ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

’’நக்சல்’’ என்று பெயரிடும் அரசியல்

அறிவுஜீவிகள்/செயற்பாட்டாளர்கள் மீதான அரசின் நடவடிக்கை சட்டமுறைமையின்படி தவறானது தார்மீகரீதியாக அவமானப்படுத்துவது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

சமீபத்தில் மகாராஷ்டிரா அரசாங்கம் சில முன்னணி சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்ததும், இரண்டு தலித் அறிவிஜீவிகளின் வீடுகளில் திடீர் சோதனையிட்டதும், கருத்து வேறுபடுவதற்கான மக்களாட்சி உரிமையை நசுக்குவதாகும் என மக்களாட்சி பாதுகாவலர்களால் பார்க்கப்படுகிறது. மாநில அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை இரண்டு கேள்விகளை எழுப்புகிறது: தனது வழக்கமான சந்தேகப் பார்வைக்கு ‘’நக்சல்’’ என்ற முத்திரையை குத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு ஏன் ஏற்படுகிறது? மற்றும், உள்துறையும், அனைவரின் கண்ணுக்கும் தெரிந்த அதன் முக்கிய அங்கமான காவல்துறையும் அளவுக்கு மீறி நடந்துகொள்கிறபோது அறிவுஜீவிகள் தர வேண்டிய சமூக மற்றும் தார்மீக விலை என்ன?

பாரதீய ஜனதா கட்சி-சிவ சேனா தலைமையிலான மகாராஷ்டிரா அரசாங்கம் உட்பட ஆளும் கட்சிகள் ’’சட்டம்-ஒழுங்கு’’ பிரச்னை என்ற பெயரில் அறிவுஜீவிகளுக்கு மற்றும் குடிமை உரிமை செயற்பாட்டாளர்களுக்கு எதிராக அச்சமூட்டும் குற்றச்சாட்டுகளை எழுப்புவது இரண்டு நோக்கங்களைக் கொண்டுள்ளது. ஒன்று, 2019 பொதுத் தேர்தல் தங்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும் என்ற உணர்விலிருந்து எழும் ‘’தீவிர’’ கவலையை எதிர்கொள்ள இத்தகைய அச்சத்தை எழுப்புகிறார்கள். ஆகவே பீமா-கோரிகான் பின்னணியில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக நக்சல் என்ற பூச்சாண்டியை அவர்கள் முதல் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. தேசியம் என்பதன் பின்னணியில் நக்சலின் எதிர்மறையான பங்கை ஊடகங்கள் மற்றும் பிற பிரச்சார எந்திரங்கள் மூலம் செய்கிறார்கள். ஆக, குறைந்தபட்சம் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்து மக்களின் கவனத்தையாவது மிக நெருக்கடியான பிரச்னைகளான பணவீக்கம்,  நல்லாட்சி பற்றி குழப்பத்தை உண்டாக்க வேண்டியிருக்கிறது. சமூக-பொருளாதார விவகாரங்களில் மத்திய அரசாங்கம் அடைந்துள்ள மாபெரும் தோல்வியின் பின்னணியில் இந்தக் கவலை அநேகமாக தொடர்ந்து இருக்கும்.

இரண்டு, பொதுவாக மத்திய அரசாங்கமும், குறிப்பாக மகாராஷ்டிரா அரசாங்கமும் ‘’நகர்ப்புற நக்சல்’’ என்ற பதத்தின் அரசியல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. பகுத்தறிவு சிந்தனையாளர்கள்/செயற்பாட்டாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந் பான்சரே, எம்.எம். கல்புருகி, கெளரி லங்கேஷ் ஆகியோரின் கொலை தொடர்பாக இந்துத்துவா குழுக்களை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து பொதுமக்களின் கவனத்தை திருப்பும் நோக்கத்துடன் அரசியல்ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள ‘’நகர்ப்புற நக்சல்’’க்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டாளர்கள் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக தாங்கள் கூறுவதை நிரூபிக்க பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தங்களது கூற்றுகளை ஆதாரங்களாக மாற்றுவதற்காக ‘’வேகமாக முன்னகர்த்தும்’’ முறையை மகாராஷ்டிரா காவல்துறை பயன்படுத்தியிருப்பதை உச்ச நீதிமன்றம் காவல்துறையை கடுமையாக கடிந்துகொண்டிருப்பதிலிருந்து தெரிகிறது. பகுத்தறிவாளர்கள் கொல்லப்பட்ட விஷயத்தில் குற்றச்சாட்டப்பட்டிருக்கும் இந்துத்துவா குழுக்கள் மீது குவிந்துள்ள பொதுமக்களின் கவனத்தை இது மட்டுப்படுத்தியிருக்கிறது.

செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளை விசாரணைக்குள்ளாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இரண்டாவது கேள்வி இருக்கிறது. தலித் அறிவுஜீவி மற்றும் ஐதராபாத்திலுள்ள அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விஷயத்தில் காவல்துறையின் திட்டம் மிகத் தெளிவாகத் தெரிகிறது.

ஆகவே, ஒருவரை ‘’நக்சல்’’ என்று கூறுவதானது அரசைப் பொறுத்தவரை வெறும் பெயரிடுகிற விஷயமல்ல. மாறாக, ஒருவரை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்குகிற, தார்மீக ரீதியாக தாக்குகிற முறைகளை இது பெரும்பாலும் பயன்படுத்துகிறது. இந்த செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகளின் வீடுகள் நோக்கி மிகப் பெரும் காவல்படைகள் அணிவகுத்து சென்று பெரும் நடவடிக்கையாக காட்டுவதன் மூலம் இது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. கைது செய்யப்பட்ட அறிவுஜீவிகள் சிலரின் எதிர்வினைகளிலிருந்து அவர்கள் அவமானகரமாக உணர்ந்துள்ளனர் என்று தெரிகிறது. இந்த அவமானகரமான உணர்வு, குறிப்பாக தலித் அறிவுஜீவிகள் விஷயத்தில் சிக்கலான வடிவத்தை எடுத்திருக்கிறது. எந்த விதத்திலும் புரிந்துகொள்ள முடியாத வகையிலான நடைமுறையின் வழியே அவர்களது வீடுகள் சோதனை செய்யப்பட்டதிலிருந்து அவர்களது அவமானம் தொடங்கியது.

அச்சு ஊடகத்தின் ஒரு பிரிவில் வெளியான செய்தியின்படி, ஐதராபாத்தில் தலித் அறிவுஜீவியின் வீட்டில் மகாராஷ்டிரா காவல்துறை திடீர் சோதனையில் ஈடுபட்டபோது அவரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் கேட்ட கேள்விகள் மிகவும் அவமானப்படுத்துவதாக இருந்தன. உதாரணமாக, சில கேல்விகள் மிகவும் அநாகரீகமான உணர்வை ஏற்படுத்தக் கூடியவையாக இருந்தன. கலப்புத் திருமணம் பிராமணீய ஆணாதிக்க நெறிகளுக்கு அவமானத்தை தருவதாக இருக்கிறது என்று காவல்துறையினர் மறைமுகமாகக் கூறியுள்ளனர். காவல்துறையினரின் உள் உறையும் சாதியவாதி என்ற சுயம் சட்டத்திற்கு கட்டுப்பட்ட அதிகாரிகளை மீறி வெளிப்பட்டிருக்கிறது. காவல்துறைக்குள் இருக்கும் சாதி என்ற அழுக்கை அதிகாரவர்க்க நடைமுறைகளால் வெளியேற்ற முடியவில்லை என்பதையும் காட்டுகிறது. தங்களது திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் மூலம் குடிமை உரிமை செயற்பாட்டாளர்களை கைது செய்த காவல்துறை தலித் அறிவுஜீவியையும் விசாரித்திருக்கிறது. காவல்துறையினரின் சாதிய ஆசைகளை திருப்திபடுத்துவதற்காக இந்த தேவையற்ற விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த அதீத நடவடிக்கை மீறியிருப்பது அந்தரங்கத்திற்கான உரிமையை மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக நிபந்தனையற்ற கண்ணியத்திற்கான ஒருவரது தார்மீக உரிமையையும் மீறியிருக்கிறது. சட்டம்-ஒழுங்கின் அடிப்படையில் தான் தேசம் குறித்து கொண்டுள்ள கருத்தில் உறைந்திருக்கும் முரண்பாட்டை அரசு அங்கீகரிக்க மறுக்கிறது என்பதை கவனிப்பது மிக மிக முக்கியம். ஐதராபாத் அறிவுஜீவிகளின் இக்கட்டு காட்டுவதைப்போல் தேசம் என்கிற அருவமான விஷயத்தை காப்பாற்ற அக்கறை கொண்டுள்ள காவல்துறை ஸ்தூலமான மனிதர்களை வெறுப்பிற்குரியவர்களாக பார்க்கிறது.

இத்தகைய தார்மீகரீதியாக தாக்குதலான, அரசியல்ரீதியாக அச்சந்தரக்கூடிய நடவடிக்கை அறிவுஜீவிகளை ஏழை எளிய மக்களுடன் நிற்பதை தடுக்கிறது, யாருடைய உரிமைகளை அது பாதுகாக்க வேண்டுமோ அவர்களுடன் நிற்பதையும் தடுக்கிறது.

Back to Top