ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

செயல்படுகிறது, ஆனால் குறைபாட்டுடன்

சரக்கு மற்றும் சேவை வரி முழுமையாக நடைமுறைபடுத்தப்பட இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு ஆகின்ற நிலையில் வழக்கமான தொடக்க கால சிக்கல்கள் குறைந்திருப்பதுபோன்று தோன்றுகிறது. பண்டங்களின் வகைப்பாடுகளை (classification of commodities) விகிதப் பகுப்புகளாக (rate categories) மாற்றுவது தொடர்பான சில பிரச்னைகள் சரிசெய்யப்பட்டதுடன் வரி செலுத்துவதில் உள்ள சிரமங்களும் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டன. வரி செலுத்துபவர்கள் பதிவு செய்வது கணிசமாக அதிகரித்திருப்பது ஜிஎஸ்டியின் முக்கியமான சாதனைகளுள் ஒன்று. குறித்த காலத்திற்குள் வரி செலுத்துபவர்கள் 70%க்கும் குறைவு என்றாலும் இது வரும் காலத்தில் 90% வரை அதிகரிக்கக் கூடும்.

பல காரணங்களால் ஜிஎஸ்டி இன்னும் சில காலத்திற்கு தொடர்ந்து செய்யப்பட வேண்டிய பணியாகவே இருக்கும். முதலில், வெகு சில விகிதப் பகுப்புகளே இருக்க வேண்டும் என்று ஒரு பொதுக் கருத்து நிலவுகிறது. சிலர் ஒரேயொரு விகிதம் இருக்க வேண்டுமென்றும் சிலர் இரண்டு அல்லது மூன்று விகிதங்கள் இருக்கலாம் என்றும் கருதுகின்றனர். வருவாய் உற்பத்தியில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பொறுத்து வரி விகிதங்கள் ஒழுங்கமைப்படக்கூடிய சாத்தியம் பற்றி நிதியமைச்சர் மறைமுகமாக குறிப்பிட்டதிலிருந்து ஜிஎஸ்டி விவகாரத்தில் இந்த விஷயம் தெளிவாகவில்லை என்பது உறுதி. இரண்டு, வரி செலுத்துவதன் வடிவம் இன்னும் நிலைப்படுத்தப்படவில்லை: வரி செலுத்துவதில் இன்வாய்ஸ் பொருத்தப்பாடு முறையை தொடர்ந்து நீடிப்பதில் ஜிஎஸ்டி கவுன்சில் தீவிரமாக இருக்கையில் இந்த விஷயத்தைப் பற்றிய அறிவிப்புகள் இதில் தொடர்ச்சியான பல மாறுதல்கள் ஏற்படக்கக்கூடும் என்பதை காட்டுகின்றன. மூன்று, சில செயல்பாடுகள் ஜிஎஸ்டியின் எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றன: கச்சா எண்ணை, இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல், வானூர்தி டர்பைன் எரிபொருள், மின்சாரம், மதுபானங்கள், சில வகையான ரியல் எஸ்டேட் வர்த்தக பரிமாற்றங்கள். ஆகவே பொருளாதாரத்தின் மீதும் வருவாயின் மீதும் ஜிஎஸ்டியின் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை ஆராய முற்படும் முன் இந்த அம்சங்களை அடையாளம்கண்டாக வேண்டும். பொருளாதாரத்தின் மீதும் வருவாயின் மீதும் ஜிஎஸ்டியின் தாக்கமானது பெருமளவு நேர்மறையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது என்றாலும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் முழுமையடைந்த பிறகே இது படிப்படியாக சாத்தியமாகும்.

பொருளாதார விஷயத்தில் சமிக்ஞைகள் கலவையாக இருக்கின்ற நிலையில் இதன் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு இன்னும் நிறைய கால அவகாசம் தேவைப்படும். பணமதிப்புநீக்கத்தின் தாக்கத்தை ஜிஎஸ்டியினுடையதிலிருந்து பிரித்துப் பார்ப்பது மிகவும் கடினம். குறைந்திருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் காலாண்டு வளர்ச்சி விகிதமானது ஜிஎஸ்டி அமலான பிறகு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால் பணமதிப்புநீக்கத்திற்கு முன்னர் இருந்த வளர்ச்சி விகிதத்தோடு ஒப்பிடுகிறபோது இது குறைவு. மூலதன உருவாக்கத்திலும் ஓரளவு மீட்சி இருப்பதாகத் தோன்றுகிறது. இந்த நிலைகாட்டிகள் பொருளாதாரம் மேம்படத் தொடங்கியிருப்பதை காட்டுகின்றன.

வருவாயின் அளவானது ஜிஎஸ்டியின் காரணமாக மாறியிருக்கிறது. இது மாநில அரசாங்கங்களை விட மத்திய அரசாங்கத்தின் விஷயத்தில் அதிக உண்மை. வருவாயில் 14% வளர்ச்சி இருக்கும் என மாநிலங்களுக்கு மத்திய அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பெரும்பாலான மாநிலங்களின் வருவாய் வளர்ச்சி விகிதம் 14%த்திற்கு குறைவாகவே இருந்திருப்பதால் மாநிலங்களுக்கு போதுமான வருவாயை விரைவில் அளிக்கும் என்பதை இந்த உறுதிமொழி உறுதிசெய்கிறது. ஆனால் மத்திய அரசாங்கத்தின் விஷயத்தில் ஜிஎஸ்டி ஏற்கனவே இருக்கும் வருவாயை அப்படியே கூடாது குறையாது தொடர்கிற விஷயமாக இல்லை. ஜிஎஸ்டியின் இழப்பீட்டு துணைவரியிலிருந்து (காம்பன்சேஷன் செஸ்) கிடைக்கும் வருவாயானது மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பீட்டை ஈடுகட்டுவதற்கானதாகும் என்பதால் தனது செலவினத் தேவைகளுக்காக மத்திய அரசாங்கம் இந்த வருவாயை எடுத்துக்கொள்ள முடியாது. மேலும், இறக்குமதி செய்யும் வர்த்தகர் உள்ளீட்டு வரி வரவு உரிமை கோருகிற காரணத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டியானது பகுதியளவு மாநிலங்களுக்குச் சொந்தமானது. இந்த இரண்டு விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் கடந்த 12 மாதங்களில் மத்திய அரசாங்கத்திற்கு கிடைத்த வருவாயானது ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முந்தைய 12 மாதங்களில் மறைமுக வரிகளிலிருந்து கிடைத்த வருவாய்க்கு இணையானதாக இல்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால் பிட்மென்ட் குழுவால் வரி விகித கணக்கீடுகள் மிகவும் கவனமாக செய்யப்பட்டபோதிலும் வருவாய் விஷயத்தில் ஜிஎஸ்டியானது முன்னர் இருந்த அதே நிலையை மாற்றமின்றி தொடர்வதாக இல்லை.

ஜிஎஸ்டியிடம் எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான விளைவுகளுள் ஒன்று பொருளாதாரத்தை முறைப்படுத்துவது என்பது. ஜிஎஸ்டியின் வடிவமைப்பானது, அதாவது அதிக அளவில் முழுமையான மதிப்பு கூட்டப்பட்ட வரி, பொருளாதாரத்தின் பெரும்பான்மையான துறைகளை முறையான துறைக்கு கொண்டுவருவதற்கு ஊக்கம் தருவதற்கானதாகும். பொருளாதாரத்தை முறையானதாக்குவது என்பது இரண்டு வடிவங்களை எடுக்கக்கூடும்: இது வரை முறைசாரா துறையாக இயங்கியவை முறையான பொருளாதரத்திற்குள் வருவது அல்லது முறைசாரா துறையினரால் நிறைவேற்றப்பட்டு வந்த தேவைகள் இப்போது முறையான துறைகளால் நிறைவேற்றப்படுவது. இரண்டாவதாக சொல்லப்பட்டதை விட முதலாவதாக சொல்லப்பட்டதில் தனிநபர்களுக்கு பொருளாதாரத்தில் குறைந்த இடையூறே ஏற்படுகிறது. பதிவு செய்யாத விநியோகஸ்தர்களிடமிருந்து (வர்த்தகர்களிடமிருந்து) பொருட்களை வாங்குவதற்கு பதிவு செய்த விநியோகஸ்தர்கள் அத்தகைய விநியோகஸ்தர்களை அறிவித்து அவர்களிடம் வரியை பெற்று அதை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதன் பின்னரே அவர்கள் அதை அரசாங்கத்திடமிருந்து கோரிப் பெறமுடியும். வேறு வார்த்தைகளில் சொன்னால், இத்தகைய பரிமாற்றங்களை முறையாக பின்பற்றப்பட வேண்டியதை இந்த சட்டவிதி விநியோகஸ்தர்களிடமிருந்து வாங்குபவர்களுக்கு மாற்றுகிறது. இது விநியோகஸ்தர்களை பதிவு செய்துகொள்ள ஊக்குவிக்கிறது அல்லது சட்ட விதியை பின்பற்ற வேண்டியிருக்கும் இந்தக் கூடுதலான சுமையை தவிர்க்க விரும்பும் வாங்குபவர்களை வேறு விதத்தில் வாங்கும்படி மாற்றிவிடுகிறது. ஜிஎஸ்டியை இணங்கி ஒழுக வேண்டியதன் காரணமாக ஆகும் செலவு அதிகமாகும் பட்சத்தில், குறிப்பாக சிறிய விநியோகஸ்தர்களுக்கு, பொருளாதார முறையாக்கமானது முறைப்படியற்ற விநியோகஸ்தர்களை இல்லாது ஒழிப்பதன் மூலமே நடைபெறும்.

ஜிஎஸ்டியை இணங்கி ஒழுகுவதன் காரணமாக பதிவு செய்து வரிசெலுத்துபவர்களின் எண்ணிக்கை மற்றும் வரி செலுத்தியவர்கள் எண்ணிக்கையில் முன்னேற்றம் இருந்து ஆனால் வருவாயில் முன்னேற்றம் இல்லையெனில் ஜிஎஸ்டி நடைமுறையில் இன்னமும் முழுமையடையவில்லை என்பதையே அது காட்டுகிறது. பொருளாதாரத்தின் நலனை மனதில் கொண்டு ஜிஎஸ்டி கவுன்சில் இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்வதுடன் ஜிஎஸ்டியை இணங்கி ஒழுகுவதற்கான செலவினத்தை குறைக்கும் வழிகளையும் கண்டறிய வேண்டும்.

Back to Top