ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

புதிதாக இடஒதுக்கீடு கோரும் சமூகங்கள்

புதிதாக இடஒதுக்கீடு கோருபவர்கள் அதிக வேலைவாய்ய்புகளை உருவாகுவதற்கான கோரிக்கையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

இடஒதுக்கீடு கிடைக்கப்பெறும் சாதிகளின் பட்டியலில் புதிய சாதிகளை சேர்க்கக் கோரி நாடு முழுவதும் அதிகரித்துவரும் கோரிக்கை கவனத்தைக் கவரக்கூடிய ஒரு கட்டத்தை அடைந்திருக்கிறது. இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் அதற்குக் கற்பிக்கும் இழுக்கை நீக்க இது முயற்சிக்கிறது. அதே நேரத்தில், இது இதன் மிகத் தீவிரமான எதிரிகள் சிலரை தங்களது விமர்சனத்தின் குவிமையத்தை நிறுவனங்களின் நலன் பற்றியதிலிருந்து  தேசம் என்கிற அருவமான தளத்திற்கு மாற்றிக்கொள்ள கட்டாயப்படுத்தியிருக்கிறது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு இடஒதுக்கீடு கொள்கையை இழுக்குபடுத்த முயன்ற அதன் எதிராளிகள் இடஒதுக்கீட்டால் பலனடைபவர்களை, குறிப்பாக அட்டவணைபடுத்தப்பட்ட சாதியினரை (எஸ்.சி), அநாகரீகமான மொழியை பயன்படுத்தி அரசாங்கத்தின் ‘’மாப்பிள்ளைகள்’’ (அதாவது அவர்கள் தேவைக்கதிமாக செல்லம் கொடுக்கப்படுகிறார்கள் என்பதை குறிக்கும் வண்ணம்), ‘’தகுதியின் எதிரிகள்’’, ‘’திறம்பட செயலாற்றுவதற்கு தடையாக இருப்பவர்கள்’’ என்றெல்லாம் குறிப்பிட்டனர். இவ்வாறான வன்மம் மிகுந்த விமர்சனங்களுக்கு ஆளானாவர்கள் திட்டவட்டமாக ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இடஒதுக்கீடு கொள்கையை அதனடிப்படையில் எதிர்க்காமல் நிறுவனங்களின் நலன் என்பது போன்ற வாதங்கள் மூலம் குறிப்பிட்ட சமூகப் பிரிவினருக்கு எதிராக தங்களது வெறுப்பை, கோபத்தை வெளிப்படுத்தினர். ஆச்சரியத்திற்குரிய வகையில், இத்தகைய இகழ்ச்சிக்கு பின்னால் இருக்கும் கருத்து என்னவெனில், ஒரு குறிப்பிட்ட மனிதரையோ அல்லது சமூகப் பிரிவையோ இகழ்வதல்ல இது, மாறாக நிறுவன நலன் குறித்த அக்கறையால் சொல்லப்படுவது என்பதுதான். வேறு வகையில் சொன்னால், இடஒதுக்கீடு இல்லாவிடில் அரசு நிறுவனங்களில் தகுதியையும் திறனையும் மீண்டும் கொண்டுவந்துவிட முடியும் என்று இந்த விமர்சனம் கூறுகிறது. இவ்வாறாக, மண்டல் எதிர்ப்புப் போராட்டத்தின் போது இடஒதுக்கீட்டுக் கொள்கையை இழிவுபடுத்த பயன்படுத்தப்பட்ட தார்மீகரீதியாக அருவருக்கத்தக்க மொழியானது ‘’சாதி பொதுப் புத்தியின்’’ ஒரு பகுதியாக மாறியது.

இன்று பல சாதியினர் இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைப்பது அதிகரித்துவரும் நிலையில் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் ‘’தகுதி’’ மற்றும் ‘’திறன்’’ ஆகிய வார்த்தைகளை பொது வெளியில் பயன்படுத்துவதை குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அடியாழத்தில், அல்லது சமூக ஊடகங்களில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான மொழி இன்னமும் அப்படியே விஷமாகத்தான் இருக்கிறது. இடஒதுகீட்டிற்கான எதிர்ப்பு தகுதி மற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வைக்கப்படுவதை விட சமூக ஒருங்கிணைப்பு மற்றும் தேச வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் வைக்கப்படுகின்றன. இடஒதுக்கீடு சாதியத்தை அழிப்பதற்கு பதிலாக நீட்டிக்கவே செய்யும் என்பதே தொடர்ந்து அதிகரித்துவரும் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிரான அவர்களது வாதம். ஆனால், இப்போது அதிகம் பேசப்படாத தகுதி, திறன் ஆகிய கருத்தாங்கள் பற்றி இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் ஒரு சந்தேகக் கண்ணோட்டத்தை கைக்கொண்டிருப்பது ஏன் என்பது ஆராய்ந்தாக வேண்டும்.

பணியாளர்களை தெரிவுசெய்வதில் நிறுவனங்களே இப்போது பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன. முதலாவதாக, அரசாங்க வேலைகளுக்கு ஆளெடுப்பது என்பதே ஏறக்குறைய இல்லை என்பதுடன் அப்படி எடுக்கப்படுவதிலும் இப்போதுள்ள ஆட்சியில் தகுதி அல்ல மாறாக சித்தாந்தம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இரண்டாவதாக, தகுதி, திறன் ஆகிய விழுமியங்களின் அடிப்படையில் இடஒதுக்கீடானது நிறுவனத்தின் நலனுக்கு உகந்ததல்ல என்று கருதியவர்கள் இந்த விழுமியங்கள் இடஒதுக்கீட்டில் ஆழமாக பதியப்பெற்றிருப்பதை இப்போது காண்கிறார்கள். விழுமியங்கள் பற்றிய இத்தகைய அங்கீகாரத்தை இடஒதுக்கீட்டிற்கான கோரிக்கையுடன் சேர்த்துவைத்தே பார்க்க வேண்டும். இடஒதுக்கீடு பற்றிய இந்த புதிய சொல்லாடலானது, இடஒதுக்கீடு கொள்கையை தலித் சாதியினருடன் இணைக்கப்பட்டிருந்த களங்கத்திலிருந்து வேறுபடுத்த நமக்கு உதவியிருக்கிறது. இடஒதுக்கீட்டிற்கான கோரிக்கை ஜனநாயகப்படுத்தப்பட்டிருப்பது, இடஒதுக்கீடு என்ற அமைப்பிற்கு எதிரான கடுமை மற்றும் அவதூறை போக்கியிருப்பது திருப்தியளிப்பதாக இருக்கிறது. இது ஒரு நன்மை. இந்தியாவின் பல சாதிப் பிரிவுகளிடையே தீவிரமாக இருந்த சமூகப் பதற்றத்தை இது குறைத்திருக்கிறது என்ற வகையில் இதை ஒரு நல்ல போக்காக சிலர் கருதக்கூடும். ஆனால், அரசாங்கத்திற்கு எதிராக வைக்கப்பட்டக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட அந்த குறிப்பிட்ட அரசாங்கத்திற்கு இத்தகைய கோரிக்கைகள் அழுத்தம் தந்ததாகத் தெரிவியவில்லை.

பல்வேறு சாதிகளும், சமூகங்களும் தங்களை இடஒதுக்கீடு பட்டியலில் சேர்க்கச்சொல்லி மக்களை திரட்டுவது அரசாங்கங்களை பெரிதும் கவலைக்கு உள்ளாக்காது. ஏனெனில் அடிப்படையாக அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கோரி போராட்டம் நடத்தாமல் இடஒதுகீடு கேட்டு போராட்டம் நடப்பதில் பிரச்னை இல்லை. அடிப்படையான கோரிக்கைகள் இல்லாத இத்தகைய போராட்டத்தை எதிர்கொள்வதை உறுதிமொழிகள் அளிப்பது அல்லது நீதிமன்றத்தின் நிலைபாடுகளைக் காட்டி பிரச்னையை இழுத்தடிப்பது ஆகியவற்றின் மூலம் அரசாங்கம் எளிதாக கையாள்கிறது. முரண்நகைக்குரிய வகையில் போராட்டத்தின் இந்த திசைவழியானது பிரச்னைகளுக்கு உறுதியான எந்தத் தீர்வையும் அளிக்காது போக்கு காட்ட அரசாங்கங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. சாத்தியம் மற்றும் சாத்தியமின்மை என்ற இரண்டு நிலைகளுக்கு இடையில் பல்வேறு நிலைபாடுகளை அரசாங்கம் எடுக்க முடியும். உதாரணமாக, மகாராஷ்டிரா அரசாங்கம் மராத்தா சமூகத்திற்கு 16% ஒதுக்கீடு வழங்குவதாக உறுதியளிக்கும் அதே நேரத்தில் நீதிமன்றம் விதிக்கும் தடைகளை காரணம் காட்டுகிறது. பல்வேறு மாநிலங்களில் இடஒதுகீட்டிற்காக போராடுபவர்கள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் தருவதில் கவனத்தை செலுத்துவதாகத் தெரியவில்லை. இத்தகைய போராட்டங்கள் குறைந்தபட்சம் இப்போது அரசாங்கத்தில் பல்வேறு தளங்களில் காலியாக உள்ள 24 லட்சம் வேலைகளை நிரப்ப அழுத்தம் தர வேண்டும்.

மாறாக இடஒதுக்கீட்டில் இடம் கோருவது இருக்கக் கூடிய வாய்ப்புகளில் ஒன்றின் மீது மட்டுமே பெரும் நெருக்கடியைக் கொண்டுவரும். வட இந்தியாவில் ஜாட், குஜ்ஜார், மேற்கு இந்தியாவில் படேல், மராத்தா, தென்னிந்தியாவில் காப்பு போன்ற வேளாண் சாதிகளைச் சேர்ந்தவர்கள் விவசாயம் லாபகரமானதாக இல்லாததால் கல்வியை நோக்கி வருகிறபோது அந்த இடத்திற்கு தாங்கள் மிகத் தாமதமாக வந்துசேர்ந்திருப்பதையும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பது அல்லது இல்லாதிருப்பதையும் காண்கிறார்கள். புதிதாக இடஒதுக்கீடு கோருபவர்கள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசாங்கத்திற்கு நெருக்கடி தரவேண்டும். வேலைகளுக்கு உண்மையிலேயே வாய்ப்பிருக்கும் சூழலில்தான் இடஒதுக்கீட்டின் பலன்கள் சாத்தியமாகும் என்பதை சொல்லத் தேவையில்லை. நல்ல வேலை வாய்ப்புகளை அதிகமாக உருவாக்குவதன் மூலம் மட்டுமே உண்மையான வாய்ப்புகள் உருவாகும்.

Back to Top