ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

துப்புரவுத் தொழிலாளர்களின் மரணங்கள் வழக்கமான விஷயமாகிவிட்டதா?

பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்வதில் எந்திரமயமாக்கத்தை பரவலாக்கினால் மனிதர்கள் சவக்குழிக்குள் இறங்குவதை தடுக்கலாம்.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

டெல்லியில் இரண்டு  இடங்களில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு துப்புரவுத் தொழிலாளிகள் இறந்துபோனது இதே போன்ற நிகழ்வுகளின் தொடர்ச்சியாக இருக்கிறது. ஆனால் இது குறித்து அரசு அதிகாரிகள் நடந்துகொள்ளும் விதம் ஒரு புதிய சகஜ நிலை உருவாகியிருப்பதைக் காட்டுகிறது. மிக முக்கியமான பணி என்று ஸ்வட்ச் பாரதத்தில் (தூய்மையான இந்தியாவில்) வாய்கிழிய சொல்லப்படும் பணியை செய்ய சபிக்கப்பட்டவர்கள் விஷயத்தில் வழக்கமாக காட்டப்படும், ஏற்றுக்கொள்ள முடியாத, துளியும் அக்கறையற்ற போக்கு இது.

இதற்கு முன்னர் பலரும் மூச்சுத்திணறி இறந்ததைப்போல் தாங்களும் இறக்கக்கூடும் என்பது தெரிந்தே தங்களது வறுமையின் காரணமாக கழிவுகளும் மலமும் நிறைந்திருக்கும் பாதாள சாக்கடைகளில் இந்தத் தொழிலாளர்கள் இறங்குகிறார்கள். இந்த குரூரமான மரணங்களை அடுத்து எழும் வழக்கமான கேள்விகளில் உடனடியாக பதில் தேவைப்படும் கேள்வி இதுதான்: எந்திரங்களின் மூலம் சுத்தப்படுத்தலாம் என்றிருக்கும் நிலையில், அது சட்டத்தின் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தொழிலாளிகள் கழிவுகளை சுத்தம் செய்ய ஏன் இப்படி பாதாள சாக்கடைகளில் இறங்குகிறார்கள்?

இந்தத் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான, அவர்களது மிக மோசமான வாழ்க்கை நிலையில் முன்னேற்றத்தைக் கொண்டுவருவதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் செயற்பாட்டாளர்களும் பிறரும் இந்தத் தொழிலாளர்களைப் பற்றிய ஆதாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் கூட இல்லை என்று வருந்துகின்றனர். கழிவுகளை கைகளால் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் நாட்டில் மொத்தம் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற தகவல் கூட ஆவணப்படுத்தப்படவில்லை. அப்படி ஆவணப்படுத்தப் பட்டிருந்தால் கைகளால் மலம் அகற்றுதல் இன்னமும் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதாகும். ஊடகங்கள் தரும் செய்திகள், சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் அரசாங்கம் அளிக்கும் பதில்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்கும்போது குழப்பமான மதிப்பீடுகளே கிடைக்கின்றன. ஆனால் முக்கியமான விஷயம் என்னவெனில், 1993ல் நிறைவேற்றப்பட்ட கைகளால் கழிவுகளை சுத்தம் செய்தல் மற்றும் வற்றிய கழிவறை கட்டுதல் (தடை) சட்டம் 2013ல் திருத்தம் செய்யப்பட்டதன்படி தனிநபரோ, உள்ளூர் அதிகாரியோ அல்லது முகவரோ பாதாள சாக்கடை, மலத்தொட்டி போன்ற ஆபத்தான பணிகளை செய்ய ஆட்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது.

சாதியமைப்பின் மிகக் கீழ்நிலையில் உள்ள சாதிகளைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளர்களின் வேதனைகள், பிரச்னைகள்  முக்கியத்துவத்தின் படிநிலை அமைப்பில் அடித்தட்டில் இருக்கிறது. அது இந்திய சமூகத்தின், அரசின் பார்வையில் ஒரு பொருட்டே அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. கொஞ்சம் பணத்திற்காக தெருக்களை பெருக்கும், குறுகிய சாக்கடைகளிலிருந்து கழிவுகளை அகற்றும் (நகரங்களின் பழங்காலப் பகுதிகளில் கட்டிடங்களுக்கு மத்தியிலிருக்கும் குறுகியக் கால்வாயிகளிலிருந்து), மலக்கிடங்குகளை சுத்தம் செய்யும் அவர்கள் முகமற்றவர்கள். ஸ்வட்ச் பாரத் அபியான் தொடங்கப்பட்டதிலிருந்தே, இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் விஷயத்தில் எந்த கவனமும் செலுத்தப்படவில்லை, நிதியாதாரங்களும் ஒதுக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. விளக்குமாறை பிடித்துக்கொண்டு பெருக்குவதுபோல் காட்டிக்கொள்ளும் பிரபலங்களும் அமைச்சர்களும் ‘’தங்களது சொந்த நிழலையே பெருக்குகிறார்கள், நாங்களோ தேசத்தை தூய்மையாக்க பெருக்குகிறோம்’’ என்று மும்பை துப்புரவு பணியாளர்கள் சங்கம் சரியாகவே கூறியது.

சாதியமைப்பில் ஆகக் கீழ்நிலையில் சாதியினருக்கும் பிறரது கழிவுகளை அகற்றும் பணியை செய்பவர்களுக்கும் இருக்கும் மிக ஆழமான தொடர்பே துப்புரவு பணி எந்திரமயமாக்கப்படுவதில் காட்டப்படும் அக்கறையின்மைக்கான காரணம். மிக வேகமாகவும் முறையற்ற வகையிலும் நகரமயமாகிக் கொண்டிருக்கும் நாட்டில் துப்புரவு பணி தொடர்ந்து நடைபெறுவது என்பது நகரங்கள் முறையாக செயல்படுவதன் ஒருங்கிணைந்த பகுதியாகும். உதாரணமாக, பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் அவற்றிற்கென்று தனியே கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன, அவற்றை பரமாரிப்பதில் மாநகரப் பணியாளர்களுக்கு எந்தப் பங்கும் கிடையாது. அதாவது இந்த வேலையை செய்ய தனியார் நிறுவனங்கள், ஒப்பந்ததார்கள் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். இத்தகைய நிறுவனங்கள் கூலியாட்களை தற்காலிகமாக வேலைக்கு அமர்த்திக்கொள்கின்றனர். இந்த கூலியாட்களின் பாதுகாப்பு பற்றி எந்தக் கவலையும் கொள்வதில்லை. டெல்லியில் சமீபத்தில் இறந்துபோன ஆறு துப்புரவுத் தொழிலாளிகளும் இப்படிக்கு கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களே.

துப்புரவுப் பணியாளர்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் முக்கியமான செயற்பாட்டாளர் ஒருவர் சுட்டிக்காட்டியதைப்போல் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இருக்கிறது, ஆனால் இருபதடி ஆழம் கூட இல்லாத சாக்கடைகளையும் கழிவுத் தொட்டிகளையும் சுத்தம் செய்வதற்கான தொழில்நுட்பம் இல்லை. ஆனால் உள்நாட்டு எந்திரங்கள் அல்லது வேறு வழிகளில் இதை செய்வதற்கான பாரட்டத்தக்க முயற்சிகள் செய்யப்பட்டுவருகின்றன. ஐதராபாத் மாநகராட்சி தண்ணீர் விநியோகம் மற்றும் கழிவுநீர்க்கால்வாய் வாரியம் பயன்படுத்தும், பலராலும் உதாரணமாக காட்டப்படும் ஜெட்டிங் எந்திரங்கள், சோதனை முயற்சியாக கேரளாவின் சமூக அக்கறை கொண்ட பொறியியலாளர்கள் திருவனந்தபுரத்தில் உருவாக்கியுள்ள ரோபோ எந்திரமான ‘’பேண்டிகூட்’’, ஐதராபாத்தின் அறிவியலாளர்களும் பொறியியலாளர்களும் உருவாக்கியுள்ள ‘’ஸீவர் கிராக்’’ மற்றும் ஊடகங்களில் வெளியான வேறு பல முயற்சிகளையும் சுட்டிக்காட்டலாம். இத்தகைய முயற்சிகளை அதிகாரிகள் முனைப்புடன் ஆதரிக்க வேண்டும், போற்ற வேண்டும். டெல்லி மாநில அரசாங்கம் கூட பாதாள சாக்கடைகளை சுத்தப்படுத்துவதை எந்திரமயமாக்குவதற்கான செயல் திட்டங்களை வரப்பெற்றுள்ளது. கழிவுநீர், சாக்கடை ஆகியவற்றை சுத்தம் செய்வதற்கான எந்திரங்கள் வாங்க துப்புரவு பணியாளர்களுக்கு கடனுதவி அளித்து அவர்களை ‘’தொழிமுனைவோர்’’ ஆக்குவதற்கான டெல்லி மாநில அரசாங்கத்தின் முன்மொழிவு பற்றியும் ஊடகங்களில் செய்தி வெளியாயின. இது அவர்களுக்கு பல கஷ்டங்களை உருவாக்கும் என்பதால் அரசாங்கமே இந்த எந்திரங்களை வாங்கி அவற்றை இயக்க துப்புரவு பணியாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்.

தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு கவசங்கள் அளிக்கப்படுகிறபோது அவை மிகவும் கனமாக, பெரிதாக இருப்பதால் தொழிலாளர்கள் அவற்றை கழற்றிவைத்துவிட்டு வேலை செய்வதையே விரும்புகிறார்கள் என்பது கவனத்திற்குரிய விஷயம். இந்த விஷயத்திலும் கவனத்தை செலுத்தி எளிதான, லேசான பாதுகாப்பு கவசங்களை தயாரிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இத்தகைய முயற்சிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்குமளவிற்கு இந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி உண்மையான கரிசனம் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இருக்கிறதா? எந்திரமயமாக்கபடாத பிரச்னையுடன், எப்போதுமே ஆட்கள் வேலைக்குத் தேவைப்படும் – குறிப்பாக ரயில்வேயில் - இந்தத் துறைக்கு துப்புரவு பணியாளர்களை தினக்கூலிக்கு வேலைக்கு அமர்த்தும் பிரச்னையும் சேர்ந்துகொள்கிறது.

தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க சக்தியை சிறப்பாக பயன்படுத்த விரும்பும் இந்த அரசாங்கத்தின் போற்றத்தக்க,  மதிப்பிற்குரிய நோக்கத்தை மிக கொடூரமான, தேவையற்று நிகழும் துப்புரவுத் தொழிலாளர்களின் மரணங்களைத் தடுக்க பயன்படுத்த முடியும்.

Back to Top