மற்றுமொரு “நிறுவனரீதியான கொலை”
உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் சமூகப் பாகுபாட்டை அந் நிறுவனங்கள் கண்டுகொள்ளாததன் விளைவே பாயல் தத்வியின் மரணம்
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
அட்டவணைபடுத்தப்பட்ட சாதியினர் (எஸ்.சி) மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் (எஸ்.டி) மாணவர்களுக்கு எதிராக மோசமான பாகுபாடு மற்றும் சாதிய மனப்பான்மை மருத்துவக் கல்லூரிகளில் நிலவுவதை 26 வயதான பாயல் தத்வியின் மரணம் மீண்டும் ஒரு முறை அம்பலப்படுத்தியிருக்கிறது. இவர் மேற்படிப்பு படித்தபடி மும்பையின் பிஒய்எல் நாயர் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்துவந்தார். தத்வி எஸ்.டி. பிரிவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர். தொப்பிவாலா தேசிய மருத்துவக் கல்லூரியில் (டி.என்.எம்) மேற்படிப்பு படித்தபடி மருத்துவர்களாக இருக்கும், பிஒய்எல் நாயர் மருத்துவமனையில் பணிபுரியும் மூன்று மூத்த மாணவிகளால் பெரும் துன்புறுத்தல்களுக்கு இவர் ஆளானதாக சொல்லப்படுகிறது. இது அவரது தற்கொலைக்கு காரணமாக அமைந்தது. அவர் “சாதிய” வசைகளுக்கும், நியாயமற்ற வகையில் கண்டிக்கப்பட்ட தற்கும் எதிராக அவரது குடும்பத்தினர் கல்லூரி நிர்வாகத்திடம் முறைப்படி புகார்கள் அளித்தும் எந்தப் பலனும் இல்லை.
தத்வியின் மரணத்திற்குப் பிறகே கல்வி நிறுவனத்தின் நிர்வாக எந்திரம் நடவடிக்கையில் இறங்கியது. அந்த மூன்று மருத்துவர்கள், துறையின் தலைவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். ராகிங்கிற்கு எதிரான குழு தனது விசாரணையைத் தொடங்கியது. தத்வி ”மிகத் தீவிரமான துன்புறுத்தலுக்கு” ஆளாக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் எஸ்.டி சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காகவும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் மூலம் கல்லூரியில் சேரும் வாய்ப்பு கிடைத்தவர் என்ற காரணத்திற்காகவும் மோசமான பாகுபாட்டிற்கும், வசைகளுக்கும் ஆளாக்கப்படிருக்கிறார் என்பதையும் அவரது மரணத்திற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு விசாரணைக் குழு கண்டறிந்தது. அவரது மரணத்தைத் தொடர்ந்து எஸ்.சி/எஸ்.டி சமூகங்களைச் சேர்ந்த பல மருத்துவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் மருத்துவக் கல்லூரிகளில் எதிர்கொண்ட பாகுபாடுகள் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
இவ்வளவு நடந்த பிறகும் மருத்துவத் துறையில் சாதிய அடிப்படையிலான பாகுபாடுகள் இல்லவே இல்லை என்ற கருத்தில் பிடிவாதமாக இருக்கிறது அல்லது சாதிய அடிப்படையிலான பாகுபாடுகள் இருந்தால் அதை தான் கண்டுகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறது இந்திய மருத்துவக் கழகம். மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பிற உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் கடும் அழுத்தமான சூழலில் உயர் சாதி மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் சாதிய மனப்பான்மையும், தாங்கள் நியாயமற்று நடத்தப்படுகிறோம் என்ற கடுங்கோபம் வெளிப்படுவது மிக சாதாரணமாக இருக்கிறது. இந்தியாவின் முதன்மையான மருத்துவக் கல்லூரியான எய்ம்ஸ்-ல் சாதிய பாகுபாடு எவ்வளவு பரவலாக இருக்கிறது, அது எவ்வாறு பல வடிவங்களில் நடக்கிறது என்பதை 2007ஆம் ஆண்டின் தோரட் குழு அறிக்கை காட்டியது. அந்த அறிக்கை வெளியாகி 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஆகின்றன, ஆனால் தத்வியின் நிகழ்வு நமக்கு காட்டுவது என்னவெனில் நாம் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையும் கல்வி நிறுவனங்களில் நிகழும் சாதிய பாகுபாடுகளை அந் நிறுவனங்கள் புறக்கணிக்கும் அவலம் தொடர்வதையும்தான்.
இங்கு நிறுவனரீதியாக நிலவும் பாராமுகத்தன்மை இந் நிறுவனங்கள் இயங்கும் விதம், கட்டமைப்பு மற்றும் அதிகாரம் குவிந்திருப்பதானது அங்குள்ள மூத்த மாணவர்களை ராகிங்கில் ஈடுபட, இளைய மாணவர்களை அவமானகரமான செயல்களை செய்ய வைக்க தூண்டுவதாக இருப்பதில் பிரதிபலிக்கிறது. மாணவர்கள் இத்தகைய துன்புறுத்தல்களுக்கு ஆளாவதற்கான சாத்தியம் என்பது மிக சாதாரணமான, வழக்கமான ஒரு விஷயமாக பார்க்கப்படுவதால் இந்த நிறுவனங்களில் ராகிங் கண்டிக்கப்படுவதுகூட இல்லை. இங்கு நிலவும் அதிகார கட்டமைப்பு மனித நடத்தையை அரித்து அழித்துவிடும் சிந்தனையையும், சூழலையையும் உருவாக்கி, நீடித்திருக்கச் செய்கின்றன என்பதை இது காட்டுகிறது. 2013லிருந்து 2017 வரையிலான காலகட்டத்தில் பல்கலைக்கழக மானிய குழுவிற்கு (யுஜிசி) ராகிங் தொடர்பாக 3,022 புகார்கள் வந்துள்ளன. ஆனால் ஏராளமான ராகிங் செய்கைகள் புகார் செய்யப்படுவதேயில்லை அல்லது வெளியுலகின் பார்வைக்கு வருவதேயில்லை. மூத்த மாணவர்களால் ராகிங் செய்யப்படும் மாணவர்களில் 84.3% பேர் பல்வேறு காரணங்களால் புகார் செய்வதேயில்லை என யுஜிசி அறிக்கையே கூறுகிறது. புகார் செய்யாதிருப்பதற்கான காரணங்களுள் முதன்மையானது புகார் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பதுடன் கல்லூரி வளாகத்தில் புறக்கணிப்பிற்கும், மூத்த மாணவர்களிடம் அடிபடுவதற்கும் வாய்ப்பு அதிகம் என்பதே.
மேலும், தாங்கள் எஸ்.சி/எஸ்.டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இடஒதுக்கீட்டின் மூலம் கல்லூரியில் இடம் கிடைத்தவர்கள் என்பது தெரிந்துவிடக்கூடும் என்ற காரணத்தாலும், அதிலும் குறிப்பாக உயர் சாதி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் காணப்படும் கசப்புணர்வாலும் எஸ்.சி/எஸ்.டி மாணவர்கள் புகார் செய்வதில்லை. தத்வியும் அவரது பெற்றோர்களும் பல முறை கல்லூரி நிர்வாகத்திடம் புகார்கள் அளித்தும், நடவடிக்கை எடுப்பது ஒருபுறமிருக்கட்டும், புகார்கள் வந்ததாகக்கூட நிர்வாகம் காட்டிக்கொள்ளவில்லை. சொல்லப்போனால் கடந்த ஒன்றறை ஆண்டுகளில் டி.என்.எம். கல்லூரியில் உள்ள ராகிங்கிற்கு எதிரான குழு ஒரு முறை கூட கூடவில்லை என்று சொல்லப்படுகிறது. புகார் அளித்த பிறகு ராகிங் இன்னும் தீவிரமானதாக தத்வியின் குடும்பம் கூறுகிறது. கல்வி நிறுவனங்களால் புகார்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படாத மற்றும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் எஸ்.சி/எஸ்.டி மாணவர்கள் புகார்கள் அளிப்பதற்கு மேலும் தயங்குகிறார்கள். பலரும் வேதனைகளை அமைதியாக சகித்துக்கொள்கிறார்கள், கல்லூரியை விட்டு வெளியேறிவிடுகிறார்கள், அல்லது சிலர் தீவிரத்தின் எல்லைக்குச் சென்று தங்களது உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். உயர் கல்வியில் ஏற்கனவே குறைவாக இருக்கும் எஸ்.சி/எஸ்.டி பிரதிநிதித்துவம் இதனால் மேலும் குறைகிறது. எஸ்.சி/எஸ்.டி சமூகங்களிலிருந்து போதுமான அளவிற்கு பேராசிரியர்களும், நிர்வாகிகளும் நிரப்பப்பட்டிருக்கிற கல்லூரிகள் மற்றும் சாதிய பாகுபாடுகள் குறித்து உணர்வுரீதியாக புரிதலைக் கொண்டிருக்கும் கல்லூரிகள் இல்லாத நிலையில், சாதிய பாகுபாடு மற்றும் ராகிங் குறித்த புகார்கள் கண்டுகொள்ளப்படாத நிலையில் தத்வி விஷயத்தில் நடந்தது ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தபடியே இருக்கிறது.
ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்த தலித் மாணவர் ரோஹித் வெமுலா மரணம் நினைவுக்கு வருகிறது. அவரது தற்கொலை “நிறுவனரீதியான கொலை” என்று வர்ணிக்கப்பட்டது. விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் “ரோஹித் சட்டம்” இயற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கைக்கு வெமுலா மரணமும், அதையடுத்து நிகழ்ந்த நிகழ்வுகளும் இட்டுச்சென்றன. ஆனால் நிறுவனங்களும் அவற்றிலுள்ள மனிதர்களும் சமூக பாகுபாட்டின் ஆபத்துகளை உணர்ந்தால் மட்டுமே இத்தகைய ஒரு சட்டம் பலனுள்ளதாக இருக்கும். “தீங்கில்லாத” ராகிங் தொடங்கி “அதீத துன்புறுத்தல்” வரை அனைத்துமே வன்முறையே. இவை மனித உரிமை மீறல்கள்; விளிம்புநிலை மக்களின் கண்ணியமான வாழ்விற்கான, கல்வி கற்பதற்கான உரிமையை இவை மறுக்கின்றன. இதை உணர்வதன் மூலம் மட்டுமே தத்வி, வெமுலா மற்றும் மெளனமாக வேதனைகளை அனுபவித்துவரும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை நோக்கி நாம் நகர முடியும்.