ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

அரசாங்கத்திற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையில் மோதல்

பிரிவு 7-ஐ அரசாங்கம் பயன்படுத்தியிருப்பது அரசியல் முகமை விஷயத்தில் நவீன தாராளவாத முகாமில் பிளவு உண்டாகியிருப்பதை காட்டுகிறது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

தன்னாட்சியுடன் இயங்குவது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கும் இன்றைய அரசாங்கத்திற்கும் இடையில் நடக்கும் பலப்பரீட்சை இந்த நாட்டில் அசாதாரணமான விஷயமல்ல. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சட்டம், 1934-ன் 7ஆம் பிரிவை பயன்படுத்தி, வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு கடன் அளித்தது, பலவீனமான 11 பொதுத் துறை வங்கிகளில் மூன்றிற்கு பிராம்ட் கரக்டிவ் ஆக்‌ஷன்ஸ் (பிசிஏ) விதியை தளர்த்தியது முதற்கொண்டு ரிசர்வ் வங்கியின் மொத்த இருப்பு மற்றும் உபரியை அரசுக்கு மாற்றுவது தொடர்பான ஆர்பிஐ-ன் கணக்கீட்டு சூத்திரங்கள் வரை பலவற்றை குறித்து ரிசர்வ் வங்கியின் கருத்துக்களை கேட்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் ரிசர்வ் வங்கிக்கு பிரச்னைகள் தருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் சமீபத்திய பூசல் முன்னெப்போதும் இருந்திராத அளவில் பெரிதாகிவிட்டது. நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் 7ஆம் பிரிவைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியில் தலையிடுவதாகவும் அதன் ஆளுனரின் அதிகாரத்தை பலவீனப்படுத்துவதாகவும் ரிசர்வ் வங்கிக்குள் பெரும் கூக்குரல் எழுந்துள்ளது.

     பிரிவு 7 பற்றி ஏன் இந்த அமளி? பொது நலன் குறித்த விஷயங்களில் ஆர்பிஐ-யை அவ்வப்போது வழிநடத்திச்செல்லும் (ஆர்பிஐ ஆளுனருடன் கலந்தாலோசித்து என்றபோதிலும்) அதிகாரத்தை இந்த விதி மத்திய அரசாங்கத்திற்கு அளிக்கிறது என்ற நிலையில் வங்கி நிறுவனங்களின் செயல்திறன் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கவலை அதிகரித்துவருகிறது. அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு என்ற பெயரில் விலக்கத்தகுந்தது, தகாதது என்ற வித்தியாசமில்லாமல் கடனளிக்க ஊக்குவித்ததாகட்டும் அல்லது பெரும் வர்த்தக/கார்ப்போரேட் நிறுவனங்களுக்கு திரும்பிவரப்போகாத கடன்களை அளிக்க ஊக்குவித்ததாகட்டும் (இவை மொத்த வாராக் கடன்களில் நான்கில் மூன்று பகுதி) அரசாங்கத்தின் தலையீடானது பொதுத் துறை வங்கிகளின் சொத்து விஷயங்களை எப்படி எதிர்மறையாக பாதித்திருக்கிறது என்பது வங்கித் துறை சந்தித்துக்கொண்டிருக்கும் நெருக்கடி காட்டுகிறது. ஆனால் இவ்வாறு செய்வதற்கு அரசுக்கு பிரிவு 7 எப்போதுமே தேவைப்பட்டதில்லை. ஒரு பங்குதாரருக்கு உரிய தனது உரிமைகளை பயன்படுத்தி மூத்த வங்கி அதிகாரிகளின் பொறுப்புகளுக்கு, ஆர்பிஐ-ன் விதிமுறை சட்டகத்தை மீறி அரசாங்கத்திற்கு சாதகமாக செயல்படக்கூடிய அதிகாரிகளை நியமனம் செய்வதில் அரசாங்கம் செல்வாக்கு செலுத்த முடியும். 2019 தேர்தல்கள் வரவுள்ள நிலையில் பொதுப் பணத்தை பிரம்மாண்டமான அளவிற்கு தவறாக மேலாண்மை செய்ததாக விமர்சனத்தை எதிர்கொண்டுள்ள இன்றைய அரசாங்கம் தனக்கு களங்கம் வராது பாதுகாத்துக்கொள்ள துணிச்சலுடன் முயற்சிக்கிறது. 7ஆம் பிரிவை பயன்படுத்துவது என்பது பல காரணங்களால் பாதுகாப்பாக அமையக்கூடியது. இதன் மூலம் அரசாங்கம் ரிசர்வ் வங்கியை குற்றம்சாட்டுவதை நியாயமாகி அரசாங்கத்திற்கு நன்னடத்தை சான்றிதழ் கிடைக்கும். அத்துடன் ரிசர்வ் வங்கிக்கு அரசியல் நெருக்குதலைத் தந்து தனது கட்சிக்காரருக்கு சாதகமாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தளர்த்த முடியும். மேலும் நெருக்குதலை அதிகரித்து வங்கியின் கைவசமுள்ள தேவைக்கு அதிகப்படியான இருப்பை, உபரியாக அரசாங்கத்திற்கு கிடைக்கவைப்பதும் அதிகப்படியான ஓர் ஆதாயம். இவையனைத்தும் இந்த அரசாங்கத்தின் பரப்பிய சொல்லாடலுக்கு ஆதரவு கிடைக்கச்செய்யவே செய்யப்படுகிறது.

     ரிசர்வ் வங்கியின் ’’தன்னாட்சி’’ என்பது உண்மையில் கோட்பாட்டளவில் மட்டும்தான் என்பது பல முறை நிரூபணமான நிலையில் இப்போது அதைப் பற்றி வங்கியின் மூத்த அதிகாரிகள் திடீரென இவ்வாறு சந்தேகங்கொண்டு எதிர்வினையாற்றுவது ஏன்? பல முறை பேசப்பட்டுவிட்ட பணமதிப்புநீக்க விவகாரம் பற்றி மீண்டும் நாம் பேச வேண்டாம், 2014 மற்றும் 2016க்கு இடைப்பட்ட நிதியாண்டுகளில் அரசாங்கம் தந்த நெருக்குதலால் தனது எல்லா வருமானத்தையும் ரிசர்வ் வங்கி ‘’உபரி’’ என்று அரசாங்கத்திற்கு மாற்றியது. மீண்டும் 2018 நிதியாண்டில், தனது பொருளாதார முதலீடு அளவுகளில் சுழற்சியை தணிக்க (சந்தை சக்திகளின் நிலையின்மை காரணமாக ஏற்படுவது) ‘’நிலையற்ற உபரி விநியோகக் கொள்கை’’ (staggered surplus distribution policy)யை பயன்படுத்தியது. இது 2017 நிதியாண்டில் நடந்த உபரி மாற்றத்தை விட 63% அதிகமாவதில் முடிந்தது. இன்றைய வங்கி நெருக்கடியானது கொஞ்ச காலமாகவே பெரிதாகிவருகிறது என்ற மறுக்க முடியாத உண்மையுடன் இத்தகைய நிகழ்வுகளை சேர்த்துப் பார்க்கிறபோது ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்களும் முக்கியமான வங்கிக் கொள்கைகள் மற்றும் அவை உருவாக்கிய விளைவுகளிலும் கைகோர்த்து செயல்படவில்லை என்பதை நம்ப முடியவில்லை. சொல்லப்போனால், ரிசர்வ் வங்கியின் தலைமை நிர்வாக அமைப்பான மத்தியக் குழு இயக்குனர்கள் அனைவரும் 1934ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டத்தின் 8(4) பிரிவின்படி அரசியல் நியமனங்கள்/பரிந்துரைகளாவர். இதில் ரிசர்வ் வங்கியின் ஆளுனர், துணை ஆளுனர்களும் அடக்கம். இவர்களது பதவிக்காலம், நீக்கம், மறுநியமனம் அனைத்தும் மத்திய அரசாங்கத்தின் விருப்பத்தின்படியானது.

     ரிசர்வ் வங்கி நிர்வகிக்கப்படும் முறையில் பிரிக்கமுடியாதபடிக்கு அரசியல் சேர்ந்திருப்பதால் பொருளாதார செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு இயங்காமல் அரசியல் பரப்பியத்தின் அடிப்படையில் இயங்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக ‘’முழுமையான’’ தன்னாட்சி என்பது ரிசர் வங்கிக்கு வசமாகாத விஷயம். நவீன தாராளவாதத்தின் கீழ் வங்கி அமைப்புகளானது அரசாங்கங்களுக்கும் அரசியல்ரீதியாக முக்கியத்துவம் கொண்ட தனிநபர்களுக்கும் இடையிலான, வெளிப்படையாக சொல்லப்படாத ஒரு கூட்டாக இருக்கிறது. பெரும் வர்த்தக/கார்ப்போரேட் நிறுவனங்கள் வங்கிகளிடம் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டாலும் முக்கியமான அரசியல் கட்சிகளுக்கு புரவரலர்களாக இருப்பதால் அரசியல் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் வங்கி நட்டம் அடையும்போது நட்டத்தை விநியோகிக்க அரசாங்கத்திற்கு வைப்பீட்டாளர்களின் (டெபாசிட்டர்) ஆதரவு தேவை.  இந்த வைப்பீட்டாளர்கள்தான் வாக்கும் வங்கியும் கூட. இத்தகைய சட்டங்களை அமலாக்கம் செய்வதற்கான விதிகள் பயனாளர்களின் நலன்களுக்கேற்ப வளைக்கப்படும். இந்த இடத்தில்தான் சுதந்திரமான ரிசர்வ் வங்கி என்பது அரசின் அரசியல் முகவரை ஆதரிப்பதற்கான சட்டத் தேவையாக மட்டும் ஆக்கப்பட்டுவிட்டது.

     ஆனால் ரிசர்வ் வங்கியும் தனது கண்காணிப்பு பிம்பத்தை மீண்டும் நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. நிதி அமைச்சகத்திற்கும் ரிசர்வ் வங்கியின் இயக்குனர்களுக்கும் இடையிலான சேறுவாறி இறைக்கும் போட்டியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ’’பொதுமக்கள் நலன்’’ பற்றியும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் விரால் ஆச்சார்யா ரிசர்வ் வங்கியின் செயல்படும் விதம் பற்றிய ‘’நிதி சந்தைகளின் கோபம்’’ பற்றியும் பேசுகின்றனர். தனது அதிகாரப் பரப்பை பாதுகாத்துக்கொள்வதற்காக ரிசர்வ் வங்கியை கடிந்துகொள்ள அரசாங்கம் முயற்சிக்கையில் வங்கித் துறையின் வாராக் கடன்கள் விஷயத்தில் தங்களது பொறுப்பை தட்டிக்கழிக்க ‘’தன்னாட்சி’’ என்ற சீட்டை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பயன்படுத்துகின்றன.

Back to Top