ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

”இலட்சியத்” தொழிலாளியை உருவாக்குதல்

பெண்கள் தங்களை சமமான, தகுதியான தொழிலாளர்களாக அடையாளப்படுத்திக்கொள்வtதை உற்பத்தித்திறன் குறித்த பாலின அடிப்படையிலான கருதுகோள்கள் கட்டுப்படுத்துகின்றன.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

பத்திரிகைகளில் வெளியான செய்திகளின்படி, மகாராஷ்டிராவில் உள்ள பீட் மாவட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் கரும்பு வெட்டும் வேலைக்கு பெண்களை எடுப்பதில்லை. ஏனெனில் மாதவிலக்காகும் பெண்கள் கரும்பு வெட்டுவதிலிருந்து அவ்வப்போது ஓய்வெடுத்துக்கொள்வார்கள், அது வேலையை பாதிக்கும் என்று ஒப்பந்ததாரர்கள் கருதுகின்றனர். எந்த பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு தினக் கூலித் தொழிலாளி வேலைக்கு நடுவில் ஓய்வெடுத்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படுவார் என்பதே உண்மை. இத்தகைய கடும் தடைகளைக் கொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் பருவ கால வேலைகளை பெரிதும் சார்ந்திருப்பதன் காரணமாக பீட் மாவட்டத்திலுள்ள  பெண்களில் ஏறக்குறைய பாதிப்பேர் கருப்பை அகற்றும் அறுவைசிகிச்சை செய்துகொண்டுள்ளனர். ”தாங்களாக” முன்வந்து கருப்பையை அகற்றினார்கள் என்று ஒப்பந்ததாரர்கள் கூறுகையில் இந்த அறுவை சிகிச்சைக்குத் தேவையான பணத்தை கடனாகத் தந்து அதை தங்களது கூலியிலிருந்து ஒப்பந்ததாரர்கள் கழித்துக்கொள்கிறார்கள் என்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட பெண்கள் கூறுகிறார்கள்.

 இந்தியாவில் அமைப்புசாரா துறையில் பெருமளவிற்கு பெண்களால் செய்யப்படும் வேலைகள் பலவும் குறைத்து மதிப்பிடப்படுவதும் அவற்றிற்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் பீட் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் வேலை நமக்கு தெரிவிப்பது என்னவெனில், பெண்கள் சமமானவர்களாக அல்லது திறன்பெற்ற தொழிலாளர்களாக கருதப்படுவது ஒரு பக்கமிருக்கட்டும் அவர்கள் இந்த வேலைக்காக தங்களது உடலுறுப்பு ஒன்றையே இழக்க வேண்டியிருக்கிறது என்பதைத்தான். அறுவைசிகிச்சையினால் ஏற்படும் உடல்நலக்குறைவுகளை ஏற்க அவர்கள் பலவந்தப்படுத்தப்படுவதுடன் பெண்ணாக இருப்பதால் ஏற்படும் இந்த செலவையும் அவர்களே ஏற்கவேண்டியதாக இருக்கிறது. பெண்களின் வேலை குறைத்து மதிப்பிடப்படுவதுடன் சுத்தம் மற்றும் அசுத்தம் போன்ற சாதிய, ஆணாதிக்க கருத்துக்களின் விளைவாக சில வேலைகளிலிருந்து, குறிப்பாக உணவு பதப்படுத்துதல், பட்டுநூல் தயாரிப்பு, ஆடைத் தயாரிப்பு போன்ற வேலைகளிலிருந்து விலக்கிவைக்கப்படுகிறார்கள்.  உழைக்கும் மனிதர்களைப் பற்றி முதலாளிகள் கொஞ்சமேனும் கருத்தில் கொள்கிறார்களா? அப்படி கருத்தில் கொண்டால், “முழுமையான தொழிலாளி” என்று கருதப்படுவதற்கு உடல் தகுதி பெற்றவர் யார்?

பெரும்பாலான முதலாளிகளின் அல்லது ஒப்பந்ததாரர்களின் தர்க்கமானது ”அதிகபட்ச பயன்” கிடைக்கும் வகையில் உழைப்பு சக்தியை பயன்படுத்துவது என்ற கொள்கையின் அடிப்படையிலானது. இந்தக் கொள்கைக்கு எதிரான அல்லது அதிகபட்ச லாபத்தை தடுக்கும் எதுவும் தவிர்க்கப்படுகிறது அல்லது குயுக்தியான முறையில் கையாளப்படுகிறது. மிகக் கடுமையான வேலையின்போது இடையில் சற்று ஓய்வெடுப்பது என்பது மனித செயற்பாட்டிற்கு மையமானது. ஆனால் இதுவும் மூலாதாரங்களை “வீணடிப்பது” என்றே உரிமையாளர்களால் கருதப்படுகிறது. இவ்வாறு கருதுவது பெரும்பாலும் வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் விஷயங்களில் தெளிவாக வெளிப்படுகிறது. தாங்கள் கொடுக்கும் பணத்திற்கான ஒவ்வொரு மணித்துளியும் தங்களுக்குரியது என்று கூலி தருபவர்கள் நினைக்கிறார்கள். தொழிலாளர் உறவுகளானது அரசியல் பொருளாதார வித்தியாசத்தின் அடிப்படையிலானது, குறிப்பாக சாதி மற்றும் பாலினத்தின் அடிப்படையிலானது, அது எந்த மாதிரியான வேலை, யாருக்கு கிடைக்கிறது, என்ன நிபந்தனைகளின் கீழ் கிடைக்கிறது என்பனவற்றை தீர்மானிக்கிறது என ஆக்ஸ்பாம் அமைப்பு நடத்திய ஆய்வின் அறிக்கையான மைண்ட் த கேப் கூறுகிறது.

லாபத்தையும் உற்பத்தித்திறனையும் வெறித்தனமாக பின்தொடர்வது “பாலின வேறுபாடில்லாத” பணியிடங்களை உருவாக்குவதாகத் தெரிகிறது. ஆனால், யதார்த்தத்தில் பணியிடங்கள் ஆண்மைத்தன்மை கொண்டதாகவும் சமூகரீதியான படிநிலைத்தன்மை கொண்டதாகவும் இருக்கின்றன. இந்த இடங்களுக்குள் நுழையும் பெண்கள் தொடர்ந்து தங்களது உடல் வலிமையை, மீட்சித்தன்மையை காட்டிக்கொண்டேயிருக்கவேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறார்கள், தங்கள் பாலினத்தையும் உடல் தேவைகளையும் அவர்கள் மறுக்க வேண்டியிருக்கிறது. பல்வேறு தொழிற்துறைகளிலும் ஒரு கண்ணியமான தொழிலாளி என்ற தகுதி பெறுவதற்கு பெண்கள் தங்களது உற்பத்தித்திறனை நிரூபிப்பது மற்றும் தங்கள் உரிமைகளை பயன்படுத்துவது என்ற இரண்டில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். வேலை தரும் உரிமையாளர்கள் தங்கள் பங்கிற்கு, மகப்பேறு விடுப்பு, குழந்தை காப்பகம், கழிப்பறை வசதிகள், ஓய்வறை வசதிகள் ஆகியவற்றை செய்துதருவது தங்களது “அதிகபட்ச” உற்பத்தி நடவடிக்கைக்கு பாதகமானது என்று பார்க்கிறார்கள். உற்பத்தியையும் லாபத்தையும் அதிகபட்சமாக அதிகரிப்பது மட்டுமே அவர்களது கவலை என்பதுடன் மிக அடிப்படையான மனித உரிமைகள் கூட ஏதோ சலுகைகள் போல் பார்க்கப்படுகின்றன. தங்களுக்கான “சிறப்புச் சலுகைகள்” எதையும் கோராத வரை உரிமையாளர்கள் பெண்களை வரவேற்கிறார்கள். ஒரு பெண் “போதுமான அளவிற்கு ஆணாக இருந்தால்”தான் அவர் ஒரு தொழிலாளியாக இருக்க முடியும் என்று அவர்கள் உணர்த்துகிறார்கள். உரிமையாளர்களிடம் இத்தகைய ஒரு தர்க்கம் இருப்பதை காட்டுமிராண்டித்தனம் என்றே புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில், அதிகபட்சம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற தனது தர்க்கத்தின் மூலம் அது மனிதத் தன்மையற்றதாவதுடன் பெண் உழைப்பை அந்நியப்படுத்துகிறது.

 பெண்ணின் உடலானது பல விதமாக கையாளப்படும் நிலைக்கு கீழிறங்கி அது தொழிற்சாலையின் ஒரு கருவியாகிறது. கரும்பு வெட்டும் பெண்ணின் தொழிலாளி என்ற அடையாளம் அவர் தனது கருப்பையை அகற்றிய பிறகே நிலைநிறுத்தப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பு தனது குடும்பத்திற்கான குழந்தைகளைப் பெற்று, அவற்றிற்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தாக வேண்டும். தங்களது பெண்மைத்தன்மையை ஏற்பதிலோ அல்லது கைவிடுவதிலோ அவரது சொந்த முடிவுகள் எதுவுமில்லை. அவர்களது வீடுகளில் அது தந்தை/சகோதரன்/கணவன்/மகன் கைகளில் இருக்கின்றன, வேலை செய்யுமிடத்தில் உரிமையாளரின் கைகளில் இருக்கிறது. இந்தச் சூழலில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு அதிகரிப்பதால் அதிக லாபம் ஏதும் பெண்களுக்கில்லை. ஏனெனில் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்கள் வேலை செய்யுமிடங்களிலும் பாகுபாடு, பாலியல் அடிப்படையிலான பாகுபாடு, பாலியல் தொந்திரவு, கண்ணுக்குத் தெரியாத தடைகள் ஆகியவற்றால் மீண்டும் நிகழும் அல்லது மேலும் மோசமாகும்.

பீட் மாவட்டத்தில் நடந்துவரும் அக்கிரமங்களை தேசிய பெண்கள் ஆணையம் உணர்ந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் குறுகிய பார்வை கொண்ட அதிகாரவர்க்கத்தை கடிந்துகொள்வதற்கு அப்பால் எதையும் ஆணையம் செய்யப்போவதில்லை. விவசாயத்தில் தொழிலாளர்கள் தேவைப்படுவது குறைந்திருப்பதால் வேலையின்மை அதிகரித்துள்ளதுடன் விளிம்புநிலையிலுள்ள பெண்கள் மிகவும் சுரண்டலான, மனிதத்தன்மையற்ற சூழல் கொண்ட வேலைகள் ஏற்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். வேலை செய்யுமிடங்களில் கட்டமைப்புரீதியான மாற்றம் இல்லாத மற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு இல்லாத நிலையில் பெண் தொழிலாளர்களுக்கு எதிரான பாகுபாடுகளும் அக்கிரமங்களும் அதிகரிக்கவே செய்யும். பெண்களும் ஆண்களுக்கு சமமான தொழிலாளர்களாக ஆக இன்னும் எத்தனை பீட் விகாரங்கள் வெளிச்சத்திற்கு வரவேண்டும்?

Back to Top