ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

ஒருவரை நகர்ப்புற நக்சலாக்குவது எது?

தனது முன்னாள் சக பத்திரிகையாளர், நகர்ப்புற நக்சல் கெளதம் நவ்லாக்கா பற்றி எழுதுகிறார் பெர்னார்ட் டி’மெல்லோ

 

கலாச்சார பழமைவாதத்தின் மீது பாராதீய ஜனதா கட்சி வழிநடத்தும் அரசாங்கமும் இந்துத்துவா ‘’தேசியவாத’’ இயக்கமும் கொண்டுள்ள அசுரத்தனமான வெறிக்கு எல்லையே இல்லை என்று தோன்றுகிறது. இந்துத்துவாவாதிகளின் குற்றச்செயல்களுக்கான பாஜக அரசாங்கத்தின் ஆதரவு  மிகவும் அபாயகரமானது. வழக்கமாக முஸ்லிம்கள், ஒடுக்கப்பட்ட தேசியங்களின் போராளிகள் மற்றும் ‘’மாவோயிஸ்ட்’’ ஆகியோருக்கு எதிராக பயன்படுத்தும் அரசு பயங்கரத்தை இந்திய அரசு தனது ’’இன்றியமையாத’’ எதிரிகளை ’’நகர்ப்புற நக்சல்’’ என்று வகைப்படுத்தி அவர்களுக்கு எதிராக சமீபத்தில் (2018 ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்)  பயன்படுத்தியிருக்கிறது. இது வரை அரசாங்கத்தின் வகைப்படுத்தலில் ‘’நகர்ப்புற நக்சல்’’ என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)-ன் உறுப்பினர்கள் என்று கருதத்தக்க வழக்கறிஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர்தான்.

ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின் கீழும், பிற குற்றவியல் சட்டங்களின் கீழும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அரசாங்கம் தொல்லை கொடுக்க விரும்பும் இந்த ‘’நகர்ப்புற நக்சல்’’கள் மற்றும் சிலரின் வீடுகள்/அலுவலங்கள் திடீர் சோதனைக்கு ஆளாயின.  இந்தியாவின் ‘’உட்பதிக்கப்பெற்ற’’ ஊடகங்கள் கைது செய்யப்பட்ட சிலரை அச்சுறுத்தும் வகையில் அவர்களுக்கெதிரான குற்றச்சாட்டுகளை தொலைக்காட்சியின் முக்கியமான செய்திநேரங்களில் பரபரப்பான செய்தியாக வெளியிட்டதிலிருந்து சம்பந்தப்பட்டவர்களை பழிதூற்றும் நோக்கம் இருப்பது தெரிகிறது. ‘’குற்றமிழைத்த’’ சிலர் வெளிப்படையாகவே ‘’தேசத் துரோகிகள்’’, ‘’தேசத்தின் கண்ணுக்குத் தெரியாத பகைவர்கள்’’, ’’சிபிஐ (மாவோயிஸ்ட்)க்கு உதவுவதன் காரணமாக ‘’இந்திய மக்களாட்சிக்கு ஆபத்து விளைவிப்பவர்கள்’’ என்றெல்லாம் கடுமையாக கண்டனம் செய்யப்பட்டனர்.

’’தேசத்தின் கண்ணுக்குத் தெரியாத பகைவர்கள்’’, ‘’இந்திய மக்களாட்சிக்கு ஆபத்து விளைவிப்பவர்கள்’’ என்று கருதப்பட்டவர்களில் எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லியின் (இபிடபிள்யு) பெரும் மதிப்பிற்குரிய பத்திரிகையாளர் கெளதம் நவ்லாக்காவும் ஒருவர். 1980களில் தொடக்கத்தில் இபிடபிள்யு-வில் பணிக்கு சேர்ந்த நவ்லாக்கா, ரஜனி தேசாய், எம்.எஸ். பிரபாகரா, கிருஷ்ணா ராஜ் போன்ற எனக்குத் தெரிந்த இந்தியாவின் தலைசிறந்த பத்திரியாளர்களுடன் பணியாற்றியவர். 1980களில் இறுதியில் தனது இருப்பிடத்தை டெல்லிக்கு மாற்றியப்போது இபிடபிள்யு-விற்காக தொடர்ந்து பணியாற்றினார். அப்போது அவர் ஆசிரியர்குழு ஆலோசகராக இருந்தார். 2006 வரை அந்தப் பொறுப்பில் தொடர்ந்தார். பின்னர், மக்களாட்சி உரிமைகளுகான செயற்பாட்டாளர் என்ற வகையில் மக்களாட்சி உரிமைகளுக்கான மக்கள் சங்கத்திற்காக (பி.யு.டி.ஆர்) அதிக நேரத்தை செலவிட விரும்பிய நவ்லாக்கா, தன்னை பொறுப்பிலிருந்து விடுவிக்கும்படி அப்போதைய இபிடபிள்யு ஆசிரியர் சி. ராம்மனோகர் ரெட்டியிடம் கேட்டுக்கொண்டார். ஆனாலும் தொடர்ந்து இபிடபிள்யு-விற்காக எழுதிவருகிறார்.

1990களின் தொடக்கத்திலிருந்து, ஜம்மு காஷ்மீர் குடிமைச் சமூக கூட்டணி என்ற அமைப்புடன் நெருக்கமாக இணைந்து, அதன் உண்மை கண்டறியும் குழுக்களின் செயல்பாடுகளில், அறிக்கை எழுதுதல், பிரச்சாரம் ஆகிய நடவடிக்கைகளில் பங்குகொள்ளத் தொடங்கியதிலிருந்து நவ்லாக்காவின் எழுத்துக்கள் அவருக்கே உரித்தான ஒரு வடிவத்தை பெறத் தொடங்கின. உண்மைக்காக தன்னை அர்பணித்துக்கொண்ட நவ்லாக்கா, காஷ்மீரின் அடையாளமற்ற கல்லறைகளில் புதைந்துபோயிருக்கும் உண்மையை இபிடபிள்யு மற்றும் பிற பத்திரிகைகளில் வெளிக்கொண்டுவந்தார். காஷ்மீரில் தனது மனித உரிமை மீறல்களை மறைக்க இந்திய அரசு பயன்படுத்திய மறைப்புகளை அவரது எழுத்துக்கள் அகற்றின: மறைந்துபோகும்படிக்கான நிலைக்கு ஆட்களை ஆளாக்குவது, பின்னர் போலி என்கவுன்ட்டர்களில் கொல்வது, ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் அவர்களது நடவடிக்கைகளுக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிப்பது ஆகியவற்றை அம்பலப்படுத்தினார்.

நவ்லாக்கா தனது வாசகர்களுக்கு காட்டும் இந்திய மக்களாட்சியின் பொய் காஷ்மீரில் மிக வெளிப்படையாகத் தெரிகிறது. நவ்லாக்கா போன்று பத்திரிகையாளராகவும் மனித உரிமை செயற்பாட்டாளராகும் இருக்க, அதிலும் குறிப்பாக ஆட்சியாளர்களின் ’’உட்பதிக்கப்பெற்ற’’ ஊடகங்களின் பிரச்சாரம் ஆட்சியாளர்களின் பக்கம் இருக்கையில், நீங்கள் உண்மையிலேயே துணிவு கொண்டவராக இருக்க வேண்டும். வன்முறைக்கு பலியாகுபவர்களே வன்முறைக்கு காரணமானவர்கள் என்று பழிபோடப்படுகிறது. சினம்கொள்ளும் வாசகர்கள் நீங்கள் கூறுவதைக்கூட கேட்பதற்கு தயாராக இருப்பதில்லை. நாடாளுமன்ற இடதுசாரிகளில் ஒரு பகுதியினரே நவ்லாக்காவின் எழுத்துக்களை புறந்தள்ளுவதுடன் ‘’தவறான திசையில் செல்பவர்’’ என்று அவரை அழைக்கின்றனர். ஆனால், உண்மைகள் மற்றும் தர்க்கத்தின் பக்கம் உறுதியாக அவர் நிற்பதுடன் தொடர்ந்து இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரின் உள்நாட்டு காலனியாட்சி விஷயத்தில் இந்திய அரசை தொடர்ந்து விமர்சித்துவருகிறார்.

இன, நிற, தேசிய, சாதிய, வர்க்க, பாலின என எல்லா விதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்பவர்தான் மார்க்சீய பொதுவுடைமையாளராக இருக்க முடியும். இதுவே மார்க்சீய பொதுவுடைமை அறவியலாகும். மார்க்சீயம் ஒடுக்கப்பட்ட, பாட்டாளி வர்க்க மற்றும் விவசாயிகளுக்கான தத்துவம். அதிகாரத்திற்கான தத்துவமல்ல மார்க்சீயம், சமத்துவத்திற்கான தத்துவம். அதைத்தான் தன்னுள் நவ்லாக்கா உள்வாங்கியிருக்கிறார், பின்பற்றுகிறார். அவரது பத்திரிகை மற்றும் மனித உரிமை புலனாய்வுகள் அவரை மாவோயிஸ்டு கிளர்ச்சியின் இதயப்பகுதியான தெற்கு சட்டீஸ்கருக்கு ஈர்த்தது. இங்கு இந்திய அரசு, பச்சை வேட்டை நடவடிக்கை என்றழைக்கப்படும் தனது எதிர்க்கிளர்ச்சி போரை 2009 செப்டம்பரிலிருந்து கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.

1930களில் அமெரிக்க பத்திரிகையாளர் எட்கர் ஸ்நோ (சீனா மீது சிவப்பு நட்சத்திரம் என்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதியவர்) சீனாவிற்குச் சென்று தான் பார்த்த உண்மைகளையும் சீன மக்கள் விடுதலை ராணுவத்தைப் பற்றியும், சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சித் திட்டம் பற்றியும் எழுதினார். அவர் இருந்த அதே நிலையில் நவ்லாக்கா இங்கு இருக்கிறார். 2012ல் நவ்லாக்கா எழுதிய கிளர்ச்சியின் இதயப்பகுதியில் பகல்களும் இரவுகளும் (டேஸ் அண்ட் நைட் இன் த ஹார்ட்லேண்ட் ஆஃப் ரிபெலியன்) என்ற புத்தகத்தில் மாவோயிஸ்ட் கொரில்லா தளமான தெற்கு சட்டீஸ்கரின் தான் பார்த்ததை அப்படியே எழுதியிருக்கிறார். இந்திய அரசும், சிபிஐ (மாவோயிஸ்ட்) இருவரும் 1949 ஜெனீவா ஒப்பந்தத்தின் 3ஆவது பொது விதியையும், ஆயுத மோதலானது இரு நாடுகளுக்கு இடையிலானதாக இல்லாத நிலையில் அத்தகைய சூழல் தொடர்பான 1977ன் புரோட்டோகால் 2ஐயும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென உள்நாட்டுப் போர் பற்றிய தனது புரிதலின் அடிப்படையில் நவ்லாக்கா கூறுகிறார்.

அப்படியெனில் ‘’நகர்ப்புற நக்சல்’’ என்பது என்ன? நவ்லாக்காவின் நடைமுறையை மனதில் கொண்டு ‘’நக்சல்’’ என்பதை பின்வருமாறு வரையறுக்கிறேன். இந்திய மக்களில் பெரும்பகுதியினர் போதுமான உணவு இல்லாதிருப்பது, ஆடைகள் இல்லாதிருப்பது, வீடுகள் இல்லாதிருப்பது, கல்வி இல்லாதிருப்பது, மருத்துவ வசதிகள் இல்லாதிருப்பது ஆகியவற்றை பார்த்துக்கொண்டு எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்க முடியாதவர், இந்த நிலைக்குக் காரணம் இந்தியாவின் ஆழமான ஒடுக்குமுறையும் சுரண்டலுமே என்று கருதுபவர், புரட்சிகரமான மாற்றம் வேண்டுமென்று கதறுபவர் நக்சல் ஆவார். இந்த வார்த்தைக்கான இந்தப் பொருளில் ஏராளமான இந்தியர்கள், அவர்கள் நகர்ப்புறத்தவர்களோ கிராமப்புறத்தவர்களோ, என்னையும் நவ்லாக்காவையும் போல் நக்சல்கள். அவர்கள் மாவோயிஸ்டுகளாக இருக்க சிபிஐ (மாவோயிஸ்ட்)-ன் உறுப்பினராகவோ அல்லது ஆதரவாளராகவோ இருக்க வேண்டியதில்லை.

 

Back to Top