ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

புள்ளிவிவரங்களுக்கு ஆபத்து?

அரசாங்கப் புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்த புள்ளியியல் நிறுவனங்களின் தன்னாட்சி மிகவும் அவசியம்.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

தேசிய புள்ளியியல் ஆணையத்தின் (என்.எஸ்.சி.) சுயேட்சை உறுப்பினர்கள் இருவரின் ராஜிநாமா, இந்தியாவின் பொது நிறுவனங்களின் தன்னாட்சி குறித்த கேள்வியை மீண்டும் ஒரு முறை முன்னுக்கு கொண்டுவந்துள்ளது. 2006ல் நிறுவப்பட்டது என்.எஸ்.சி. நம்பகத்தன்மை கொண்ட அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களை சேகரிப்பதும் அவற்றை பொதுவெளியில் வைப்பதும் இதன் நோக்கங்களாகும். உறுப்பினர்கள் ராஜிநாமா செய்தது காட்டுவதைப் போல் இந்த அடிப்படையான தேவை பூர்த்தியாகவில்லை. தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தின் (என்.எஸ்.எஸ்.ஒ) 2017 ஜூலை-2018 ஜூன் பருவத்திற்கான தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு என்.எஸ்.சி-யால் அங்கீகரிக்கப்பட்டபோதிலும் அதை வெளியிடுவதில்லை என அரசாங்கம் முடிவெடுத்தது. என்.எஸ்.சி-யுடன் நிதி ஆயோக் கலந்தாலோசிப்பதில்லை என்றும் பெரும் மதிப்பிற்குரிய புள்ளிவிவர நிறுவனத்தை அது ஒதுக்கித்தள்ளுகிறது என்றும் ராஜிநாமா செய்த உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

என்.எஸ்.சி-யின் திறனையும், தன்னாட்சியையும் நிதி ஆயோக் பலவீனப்படுத்த முயற்சிப்பதொன்றும் இது முதல்முறையல்ல. நிதி ஆயோக்கும், மத்திய புள்ளியியல் அலுவலகமும் சேர்ந்து 2011-12ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு பழைய தேதி குறிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) பற்றிய புள்ளிவிவரங்களை 2018 நவம்பரில் வெளியிட்டன. இதில் என்.எஸ்.சி. ஈடுபடுத்தப்படுவது தவிர்க்கப்பட்டுவிட்டது. இப்போதிருக்கும் அரசாங்கம் முன்னர் இருந்த அரசாங்கத்தை விட சிறப்பான வளர்ச்சியை சாதித்திருக்கிறது என்று காட்டுவதற்காக தனது துணைக்குழுவின் அறிக்கையையும் நிதி ஆயோக் தவிர்த்துவிட்டது. இந்தப் புள்ளிவிவரங்கள் என்.எஸ்.சி. வெளியிட்ட அறிக்கையில் தரப்பட்டவற்றிலிருந்து கணிசமாக வேறுபட்டுள்ளது. நிதி ஆயோக்கும் மத்திய புள்ளியியல் அலுவலகமும் அதிகாரப்பூர்வ புள்ள்விவரங்களில் மாற்றங்களை செய்திருப்பதாக துறை நிபுணர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்துள்ளனர்.

என்.எஸ்.எஸ்.ஒ. அறிக்கை வெளியாவது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் நாட்டின் வேலைவாய்ப்பு நிலவரம், அதிலும் குறிப்பாக பணமதிப்புநீக்கம் மற்றும் சரக்கும் மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு, என்ன என்பதைப் பற்றிய நம்பகத்தன்மை கொண்ட புள்ளிவிவரங்களை வழங்குவதே இந்த அறிக்கையின் நோக்கம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, வீடுவீடாக செய்யப்படும் இந்தக் கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்படுவதை அரசாங்கம் ஏன் நிறுத்திவைத்தது? அரசாங்கம் சொல்லிக்கொள்வதற்கு மாறாக நாட்டில் வேலைவாய்ப்பு சூழல் மிக மோசமாக இருப்பதை இந்த அறிக்கை காட்டுவதே அறிக்கை வெளியிடப்படுவது நிறுத்திவைக்கப்பட்டதற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஊடகங்களில் கசியவிடப்பட்ட என்.எஸ்.எஸ்.ஒ. புள்ளிவிவரங்கள் இதை உறுதிபடுத்துகின்றன. நாட்டில் வேலைவாய்ப்புச் சுழல் பெரும் நெருக்கடியில் இருப்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. கசியவிடப்பட்ட அறிக்கையின்படி, 2017-18ல், வழக்கமான நிலையின்படி (கணக்கெடுக்கப்படும் அந்த குறிப்பிட்ட ஓராண்டில் ஆட்களின் செயல்பாடு நிலையின் அடிப்படையிலானது) நாட்டில் வேலையின்மையின் சதவீதமானது 6.1%, அதே நேரத்தில் நடப்பிலுள்ள வாரத்தின் வேலையின்மையானது 8.9% என்ற அபாயகரமான அளவில் இருந்தது. இது நகர்ப்புறங்களில் முறையே 7.8% மற்றும் 9.6% எனவும், கிராமப்புறங்களில் 5.3% மற்றும் 8.5% ஆகும். மேலும், இளைஞர்கள் (15 முதல் 29 வயதிற்குட்பட்டவர்கள்) மத்தியில் வேலையின்மை கணிசமான அளவிற்கு அதிகமாக இருக்கிறது. ஆனால், தொழிலாளர் சக்தி பங்கேற்பு வீதமானது 36.9% என்ற அளவிற்கு குறைவாக இருக்கிறது. இது நிறைய பேர், குறிப்பாக பெண்கள் வேலைகளிலிருந்து விலகிவிடுவதை குறிக்கிறது. அதிக சதவீதத்திலான வேலையின்மை மற்றும் தொழிலாளர் சக்தி பங்கேற்பு குறைவது என்பது இந்தியா போன்ற உழைக்கும் வயதினரை பெருமளவில் கொண்டுள்ள வளரும் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல.

  வருகின்ற மக்களவை தேர்தலை மனதிற்கொண்டு, புள்ளிவிவரங்கள் இப்போதைக்கு இன்னும் வரைவு நிலையில்தான் இருக்கின்றன என்று கூறி, ராஜிநாமா செய்த உறுப்பினர்கள் வெளிப்படுத்திய கவலைகளை குறைத்துக்காட்ட முயற்சிக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம். என்.எஸ்.எஸ்.ஒ.வின் புள்ளிவிவரங்கள் இன்னமும் வரைவு நிலையில் இருக்கக்கூடும். ஆனால் அறிக்கை வெளியானால் அது வேலையின்மை நெருக்கடி பெரிதாகிக் கொண்டிருப்பதை வெட்டவெளிச்சமாக்கும் என்பதில் சந்தேகமில்லை. நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் தேஜகூ அரசாங்கம் புதிய வேலைகளை உருவாக்கியிருப்பதாக கூறிவருவதற்கு எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுக்க இந்த அறிக்கை உதவும். 2014ல் தேஜகூ அளித்த தேர்தல் வாக்குறுதியான 1 கோடி வேலைகளை உருவாக்குவோம் என்பதை நாம் மறக்கக்கூடாது. கடந்த 45 ஆண்டுகளில் வேலையின்மையின் வீதம் உச்சத்தை தொட்டிருப்பதை புள்ளிவிவரங்களை வெளியிட்டால் அம்பலமாகும். புள்ளிவிவர உண்மைகளை வெளியிடுவது தனக்கே ஆபத்தாக முடியும் என்பதை மத்திய அரசாங்கம் அறிந்தே இருக்கிறது. அதிலும் தேர்தல் வருகின்ற ஆண்டில் அது அரசாங்கத்திற்கு பேரழிவாக இருக்கும்.

வேலையின்மை குறித்த அறிக்கையும் புள்ளிவிவரங்களும் நல்ல அரசியல் மற்றும் பொருளாதார பகுப்பாய்விற்கு பல படிப்பினைகளைக் கொண்டுள்ளன. இத்தகைய புள்ளிவிவர தகவல்களைக் கொண்டு அரசாங்கமானது பொதுமக்களின் நன்மைக்கான கொள்கைகளை போதுமான தரவுகளின் அடிப்படையில் வகுக்க முடியும். இது முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தங்களது பொருளாதார நடவடிக்கைகளை திட்டமிட உதவும். எனினும், வழக்கமான நடைமுறைகளை தவிர்ப்பது மற்றும் என்.எஸ்.சி-யின் முடிவுகளை மீறுவதன் மூலம் புள்ளியியல் நிறுவனத்தின் தன்னாட்சியை நிதி ஆயோக் புறந்தள்ளியிருக்கிறது. அவ்வாறு செய்ததன் மூலம் அரசாங்கப் புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மையை அது எதிர்மறையாக பாதித்திருக்கிறது.

Back to Top