ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

உயிர்கள் மலிவாகிப் போயின, வர்த்தகம் கிராக்கியாகிப் போனது

இந்தியாவின் வர்த்தக நகரங்களில் “வர்த்தகம்” பெருக ஏழை, புலம்பெயர்ந்து வந்த ஏழைத் தொழிலாளர்கள் தங்கள் உயிரை விலையாகக் கொடுக்கின்றனர்

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

இந்திய நகரங்கள், மக்களின் உயிருக்குப் பாதுகாப்பு மற்றும் இதர அம்சங்கள் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டிய இடங்கள் என்று கருதப்படும் மருத்துவமனைகள் உட்பட, இந்திய நகரங்கள் தற்போது பயங்கரமான தீ விபத்துக்களைச் சந்தித்து வருகின்றன. ஆடம்பரமான உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் மற்றும் சிறிய அளவிலான ஓட்டல்கள் முதலானவை அங்கே தங்கள் ஜீவனத்திற்காக வேலைசெய்து வந்த உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் அழிவையும் சேதத்தையும் ஏற்படுத்தும் விதத்தில் மிகவும் பயங்கரமான தீ விபத்துக்கள் நடைபெறும் இடங்களாக மாறியிருக்கின்றன. இப்பட்டியல் மிகவும் நீளமாகும். ஆனால், விரைவான நகரமயமாக்கலை விரும்புகிறவர்களும் அதனைக் கொண்டாடுபவர்களும் அதற்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதைப்பற்றிக் கவலைப்படாது, அவற்றைத் தள்ளுபடி செய்துவிடுகிறார்கள். உண்மையில், “வர்த்தகம் புரிவதை எளிமைப்படுத்தல்” (“ease of doing business”) என்பது, இவற்றையெல்லாம் மீறும் ஒரு நெறிமுறையாகவே மாறியிருக்கிறது. தொழிலாளர்களும் தங்களுக்கு வேலை கிடைத்திருக்கிறதே என்கிற நன்றியுணர்வுடன், தாங்கள் வாழும் சூழ்நிலைகள் குறித்து கவலைப் படுவதில்லை. வர்த்தக உரிமையாளர்களுக்கு வர்த்தகம் புரிவதில், அவர்களுக்குத் தொழிலாளர்களுக்கான சட்டங்களுடன் அவர்களைப் பிணைத்து  எவ்விதமான ‘வில்லங்கத்தையும்” ஏற்படுத்தக்கூடாது என்கிற சிந்தனை வந்திருக்கிறது. ஏனெனில் அவ்வாறு செய்தால் தொழிலாளர்கள் வேலையில்லாமல் இழப்புக்கு உரியவர்களாகிவிடுவார்களாம்.

இந்தியாவில் மாநகரங்களிலும், நகரங்களிலும் வசிக்கும் ஏழை மற்றும் தொழிலாளர்கள் எப்படி இவ்வளவு இக்கட்டான சூழ்நிலைகளிலும் உயிர்வாழ, வேலை செய்திட மற்றும் பயணித்திடக்கூடிய திறமையைப் பெற்றிருக்கிறார்கள் என்று அடிக்கடி புகழ்ந்து பாராட்டப்படுவது, நகைமுரணாகும். அவர்களின்  நிலைமைக்குத்தக்கபடி, தங்களை தகவமைத்துக்கொள்ளும் “நெகிழ்திறம்”, மும்பை மற்றும் தில்லி போன்ற மாநகரங்களின் துடிப்பினைக் காட்டுவதாக அடிக்கடிப் பாராட்டப்படுகிறது. இது ஒரு பயங்கரமான சிந்தனையாகும்: துடிப்புமிக்க மாநகரங்கள் வளர்ச்சியின் மையங்களாகவும், வேலைவாய்ப்புகளின் ஆதாரங்களாகவும் விளங்குகிறது. 2019 டிசம்பர் 8 அன்று தில்லியில் ஆனஜ் மண்டி என்னுமிடத்தில் தீ விபத்தின் காரணமாக மூச்சுவிடமுடியாமல் 43 தொழிலாளர்கள் பலியாகியிருப்பதற்குக் காரணமான இந்த அமைப்புமுறையைக் கொண்டாட முடியுமா? எனினும், முன்னணிக் கேள்வி என்னவெனில், இந்தத் தொழிலாளர்களுக்கு, அதாவது ஏழைத் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களுக்கு, தங்கள் பாதுகாப்பு குறித்தோ அல்லது அடிப்படை வசதிகள் குறித்தோகூட எந்த சிந்தனை இல்லை.  அநேகமாக நாள் முழுவதும் உழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடிய,  இத்தகைய அமைப்பின் ஓர் அங்கமாக இல்லாமல் வேறேதேனும் வேலையைத் தேடுவதற்கான வாய்ப்பு இருந்ததா என்பது சந்தேகம்.  இத்துயர சம்பவத்தில் உயிர்நீத்தவர்கள் அநேகமாக உத்தரப்பிரதேசத்திலிருந்தும், பீகாரிலிருந்தும் புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களாவார்கள். அவர்கள் அந்தத் தொழிற்சாலையிலேயே தங்கி உழைத்துக் கொண்டிருந்தார்கள். அத்தொழிற்சாலைக்கான பைகள், குல்லாய்கள் மற்றும் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்து அளித்துக் கொண்டிருந்தார்கள். இந்தத் தொழில்பிரிவு நாட்டின் தலைநகரில் மிகவும் நெருக்கமான குடியிருப்புப் பகுதியில்  அமைந்திருந்தது.

இந்தியாவில் நகர மையங்களில் உள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கும், புலம் பெயர்ந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்குமான வாய்ப்பு வளங்களும், எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அவற்றைத் தாங்கிக்கொள்ளும் மனவுறுதியும் வித்தியாசமான அர்த்தங்களில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதாவது, அவர்களின் பணியிடங்கள் வர்த்தக நிறுவனங்கள் உள்ள இடங்களில் இருக்கின்றன. ஆயினும், மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் அபாயகரமான கட்டிடங்களில் அமைந்திருக்கின்றன. வேலையிழப்பு அச்சத்தின் காரணமாக அவர்கள் சாத்தியமேயில்லாத மணி நேரத்திற்கு வேலை செய்கிறார்கள். இவை அனைத்தும் சேர்ந்து அதிகார வர்க்கத்தினரின் பொறுப்பின்மை மற்றும் பாதுகாப்பு விதிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகள் குறித்து அலட்சியப் போக்கு ஆகியவை தவிர்க்கவியலாத அளவிற்குப் பின்னிப்பிணைந்திருப்பதைக் காட்டுகின்றன. அனைத்துச் சட்டங்களும் ஒழுங்குமுறைகளும் தொழிற்சாலை உரிமையாளர்களாலும், மேலாளர்களாலும் உதாசீனப்படுத்தப்படுவதுபோன்றே தோன்றுகிறது. உயிர் மலிவாகிப்போனது, அதிலும் புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களின் உயிர் மேலும் மலிவானதாக மாறிப்போயிருக்கிறது. சட்டங்கள் மிகவும் தொந்தரவு மிக்கதாக இருக்கின்றன, எனவே சிறிய வர்த்தகர்கள் அவற்றை அமல்படுத்துவது தங்களுக்கு சாத்தியமில்லாதவைகளாக இருக்கின்றன என்கிறார்கள். மறுபக்கத்தில், இலாபத்தால் “கொழிக்கும்” நகரங்களோ, வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்கும், விதிகளைப் பின்பற்றுவதற்கும் இடையிலான ஒப்பிடவியலாமையைக் காண்கின்றன.

உண்மையில், இந்த அம்சங்கள் ஒவ்வொன்றுமே ஆனஜ் மண்டி “தொழிற்சாலை”யில் ஏற்பட்ட தீ விபத்தில் விளக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்படாத விதத்தில் மிகவும் விரைவாக அமைக்கப்படும் நகரமயமாக்கலுக்கும், மாநகரங்களின் அரசியல் பொருளாதாரத்திற்கும் ஏழை மக்கள் விலைகொடுக்கிறார்கள். அவர்களின் குறைந்த கூலி உழைப்பு இத்தொழில்பிரிவுகளின் நிறுவனச் செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்கின்றன. அடிப்படையில் இதன் பொருள் இயற்கை மாசு ஏற்படுத்தாத வீட்டு உபயோகத் தொழிற்சாலைகள்தான் குடியிருப்பு பகுதிகளில் இயங்கிட முடியும். ஆனால், அதிகாரவர்க்கம் கண்ணை மூடிக்கொண்டிருப்பதன் மூலம், இந்தியாவில் உள்ள ஏராளமான தொழிலாளர் நலச் சட்டங்கள் வெறும் தாள்களாக மட்டுமே இருந்து வருகின்றன. ஊடகங்கள் வெளியிட்டுள்ள மிகவும் அபத்தமான அம்சம் என்ன வெனில், ஆனஜ் மண்டி தொழில்பிரிவு மீது தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்நலத் துறைகள் ஆய்வு செய்ய முடியாது என்றும், ஏனெனில் அவ்வாறு செய்தால் அது “சட்டவிரோதமாகும்” என்றும் கூறின. ஒரு மூத்த அரசு அதிகாரி இதுபற்றிக் கூறுகையில், தங்களிடம் பதிவு செய்து வைத்திருக்கிற தொழில்பிரிவுகளை மட்டுமே தாங்கள் ஆய்வு செய்ய முடியும் என்கிறார்.

ஆனஜ் மண்டி கட்டிடம் ஒரு குடியிருப்புப் பகுதியில் இருந்தது. அங்கே உள்ள இடங்கள் பல்வகைப் பயன்பாட்டுக்கும் அனுமதிக்கப்பட்டு வந்ததாக, ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், இவ்வாறு தரைத் தளத்தில் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இந்த வழக்கில், ஒட்டுமொத்த கட்டிடமும் வர்த்தக நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப்பட்டது. மாநகராட்சி அல்லது மாநில அதிகாரி என எந்தவிதமான அதிகாரியிடமிருந்தும் உரிமம் எதுவும் பெறாமலேயே, அது இயங்கிக் கொண்டிருந்தது. அது,  தீ அணைப்புத் துறையினரிடமிருந்து ‘தடையின்மைச் சான்றிதழ்’ பெற்றிருக்கவில்லை. அந்தக் கட்டிடத்திற்கான திட்டமும் உள்ளாட்சி அமைப்பினால் அனுமதி வழங்கப்பட்டு கட்டப்பட்டதல்ல. அங்கே எளிதில் தீப்பற்றக்கூடிய விதத்தில், தாள்கள், நெகிழிப்பொருட்கள், ரெக்சின் தோல் பொருள்கள் என அனைத்துவிதமான எரிதகு பொருள்களும், எரிதகா பொருள்களும் ஒரே இடத்தில் கவனக்குறைவானவிதத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அத்துடனேயே தொழிலாளர்களும் அங்கேயே தங்கி, வாழ்ந்து உறங்கி வந்தனர். 

டிசம்பர் 8 அன்று தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் பாதிப்புக்கு ஆளானவர்களுக்குப் பண இழப்பீடு அறிவிப்பதிலும், ஒருவரை ஒருவர் குறைகூறுவதிலும் போட்டி போட்டனர். பொதுப் பேரிடர் மற்றும் விபத்துகள் நடந்ததற்குப்பின்னர் இவ்வாறு கூறுவது என்பது பிரிக்கமுடியாத ஒரு பகுதியாகிவிட்டது. இதே கட்சிகள் மற்றும் நபர்கள்தான் சேரிகள் மற்றும் அதிகாரபூர்வமற்ற கட்டமைப்புகளை முறைப்படுத்துவதற்காக, குறிப்பாக தேர்தல் காலங்களில்,  ஆரவாரிக்கின்றனர். எனினும், தீ அணைப்பு வாகனங்கள் மற்றும் தளவாடங்கள் போன்றவற்றை வாங்குவதன் மூலம் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு உரிய கவனம் செலுத்துவதில்லை.

ஆனஜ் மண்டி விபத்து போன்றவற்றில் பலியானவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தருவதற்கான நேரமோ நாட்டமோ ஊடகங்களுக்கோ அல்லது சிவில் சமூகத்திற்கோ கிடையாது.   தில்லியில் மிகவும் மோசமானமுறையில் நடைபெற்ற மற்றொரு தீ விபத்தில், உப்ஹார் சினிமா தியேட்டர் தீ விபத்துக்குள்ளான சோகத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர் ஒரு நீண்ட நெடிய போராட்டத்தை, 18 ஆண்டு காலமாக சட்டரீதியான போராட்டத்தை, தைர்யத்துடனும், மன உறுதியுடனும் நடத்தி வந்தனர். அதன் முடிவு, அவர்களின்  வேதனையையும் பொறுமையையும் கேலி செய்யும் விதத்தில் அமைந்தது.  ஆனஜ் மண்டி தீ விபத்தில் பலியானவர்களும் ஒருசில நாட்களில் மறக்கப்படுவார்கள்.

Back to Top