ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

தேர்தல் பத்திரங்களுக்கு அப்பால்

உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த தேர்தல் சீர்திருத்தங்கள் “அநாமதேய நன்கொடையாளர்களைத்” தாண்டி பார்க்கவேண்டும்.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

இந்தியாவில் தேர்தல்களுக்கு நிதிகள் தருவது யார்? இந்தியத் தேர்தல் ஆணையம் அளித்துள்ள கடந்த அறுபது ஆண்டு கால தேர்தல் செலவின மதிப்பீடுகளின்படி தேர்தல் செலவானது 1952க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு தொகுதிக்கு ஆகும் செலவு 274 மடங்கு, அதாவது 2.6 லட்சத்திலிருந்து 7.138 கோடியாக அதிகரித்துள்ளது. இது இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்குப் பின்னால் அவற்றிற்கு தாராளமாக நிதியளிக்கும் புதிரான புரவலர்கள் இருப்பதை எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி காட்டுகிறது. பீகார், உத்திர பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களில் உள்ள 2,577 அரசியல்வாதிகளிடையே பெர்க்லியைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய சமீத்திய கணிப்பின்படி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களின் வருமானத்தின் மூலம் என்ன என்பது புதிரானதாக இருக்கிறது (நாடாளுமன்ற உறுப்பினர்களின் 44% வருமானம், சட்டமன்ற உறுப்பினர்களின் 47% இப்படிப்பட்டதாக இருக்கிறது). இவர்கள் பதவியில் இருக்கிறபோது இவர்களது வருமானம் உச்சத்தை தொடுகிறது. அரசியல்ரீதியான நிதியளிப்பு இந்தியாவில் ஒரு பொருளாதாரமாகவே இருப்பதை இது காட்டுகிறது. அரசே ரகசியமாக நிதியளிப்பதை ஊக்குவிக்கும் நிலை உள்ளது. ஆகவே, மிகவும் வெளிப்படையானது என்று தம்பட்டமடித்து தேசிய ஜனநாயக கூட்டணி கொண்டுவந்துள்ள தேர்தல் பத்திர திட்டம் இந்த ரகசிய விவகாரத்தை மாற்றிவிடப்போவதில்லை.

இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தங்களின் வரலாறு கலவையானது. தேர்தல் மற்றும் நிதி விஷயங்களில் சீர்திருத்தங்களை அமல்படுத்துவது அல்லது ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை பின்பற்றி ஒழுகுவது என்பது நடக்கவில்லை. கட்டுப்பாடுகளை குறைப்பதற்கு, தந்திரமாக மீறுவதற்கல்ல,  இந்த தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு சட்ட பாதுகாப்பை வழங்கியுள்ளன. இதன் ஆக மோசமான அம்சம் என்னவெனில் ”புரவலர்” மற்றும் “பயனாளர்” தங்களது கருப்புப் பண வருமானத்தை சட்டபூர்வமாக்கிக்கொள்ள தேர்தல் முறையே ஒரு கருவியாக பயன்படுகிறது என்பதுதான். உதாரணமாக, 2016 நிதிச் சட்டத்திற்கு திருத்தம் கொண்டுவந்து “அயல்நாடு” நிறுவனங்களுக்கான வரையறையை தளர்த்தியதன் மூலம் போலி நிறுவனங்களிடமிருந்தும் சட்டபூர்வமான நிதி பெறுவதற்கான வழியை தேஜகூ திறந்தது. அயல்நாடு பங்களிப்பு (கட்டுப்பாடு) சட்டம், 2010க்கான திருத்தம் இந்தியத் தேர்தல்களுக்கான வெளிநாட்டு நிதி மீதிருந்த தடையை நீக்கிவிட்டதுடன் இந்தத் திருத்தம் முன் தேதியிலிருந்து அமலுக்கு வருவதால் கடந்த 42 ஆண்டுளில் கட்சிகள் (முக்கியமாக பாரதீய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ்) வெளிநாடுகளிலிருந்து ”சட்டத்திற்கு புறம்பாக” பெற்ற தேர்தல் நன்கொடைகள் தொடர்பாக நீதிமன்றங்களிலிருந்த வழக்குகளிலிருந்து விடுதலை பெற்றுவிட்டன (இரண்டு கட்சிகளையுமே இந்த விஷயத்தில் குற்றமிழைத்தவர்கள் என்று 2014ல் டெல்லி உயர் நீதிமன்றம் கூறியிருந்தது). மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 மற்றும் வருமான வரி சட்டம், 1961-த்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் அநாமதேயமான நன்கொடைகளை, 20,000க்கு குறைவான தொகை என்றாலும், மீண்டும் சட்டபூர்வமாக நிலைநாட்டியது. ஆனாலும் ஒரு நன்கொடையாளர் இந்த அளவிற்கான நன்கொடையை அதிகபட்சமாக எத்தனை முறை செய்யலாம் என்பதைப் பற்றிய தெளிவு இல்லை. கருப்புப் பணத்தின் மீதான தனது “துல்லியத் தாக்குதலை” பீற்றிக்கொள்ளும் ஓர் அரசாங்கத்தினால் சொல்லப்பட்டிருப்வை இந்த விதிகள் என்பது முரண்நகைதான்.

அரசியல் நிதி விஷயத்தில் வெளிப்படைத்தன்மையை தேர்தல் பத்திரங்கள் முற்றிலுமாக அழித்துவிடும் என இந்தியத் தேர்தல் ஆணையம் சரியாகவே சுட்டிக்காட்டிய அதே நேரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதுபோவது பற்றிய அதன் கவலையானது போட்டியிடும் அனைத்து கட்சிகளுக்கும் “சம அளவிலான வாய்ப்பு” கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தினால்தானே தவிர அனைவருக்கும் வாக்குரிமை என்ற “உயரிய நோக்கை” காப்பாற்றுவதற்காக அல்ல. ஆனால் தேர்தலானது கடுமையான போட்டி கொண்ட விஷயம் என்றாகிவிட்ட நிலையில் அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது நடக்கிற செயல் அல்ல. இத்தகைய கடுமையான போட்டி கொண்ட தேர்தல்களில் ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவதில் பணத்தின் பங்கு மிக முக்கியமானதாகிறது. பணம் தருவது (வேட்பாளராக நிற்பதற்கோ அல்லது வாக்குகளுக்காகவோ) என்ற விஷ வட்டம், அரசியல் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மற்றும் வாக்காளர்கள் பிளவுற்றிருப்பது மக்களாட்சியின் பிரதிநித்துவ பண்பையே பலவீனப்படுத்துகின்றன. இந்தப் பின்னணியில், ஒட்டுமொத்த தேர்தல் நடவடிக்கை வெளிப்படைத்தன்மையுடையதாக இருப்பதை உறுதி செய்வதில் தேர்தல் ஆணையம் அல்லது அதைப் போன்ற ஒழுங்குமுறைபடுத்தும் நிறுவனங்களின் கடப்பாடு என்பது போட்டியிடும் கட்சிகளின் அரசியல் உறுதியைப் போலவே இருக்கவேண்டும்.

அறரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட தேர்தல் நடைமுறைக்கு பணம் ஒரு சீர்குலைவாக அமையுமெனில் ஒரு வேட்பாளருக்கான தேர்தல் செலவை 40 லட்சத்திலிருந்து 70 லட்சமான ஏன் தேர்தல் ஆணையம் அதிகரிக்கிறது? அதிலும் பலம்வாய்ந்த அரசியல் கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் முன்னர் விதிக்கப்பட்டிருந்த செலவின வரம்பில் 15% முதல் 20% வரையே செலவிட்டிருந்தாக கணக்கு காட்டியிருக்கும் நிலையில் ஏன் வரம்பை அதிகரிக்க வேண்டும்? ஒரு தேர்தலில் போட்டியிட ஒரு வேட்பாளருக்கு எவ்வளவு பணம் ”போதும்” என்பதை எப்படி தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கிறது? நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட குறைவான பணத்தை செலவழித்ததாக வேட்பாளர்கள் அறிவித்திருப்பினும் செலவின் வரம்பை தேர்தல் ஆணையம் அதிகரித்திருப்பதன் மூலம் வேட்பாளர்கள் வேண்டுமென்றே குறைத்துக் காட்டியிருக்கிறார்கள் என்பதை ஆணையம் மெளனமாக ஏற்றுக்கொள்வதையும், இவற்றை தடுக்க முடியாத அதன் நிலையை ஒப்புக்கொள்வதையும் காட்டவில்லையா?

ஏராளமான குழுக்களாலும், அவற்றின் பரிந்துரைகளாலும் தேர்தல் செலவையும், சட்டத்திற்கு புறம்பாக தரப்படும் நிதியையும் கட்டுப்படுத்த முடியாதது அரசியல் நிதி விஷயத்தில் கட்டுப்பாடற்ற முறையை அரசே வழிநடத்துவதை காட்டுகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் நன்கொடையாளர்களுக்கிடையேயான அடையாளத் தொடர்பு அரசுக் கொள்கைகள் எந்த அளவிற்கு வாக்காளர்களை மையமாகக் கொண்டிருக்கின்றன என்பதை காட்டுகின்றன என்றபோதிலும் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு அமைப்புகளான தேர்தல் ஆணையமாகட்டும் அல்லது உச்ச நீதிமன்றமாகட்டும், சில நன்கொடையாளர்களின் நலன்களைப் பற்றி சிந்திக்கின்றனவே தவிர 85 கோடி வாக்காளர்கள்களை பற்றி சிந்திக்கவில்லை. தொலைநோக்குப் பார்வையற்ற இந்த அரசியல் பழிசுமத்தும் விளையாட்டில் தேர்தல் செலவினங்கள் குறித்த நடத்தை விதிகள், நடத்தை விதிகள் கூறும் காலக்கெடுவிற்கு அப்பாலும் கண்காணித்தல், தேர்தல் முறையின் கட்டமைப்பு போன்ற அடிப்படையான பிரச்னைகள் தவறவிடப்பட்டுவிட்டன. தேர்தல் சீர்திருத்தங்களில் இவை உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

Back to Top