ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

சுருங்கிவரும் காஷ்மீரின் தேர்தல் களம்

ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்கள் மையநீரோட்ட அரசியல் கட்சிகளுக்கு நல்லதல்ல.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

ரேகா சவுத்ரி எழுதுகிறார்:

ஜம்மு-காஷ்மீரில் நடந்த சமீபத்திய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஜனநாயக களம் சுருங்கிவருவதை தெளிவாக அம்பலப்படுத்துகிறது. 2002 சட்டமன்றத் தேர்தலின்போதிருந்து உருவாக்கப்பட்டிருந்த துடிப்பான தேர்தல் களம் கடந்த சில ஆண்டுகளில் சுருங்கியிருப்பதாகத் தெரிகிறது.

     ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் உள்ள 71 நகராட்சிகள் உட்பட 79 நகராட்சி அமைப்புகளுக்கும், ஆறு நகராட்சி கவுன்சில்கள் மற்றும் 71 நகராட்சி கமிட்டிகளுக்கும் நடந்த தேர்தல்களில் வாக்குப் பதிவு 35% மட்டுமே. ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளில் வாக்குப் பதிவு அதிகமாக இருந்ததே இதற்குக் காரணம். ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்தை மட்டும் எடுத்துக்கொண்டால் இந்தத் தேர்தல் ஏறக்குறைய முழுமையான புறக்கணிப்பிற்கு ஆளாகியிருக்கிறது. அதிகபட்ச வாக்குப் பதிவு 8.3%. இது தேர்தலின் முதல் கட்டம். அடுத்தடுத்த கட்டங்களில் வாக்குப் பதிபு மிக மோசம். இரண்டாவது கட்டத்தில் 3.4%, மூன்றாவது கட்டத்தில் 3.49%, நான்காம் கட்டத்தில் 4% என மிகவும் சுருங்கிவிட்டது. வேட்புமனுதாக்கல் செய்ய வேட்பாளர்கள் அதிகம் முன்வராத நிலையில் தேர்தல் தினங்களுக்கு வெகு முன்னதாகவே தேர்தல் புறக்கணிக்கப்படுவது தெளிவாகிவிட்டது. பெரும் எண்ணிக்கையிலான வார்டுகளில் வேட்பாளரே இல்லை அல்லது ஒரேயொரு வேட்பாளர்தான். காஷ்மீரில் உள்ள 598 வார்டுகளில் 186 வார்டுகளில் மட்டுமே தேர்தல் நடந்தது. ஒரேயொரு வேட்பாளர் மட்டுமே போட்டியிட்ட 231 வார்டுகளில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர், 181 வார்டுகளில் வேட்பாளரே இல்லை. ஆகமொத்தத்தில் 412 வார்டுகளில் தேர்தலே நடக்கவில்லை. பிரிவினைவாதிகளும் ஆயுதம்தாங்கிய போராளி அமைப்புகளும் தேர்தலை புறக்கணிக்க அழைப்புவிடுத்திருந்த நிலையில் தேர்தல் நடந்த இடங்களில் கூட பிரச்சாரம் ஏதும் நடக்கவில்லை என்கிற அளவிற்கும், சில இடங்களில் வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த அவர்களது பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால் மக்களுக்கு வேட்பாளர்கள் யாரென்றே தெரியாத அளவிற்கு நிலைமை மோசமாக இருந்தது.

     காஷ்மீரில் மையநீரோட்ட அரசியல் முற்றிலுமாக குலைந்திருந்த, தேர்தல் அரசியல் முற்றிலுமாக நம்பகத்தன்மையை இழந்திருந்த 1989க்கு பிந்தைய, ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் தொடக்க கால  காஷ்மீர் சூழலை நினைவுபடுத்துவதாக இந்தத் தேர்தலின் சூழல் இருந்தது. உதாரணமாக 5% வாக்குப் பதிவு மட்டுமே நடந்த 1989 நாடாளுமன்றத் தேர்தல் கேலிக்கூத்து என அழைக்கப்பட்ட து. 1996 சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு கணிசமாக உயர்ந்திருந்தபோதிலும் அதற்கு நம்பகத்தன்மை இல்லை. பாதுகாப்புப் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாலும், ஆயுதங் தாங்கியபோராளிகளில் சிலர் அரசாங்கத்திற்கு ஆதரவாக மாறியிருந்ததாலும் வாக்குப்பதிவு உயர்விற்கு ’’அச்சுறுத்தலே’’ காரணமாக பார்க்கப்பட்டது. 2001 உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் ஒரேயொரு வேட்பாளர் கூட வேட்புமனுதாக்கல் செய்யாத காரணத்தால் அதுவும் சர்ச்சைக்குரியதாக இருந்தது.

ஆனால் 2002 சட்டமன்றத் தேர்தலிலிருந்து தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மை அதிகரித்தது. பிரிவினைவாத களம் மாறாதிருந்த நிலையிலும்  காஷ்மீரை தளமாகக் கொண்ட தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி)  ஆகிய இரண்டு அரசியல் கட்சிகளுக்கிடையில் போட்டி கடுமையாக இருந்தது. ஆகவே தேர்தல் அரசியலும், மக்கள் பங்கேற்பும் முக்கியத்துவம் கொண்டதானது. அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் வாக்குப்பதிவு அதிகம் இருந்தது. எந்த அளவிற்குத் தேர்தல் உள்ளூர் தொடர்பானதோ அந்த அளவிற்கு வாக்குப்பதிவு அதிகமிருந்தது. ஆகவே, நடாளுமன்றத் தேர்தல்களை விட சட்டமன்றத் தேர்தல்களில் அதிக உற்சாகம் காணப்பட்டது. சட்டமன்றத் தேர்தல்களை விட உள்ளாட்சித் தேர்தல்கள் காஷ்மீரிகளை அதிகம் உற்சாகப்படுத்தியது. 2011 உள்ளாட்சித் தேர்தல்களில் 80% வாக்குப்பதிவு நடந்தது. இந்தக் காலகட்டம் முழுவதுமே தேர்தலை புறக்கணிக்கும்படி பிரிவினைவாதிகளும் ஆயுதங்தாங்கிய போராளிகளும் விடுத்த அழைப்பு மக்களால் புறக்கணிக்கப்பட்டது. 2008ல் அமர்நாத் நில சர்ச்சைக்குப் பிறகு பிரிவினைவாதம் பெரிதும் அதிகரித்த பிறகும், சில மாதங்கள் கழித்து நடந்த 2008 சட்டமன்றத் தேர்தலில் 52% வாக்குப்பதிவு நடந்தது (குறைந்தது நான்கு மாவட்டங்களில் 60%க்கும் அதிகம்). அதே போன்று 2010ல் பிரிவினைவாத எழுச்சி அதிகரித்து ஐந்து மாதங்களுக்கு நீடித்த நிலையில் 2011 உள்ளாட்சித் தேர்தல்களிலும் மக்கள் பெரிதும் உற்சாகம் காட்டினர். 2014 சட்டமன்றத் தேர்தல் களம் மிகவும் உயிர்ப்புடன் விளங்கியதை பார்க்க முடிந்தது, கடுமையான போட்டியும் தீவிரமான தேர்தல் பிரச்சாரமும் நடந்தன. காஷ்மீரில் உள்ள 46 தொகுதிகளில் 23ல் வாக்குப்பதிவு 60%க்கும் அதிகம், 13ல் 70%க்கும் அதிகம், ஐந்து தொகுதிகளில் 80%க்கும் அதிகம்.

     இந்த உற்சாகமான தேர்தல்களினூடே ‘’ஆட்சி நிர்வாகத்திற்கான அரசியலுக்கும்’’ (மையநீரோட்ட அரசியல்), ‘’மோதலைத் தீர்ப்பதற்கான அரசியலுக்கும்’’ (பிரிவினைவாத அரசியல்) இடையிலான வித்தியாசத்தை காஷ்மீரிகள் தெளிவாக பிரித்துவைத்திருந்தனர். இதன் காரணமாக பிரிவினைவாத அரசியல் உயிர்ப்புடன் இருக்கையிலேயே மக்களாட்சிக் களமும் செயலூக்கமுடன் இருந்தது. மக்கள் மனங்களில் பிரிவினை உணர்வுகள் தொடர்ந்து இருந்தபோதிலும் தினசரி வாழ்க்கைக்குத் தேவையான மின்சாரம், சாலைகள், தண்ணீர் ஆகியவற்றிற்கு தேர்தல் அரசியல் அவசியம் என்று உணர்ந்திருந்தனர். இதன் காரணமாகவே பிரிவினைவாத அரசியல் மேலோங்கிய போதிலும் தேர்தல் அரசியல் மற்றும் ஆட்சிநிர்வாக அரசியலின் நம்பகத்தன்மை காஷ்மீரில் தொடர்ந்து நீடித்தது.

‘’ஆட்சிநிர்வாக அரசியலும்’’ ‘’மோதல் தீர்வுக்கான அரசியலும்’’ இணையாக சென்றுகொண்டிருந்த காலம் முடிந்துவிட்டது என்று தோன்றுகிறது. 2014ல் நடந்த வெற்றிகரமான தேர்தலுக்குப் பின்னர் காஷ்மீரில் பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது, அதிலும் குறிப்பாக 2016 பிரிவினைவாத எழுச்சிக்குப் பிறகு. 2017ல் ஸ்ரீநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் இது தெளிவாக பிரதிபலித்தது. வெறும் 8% வாக்குப்பதிவுடன் தீவிரமான வன்முறை மற்றும் போராட்டங்களுடன் இந்த இடைத்தேர்தல் நடந்தேறியது.

     நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை புறக்கணிப்பதென தேசிய மாநாடு மற்றும் பிடிபி முடிவு செய்ததிலிருந்தே காஷ்மீரில் மையநீரோட்ட கட்சிகள் எதிர்கொண்டுள்ள கடுமையான சவால்களை தெரிந்துகொள்ளலாம். அரசமைப்புசட்ட பிரிவு 35A உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப் படிருப்பதால் உருவாகியுள்ள அரசியல் நிலையின்மையின் காரணமாக அவர்கள் தேர்தல்களிலிருந்து விலகியிருப்பதைப்போல் தோன்றுகிறது. ஆனால் உண்மை என்னவெனில் காஷ்மீரில் உள்ள சூழல் மையநீரோட்ட அரசியலுக்கு உகந்ததாக நிச்சயம் இல்லை.

 

Back to Top