ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

விவசாயிகளும் அவர்களது நாடும்

கோடிக்கணக்கணக்கான விவசாயிகளுக்குத் தேவை பொறுப்புணர்வு கொண்ட ஒரு நாடு; அவர்கள் நாட்டை விட்டு ஓடிவிடுவதாகவோ அல்லது கைவிடுவதாகவோ இல்லை.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

டெல்லி நோக்கி செல்லும் அணிவகுப்பிற்காக (டெல்லி சலோ) கடந்த சில மாதங்களாகவே விவசாயிகளின் அமைப்புகள் சுமார் 200 ஒன்றுகூடி உருவாகியுள்ள அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவானது விவசாயிகளை அணிதிரட்டிக்கொண்டிருக்கிறது. நவம்பர் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் டெல்லியை அடைவது என அவர்கள் திட்டமிடுகின்றனர். நாட்டில் நிலவும் வேளாண்மை நெருக்கடியைப் பற்றி இந்த நாடாளுமன்றத் தொடரில் விவாதிக்கவைக்க வேண்டும் என்பதே இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கியமான திட்டம். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகள், குறைந்தபட்ச ஆதரவு விலைக் (குஆவி) கொள்கையை அமல்படுத்துவது மற்றும் ஒழுங்குபடுத்துவது, வறட்சிப் பகுதிகள் என்று வகைப்படுத்துவதில் காணப்படும் அரசாங்கத்தின் தவறான முறைகள், வங்கிகளில் கடன் வாங்கியுள்ள விவசாயிகள்பால் வங்கிகள் கொண்டுள்ள பாகுபாடான அணுகுமுறை ஆகியவை குறித்து விவாதிக்க இந்த நாடாளுமன்றத் தொடர் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகின்றனர். விவசாயிகளின் அனுபவம் காட்டுவதைப்போல் கடன்களை வசூலிக்க வங்கிகள் கடுமையான, அவமானப்படுத்தும் வகையிலான வழிமுறைகளை கைக்கொள்கின்றன. அதே நேரத்தில் இந்த வங்கிகளில் சில பல ஆயிரம் கோடி கடன்களை செலுத்தாதிருக்கும் குற்றத்திற்கு ஆளாகியிருக்கும் நபர்களை மிகவும் பெருந்தன்மையுடன் நடத்துகின்றன. வங்கிகளின் இந்த வகையான பாகுபாடான அணுகுமுறையின் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக் (குஆவி) கொள்கை தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதில் விவசாயிகள் சந்தேகம் கொண்டுள்ளனர். பெரும் லாபம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டுள்ளவர்களால் கட்டுப்படுத்தப்படும் சந்தையின் எதிர்பாரா மாற்றங்களிலிருந்து குஆவி தங்களை விடுவிக்குமா என்பதைப் பற்றி விவசாயிகள் நீண்ட காலமாக கேட்கின்றனர். அதேபோல், பணப் பயிர்கள் மீது அதிகரித்துவரும் கார்ப்போரேட் காப்பீட்டு நிறுவனங்களின் கட்டுப்பாடானது விவசாயிகளுக்கு அல்லாமல் பெரும் நிறுவனங்களுக்கே பலன் தரும் என்று விவசாயிகள் நம்புவதற்கு சரியான காரணங்கள் இருக்கின்றன. தொலையுணர்தல் முறையின் துல்லியம் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். அம்முறை நீர்த்தேக்கங்கள் குறித்து துல்லியமான விவரத்தை தருவதில்லை என்கின்றனர். இந்தப் பிரச்னைகள் எல்லாம் சேர்ந்து வேளாண்மை நெருக்கடியை உருவாக்கியிருக்கின்றன. மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதில் இந்தப் பேரழிவு பிரதிபலிக்கிறது.

இந்தப் பின்னணியில் வேளாண் நெருக்கடியை  பொதுமக்களின் மையமான கவனத்திற்கு கொண்டுவர விவசாயிகளின் அணிதிரட்டல் முயற்சிக்கிறது. இந்த நெருக்கடியை தீர்ப்பதில் துளியும் அக்கறை கொண்டிராத இந்த அரசாங்கத்தின் மீது மக்களாட்சிக்கே உரிய உரையாடல் ஒன்றை திணிப்பதே இந்த அணிதிரட்டலின் நோக்கம். இந்தியப் பொருளாதாரம் பற்றிய அதிகாரப்பூர்வமான கணக்கீடுகளில் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு ‘’கெளரவத் தோற்றம்’’ மட்டுமே தரப்படுகின்றன, அல்லது முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. மிகப் பெரும் பணம் செலவிடப்பட்டு பிரம்மாண்டமாக, கவர்ச்சியாக அச்சு மற்றும் எலெக்ட்ரானிக் ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் விவசாயிகளின் தற்கொலைகளை கேலி செய்கின்றன.

பிரச்னையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசாங்கம் ஏன் தயாராக இல்லை என்பதற்கான காரணத்தை கண்டுபிடிப்பதொன்றும் கடினமானதல்ல. நெருக்கடியை கையாளுவதில் தான் தோல்வியுற்றுவிட்டதை அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டிவரும். சொல்லப்போனால், வேளாண் நெருக்கடியை கண்டுகொள்ளாததுடன் கார்ப்போரேட் நிறுவனங்களின் நலன்களுக்கு சாதகமாக நடந்துகொண்டு நெருக்கடியை மேலும் மோசமாக்கிவிட்டதற்கு தான் பொறுப்பாக்கப்படுவோம் என்று அது அஞ்சுகிறது.

     இந்த அணிதிரட்டல் பல வழிகளில் முக்கியமானது. ஒன்று, சரத் ஜோஷியின் தலைமையிலான ஷெட்காரி சங்கடனா போன்ற இதற்கு முன்னர் நடத்தப்பட்ட விவசாயிகள் அணிதிரட்டலிலிருந்து இது வேறுபட்டதாக இருக்கும் என்று இந்த அணிதிரட்டல் உறுதியளிக்கிறது. ஜோஷி கட்டமைத்த இந்தியா மற்றும் பாரத் என்ற இரண்டு எதிரெதிர் துருவங்களின் அடிப்படையில் விவசாயிகளை அணிதிரட்ட ஷெட்காரி சங்கடனா முயன்றது. இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழும் உழவர், உழைப்பாளர்களின் தியாகங்கள் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் நுகர்வு கலாச்சாரத்திற்காக மானியமாக வழங்கப்படுகின்றன என்று ஜோஷி வாதிட்டார். அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அணிதிரட்டல் ஜோஷி கட்டமைக்கும் இந்த இரு துருவ தர்க்கத்திற்கு அப்பால் சென்று நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் ஆதரவையும் பெறும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மாணவர்கள், கலைஞர்கள், திரைப்படத் துறையினர், தகவல்-தொழில்நுட்பத் துறையினர், வங்கித் துறையினர் என பல துறைகளைச் சேர்ந்தவர்களாக இதன் ஆதரவாளர்கள் இருப்பதன் காரணமாக இந்த அணிதிரட்டல் பல வர்க்கங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. 2018 மார்ச் மாதம் நாசிக்கிலிருந்து மும்பைக்கு நடந்த விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகரமான அணிவகுப்பில் இந்த பல வர்க்கங்களின் ஆதரவு வெளிப்படையாகத் தெரிந்தது.

இரண்டு, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நடத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் தரும் விவசாயிகளின் முயற்சிகளில் ஒரு நேர்மை இருக்கிறது. தனது வாதங்களில் (அப்படி ஏதாவது இருந்தால்) அவை உண்மைக்கு நெருக்கமாக இருக்கின்றனவா அல்லது பொய்க்கு நெருக்கமாக இருக்கின்றனவா என்பதை நிரூபிக்க அரசாங்கத்திற்கு நியாயமான வாய்ப்பு ஒன்றை வழங்க விவசாயிகள் தயராக உள்ளனர். மூன்று, இந்த நெருக்கடி விவாதிக்கப்படுவதற்கான அறிவுபுல பின்னணியை வழங்குவதிலும் விவசாயிகள் முன்கை எடுத்துள்ளனர்.

கடைசியாக, ஓர் அடையாளபூர்வமான அர்த்தத்தில் மட்டுமே இந்த நாடு விவசாயிகளுக்குச் சொந்தமானது ஆனால் உண்மையில் அது கார்ப்போரேட் நிறுவனங்களுக்கு சொந்தமானது என்பதை அரசாங்கத்திற்கும் இந்த நாட்டு மக்களுக்கும் சொல்ல நினைக்கிறார்கள் விவசாயிகள். வேளாண்மையின் மூலாதாரங்களான நிலம், நீர், காடுகள், மற்றும் கனிமங்கள் மேலும் மேலும் தனியார்மயமாக்கப்படுவதிலிருந்தே இந்த நாடு கார்ப்போரேட் நிறுவனங்களுக்கு  சொந்தமானதென்பது தெரிகிறது. அரசாங்கத்தால் உதவப்படும் இந்த தனியார் நிறுவனங்கள் நிதி, விதைகள், உரங்கள், சந்தை போன்றவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் விவசாயத்தின் மீதான தங்களது பிடியை இறுக்குகின்றன. விவசாயிகளும் பொருட்படுத்தக்கவர்களே என்பதை ஆளும் வர்க்கங்களுக்கு காட்டுவதை நோக்கமாகக் கொண்டது இந்த அணிவகுப்பு. விவசாயிகளை தற்கொலைக்குத் உந்தித்தள்ளும் ஒரு நாட்டில் அதன் கண்ணியத்தை கூட்டும் வகையில் தங்களது வாழ்வை வடிவமைப்பதில் தாங்களும் சம அளவில் முக்கியத்துவம் உடையவர்கள் என்பதைக் காட்டும் முயற்சி இந்த அணிவகுப்பு. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்திற்கான அவர்களது கோரிக்கை வேளாண் நெருக்கடியை தீர்ப்பதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கத் தவறிவிட்டதைக் காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கும்பட்சத்தில் நெருக்கடிக்கான பொறுப்பு இந்த அரசாங்கத்தின் மீதே சுமத்தப்படும்.

Back to Top