ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

பாலின நீதி குறித்த தேஜகூவின் கருத்து

முத்தலாக் மசோதாவை அரசாங்கம் நிறைவேற்றுவதை ஆதரிப்பது தவறு.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2018ஐ மக்களைவையில் நிறைவேற்றிய வீரசாகசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (தேஜகூ) அரசாங்கம் திருப்தியாக இருக்கிறது. பலரது கண்களுக்கு இது முற்போக்கான ஒன்றாக தோன்றலாம். ஆனால், பார்த்தமாத்திரத்திற்கு அப்படித் தெரிகிறது என்பதால் அதை ஆதரிப்பது தவறாகிவிடும். நாடாளுமன்றத்தின் நிலைக் குழுவிற்கு இந்த மசோதாவை அனுப்ப அரசாங்கம் மறுத்ததானது, இந்தச் மசோதாவுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் விவாதத்தில் ஈடுபடுத்தும் மக்களாட்சியின் வழிமுறைக்கே எதிரானதாகும். “12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சி செய்பவர்களுக்கு மரண தண்டனை என்ற மசோதாவை நிறைவேற்றும் முன்னர் அரசாங்கம் வன்புணர்ச்சியாளர்களை கலந்தாலோசிக்கவில்லை” என்ற சட்ட அமைச்சரின் உவமானம் மிகவும் விநோதமானது. குற்றம்சாட்டப்படுகிறவர் மீது கிரிமினல் வழக்கு போடப்படும் என்று முத்தலாக் மசோதாவில கூறப்படுவது மிகவும் பிரச்னைக்குரிய விஷயம். திருமணம் என்பது குடிமை ஒப்பந்தம் என்பதால் அதை மீறுபவர் மீது குடிமை நடவடிக்கைதான் எடுக்கவேண்டும், ஆனால் மசோதாவோ அதை பிடி ஆணையின்றி கைது செய்வதற்குரிய, பிணையில் விடுவிக்க முடியாத குற்றமாக ஆக்குகிறது.

     2018ல் உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பின் விளைவாகத்தான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது என்ற அரசாங்கத்தின் வாதம் குறைபாடானது. இந்த விவகாரம் தனிநபர் சட்டம் மற்றும் மத நடைமுறைகள் தொடர்பானது என்பதால் முத்தலாக் நடைமுறை செல்லாது என்று அறிவிக்கும் சட்டத்தை கொண்டுவர அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது சிறுபான்மை தீர்ப்பே. முஸ்லிம் பெண்களுக்கான நீதி குறித்த கவலையால் அரசாங்கம் உந்தப்பட்டிருந்தால், தலாக்கை சட்டரீதியாக முறைப்படுத்தி திருமண முறிவிற்கான நியாயமான நடைமுறை உருவாக்குவதற்காக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரால் கொண்டுவரப்பட்ட தனி நபர் மசோதாவை கருத்தில்கொண்டிருக்கலாம். பல பெண்கள் குழுக்கள், குறிப்பாக உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மனுவில் தலையிட்ட பெண்கள் குழுக்கள் பரந்துபட்ட ஆலோசனை நடத்தப்படவேண்டும் என்று கோரியபோதிலும் நீதி குறித்த அக்கறையை விட முத்தலாக் விஷயத்தை கிரிமினம் குற்றமாக்குவதிலேயே குறியாய் இருந்து மசோதவை அரசாங்கம் நிறைவேற்றியது.

     முத்தலாக் நடைமுறை அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானது, இஸ்லாமுக்குரியதல்ல என்று பெரும்பான்மை தீர்ப்பளித்த பிறகும் முத்தலாக் நடைமுறையை கிரிமினல் குற்றமாக்கவேண்டிய அவசியம் என்ன? எதிர்க்கட்சி எம்.பிக்கள் மற்றும் முஸ்லிம் பெண்கள் மத்தியில் பணியாற்றும் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருப்பதைப்போல் மூன்றாண்டு சிறைத்தண்டனை பற்றி குறிப்பிடும் மசோதா பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அப்பெண்ணின் குடும்பம் வாழ்க்கை நடத்துவதற்கு தேவையான உதவி பற்றி எதுவும் பேசவில்லை. முஸ்லிம் பெண்களின் நலனை பாதுகாப்பதற்கான நோக்கத்தை இது தோற்கடித்துவிடுகிறது. முத்தலாக்கை கிரிமினல் குற்றமாக்குதற்கு பதிலாக அதை குடும்ப வன்முறையின் கீழ் கொண்டுவந்து குடும்ப வன்முறை சட்டம் 2005 கீழ் தண்டனைக்குரியதாக ஆக்கியிருக்கலாம். பெண்கள் கைவிடப்படுவது என்ற எல்லா மதத்தினரிடமும் பரவலாக காணப்படும் பிரச்னையை அணுக இது பல வழிகளை திறந்திருக்கும். ஒரு முஸ்லிம் ஆணின் முத்தலாக்கை கிரிமினல் குற்றமாக்கும் இந்த மசோதா ஒரு முஸ்லிம் அல்லாத ஆண் தனது மனைவியை கைவிடும் விஷயத்தில் எந்த தண்டனை பற்றியும் பேசவில்லை. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற பொதுவான கொள்கைக்கு எதிராக இது இருப்பதுடன் முஸ்லிம் அல்லாத பெண்கள் விஷயத்தில் நியாயமற்று நடந்துகொள்கிறது.

     பாலின நீதியை உறுதிபடுத்துவதுதான் நோக்கம் என்றால் இந்த விஷயங்கள் அரசாங்கத்தால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். ஆளும் கட்சி மற்றும் அதன் தாய் அமைப்பான சங் பரிவாரத்தின் சித்தாந்தம் மற்றும் செயல்பாடுகள் எப்போதுமே ஆணாதிக்க மதிப்பீடுகளை உயர்த்திப்பிடிப்பதாக இருப்பதால் இந்த மசோதாவின் நோக்கம் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. 1951ல் பி.ஆர். அம்பேத்கரால் வரையப்பெற்ற இந்து தொகுப்புச் சட்ட மசோதாவிற்கு இந்துத்துவா சக்திகளிடமிருந்தும் சங் பரிவாரத்திடமிருந்தும் மிகக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. தனி நபர் சட்டத்தில் சீர்திருத்தம் செய்வதை எதிர்க்கும் எம்.எஸ். கோல்வால்கரின் நிலைபாட்டை ஒட்டிய எதிர்ப்பு இது. முத்தலாக் மசோதா பாலின நீதி தொடர்பானது, ஆனால் சபரிமலை விஷயம் பாரம்பரியம் தொடர்பானது என்று பிரதமர் நரேந்திர மோடி வாதிடுவது என்பது இந்து பாரம்பரியங்கள் பாலின நீதியை மீறினாலும் அவை பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறுவதாகும். பெண்களின் உரிமைகளுக்காக இத்தகைய அரசியல் சக்திகள் பாடுபடுவது என்பது மிக பலவீனமான வாதம். முஸ்லிம் பெண்கள் மீது இந்த சக்திகள் நிகழ்த்திய வன்முறை, அவர்களுக்கு அளித்த வேதனை, அவர்களை கண்ணியமற்று நடத்தியது ஆகியவற்றை கணக்கில்கொண்டால் அவர்களது பாதுகாவலர்களாக இவர்கள் தங்களைக் காட்டிக்கொள்வது என்பது பொருளற்றது. 2002 குஜராத் கலவரத்தின்போது முஸ்லிம் பெண்கள் மீது மிகக் கொடூரமான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. இது போதாதென்று, இந்த வன்முறைகளை நிகழ்த்தியவர்களை இந்துத்துவா சக்திகள் அன்றிருந்த மாநில அரசாங்கத்தின் உதவியுடன் காப்பாற்றின, அவர்களை போற்றின.

     முஸ்லிம் சமூகத்தின் சீர்த்திருத்தவாதிகளாக தங்களை இன்றைய அரசாங்கமும், ஆளும் கட்சியும் முன்நிறுத்துகையில் இவர்களது பின்னணியும் நோக்கங்களும் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன. கும்பல் வன்முறைக்கும் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் பாதுகாப்பின்மையையும் அச்சத்தையும் உருவாக்க அவர்கள் குறிவைக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தந்துகொண்டே அது முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக நடந்துகொள்வதைப்போல் காட்டிக்கொள்கிறது. சிறுபான்மை சமூகங்களை பாதுகாப்பின்மை சூழந்திருக்கும் வேலையில் சமூக சீர்திருத்த முயற்சிகளுக்கு வரவேற்பிருக்காது. ஆனால், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பின்மை உணர்வை பயன்படுத்தி எந்தவொரு சமூக சீர்திருத்தத்தையும் தடுக்க முயலும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் முயற்சிகள் எதிர்க்கப்படவேண்டும். சமூகத்திற்கு வெளியிலிருந்து செய்யப்படும் சீர்திருத்த முற்சிகள் நிறுத்திவைக்கப்படவேண்டும். சீர்திருத்தத்தை தொடங்குவதற்கு அற ஆற்றல் முக்கியமான தகுதி எனில் இன்றைய அரசாங்கத்திற்கும், ஆளும் கட்சிக்கும் அந்தத் தகுதி இல்லை.

Back to Top