள் பொருத்தமான ஆயுதங்களுடன் வடிவமைத்து தரப்படவேண்டும் என்பதுடன் மேலும் 108 போர் விமானங்களை இந்தியாவின் பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமெடெட் (எச்.ஏ.எல்) உடன் இணைந்து தயாரிக்கவேண்டும். விலை குறித்த விரிவான பேச்சுவார்த்தையானது பல சிக்கல்களை சந்தித்தது. இவ்வளவு பெரிய வர்த்தகத்தில், தொழில்நுட்ப பரிமாற்றத்தில் இத்தகைய சிக்கல்கள் எதிர்பாராதவையல்ல.

பிரான்ஸ்–இந்தியா இடையிலான ”பரந்துபட்ட பேச்சுவார்த்தையில்” இந்த சிக்கலான விவரங்கள் விவாதிக்கப்படாது என வெளிப்படையாக வெளியுறவுத்துறை செயலாளர் கூறிய இரண்டு நாட்களுக்குள் ”பறப்பதற்கு தயார்நிலையிலிருக்கும்” 36 விமானங்களை வாங்குவதற்காக “அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தம்” ஏற்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் விதிகள் “தஸ்ஸால்ட் ஏவியேஷன் தனியாக நடத்திவரும் பேச்சுவார்த்தை அறிவித்திருக்கும் விதிகளை விட சிறப்பாக இருக்கும்” என இரு நாடுகளின் கூட்டறிக்கை தெரிவித்தது.

 இந்த எண்ணிக்கைகள் எதுவும் பொருத்தமுடையவையாகத் தோன்றவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை. “தனியாக நடந்துவரும்” பேச்சுவார்த்தையின் கீழான ஒப்பந்தத்தின் பல வாக்குறுதிகளுக்கு எதிராக நேரடியாக வாங்குவதைத் தவிர்த்து வேறு எதையும் அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் தரவில்லை. 2007ல் செய்யப்பட்ட முன்மொழிதல்களுக்கான விண்ணப்பத்தின்படி 126 விமானங்கள் வாங்குவதற்கான மொத்த விலை தோராயமாக 42,000 கோடியாகும், அதாவது ஒரு விமானத்திற்கு 350 கோடிக்கு கொஞ்சம் குறைவாகும். இது நடக்காது போயிருக்கலாம். முந்தைய ஒப்பந்தத்தின்படி ஒரு விமானத்தின் விலை 715 கோடி என 2015 ஏப்ரலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியபோது பழைய ஒப்பந்தத்திற்கு பதிலாக அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.   அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின்படி விலைகள் என்ன என்பதை பாதுகாப்பு காரணங்களால் வெளியே சொல்ல முடியாது என்று முரண்டுபிடித்தபோதிலும் தன்னையும் அறியாமல் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே ஒரு விமானத்தின் விலை 670 கோடி என 2016 நவம்பரில் மக்களவையில் கூறிவிட்டார். இது 2017 பிப்ரவரியில் ஊடகங்களில் தஸ்ஸால்ட் மற்றும் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலான 1600 கோடியுடன் பெரிதும் மாறுபட்டது.

விமானங்கள் எதுவும் இன்னமும் தரப்படாத நிலையில் கால அட்டவணையின்படி விமானங்கள் விநியோகிக்கப்படுமா என்பது பற்றி வலுவான சந்தேகம் உள்ளது. இதற்கிடையில் தலைக்குனிவான விஷயங்கள் அடுக்கடுக்காக நடந்துவிட்டன. அரசாங்கத்தின் சந்தேகத்திற்குரிய பல முடிவுகளை மூடிமறைக்கும் முயற்சிகளில் பல அரசாங்க நிறுவனங்கள் மற்றும் முகமைகள் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. 2018 ஆகஸ்டில், மோடி ஆட்சியை ஆதரிப்பது எனும் பலனற்ற வேலையை விட்டுவிட்ட பிரபல அரசியல்வாதிகளான அருண் ஷோரி மற்றும் யஷ்வந்த் சின்ஹா உடன் இணைந்து குடிமை உரிமைகள் வழக்கறிஞர் பிராஷாந்த் பூஷன், ரஃபேல் ஒப்பந்த குறித்த உண்மைகளை விரிவான அறிக்கையாக வெளியிட்டுள்ளார். காலவரிசையின்படி வெளியிடப்பட்டுள்ள உண்மைகள் குழப்பத்திற்கிடமில்லாமல் அரசாங்கம் தவறிழைத்திருப்பதற்கான வாய்ப்பை சுட்டிக்காட்டுகிறது.

 மத்திய புலனாய்வுக் கழகத்தால் (மபுக) விசாரிக்கப்படவேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மனுவின் விளைவாக மபுக-வில் உள்நாட்டுப் போரே நடைபெற்று பல மூத்த அதிகாரிகள் பதவியழக்க, மாற்றல்களுக்கு உள்ளாக நேரிட்டது. இந்தப் பிரச்னையை கையிலெடுக்கையில் மபுக-த்தின் உச்ச அதிகாரி ஒருவர் அதிரடியாக நீக்கப்பட்டதை அங்கீகரித்து ஓய்வுபெற்றதற்குப் பிறகு வழங்கப்படும் பதவியை ஏற்றுக்கொள்ளும் ஆரோக்கியமற்ற போக்கை வெளிப்படுத்தினார் உச்ச நீதிமன்ற நீதிபதி. இறுதியாக, மபுக விசாரணைக்கு உத்திரவிடப்படாது என்று உச்ச் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தலைகுனிவிற்குரிய வகையில், அப்போது ஆரம்ப நிலையில்கூட இல்லாதிருந்த தலைமைத் தணிக்கை அலுவலகத்தின் விசாரணையை சார்ந்து உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

தலைமைத் தணிக்கை அலுவலகத்தின் அறிக்கை இறுதியாக சமர்பிக்கப்பட்டபோது தரம் மற்றும் விலையின் அடிப்படையில் ரஃபேல் தெரிவு செய்யப்பட்டதை அங்கீகரித்தது. ஆனால் இந்தக் கூற்று ஏற்கனவே ஊடகங்களில் வெளியான பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஆவணங்களால் பலவீனமடைந்திருந்தது. அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு ஒரு விமானத்தின் விலை 41% அதிகரித்திருந்ததை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஆவணங்கள் காட்டின. ஒப்பந்த விதிகள் குறித்த பாதுகாப்பு அமைக்க அதிகாரிகளின் குறிப்புகள் பேச்சுவார்த்தையில் இந்தியா பலவீனமாக இருந்திருப்பதை காட்டுகிறது. இதற்குக் காரணம் பிரதமர் அலுவலகத்தின் தலையீடே.

தந்திரமான செயல்களின் மூலம் அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு பற்றிய விஷயம் ஏதோ அதன் தனி விவகாரம் என்பதாக அரசாங்கம் நடந்துகொண்டது. “தேச விரோத செயல்” என்ற பழைய தந்திரத்தை அரசியல் எதிரிகளுக்கு எதிராக மீண்டும் பயன்படுத்தியது. ஆனால் ஊழலின் துர்நாற்றம் போக மறுக்கிறது.

Back to Top