ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

காஷ்மீரில் பாவனை முடிவுக்கு வந்தது

போர்நிறுத்தத்தையும் யதார்த்தமற்ற கூட்டணியையும் முடிவுக்கு கொண்டுவந்ததன் மூலம் பாஜக தனது பெரும்பான்மைவாத திட்டங்களுக்கான தயாரிப்பு வேலைகளை செய்துள்ளது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

காஷ்மீரைப் பற்றி பெரும் உற்சாகத்துடன், உற்சாகத்தின் அளவு ஆளுக்காள் வேறுபட்டிருந்தது, உருவாக்கப்பட்ட இரண்டு புனைவுகளுக்கு சமீப நாட்களில் சமாதி கட்டப்பட்டிருக்கிறது. பரஸ்பர சந்தேகத்தை அடித்தளமாகக் கொண்டு கட்டப்பட்ட போர்நிறுத்தமும் அரசியலில் முற்றிலும் நேரெதிரான நிலைகளைக் கொண்ட இரண்டு கட்சிகளுக்கிடையிலான கூட்டணியும் முடிவுக்குவந்திருக்கின்றன. ஆனால் இந்த பாவனையை, புனைவைத் தாண்டி, ரம்ஜான் மாத முடிவில் முக்கிய பத்திரிகையாளரும் காஷ்மீர் பொதுவாழ்க்கையில் முக்கிய ஆளுமையுமான ஷுஜாத் புகாரி படுகொலை செய்யப்பட்டது என்பது உண்மை. அதே போன்று ஐநா அமைப்பு ஒன்று காஷ்மீரில் மனித உரிமைகள் குறித்து முதன் முறையாக வெளியிட்டிருக்கும் அறிக்கையின் உண்மைகளும் எந்த சந்தேகத்திற்கு இடமில்லாதவை. ஆனால் இது குறித்து கண்டுகொண்டதாகவே இந்திய அரசாங்கம் காட்டிக்கொள்ளவில்லை.

காஷ்மீரில் போர்நிறுத்தம் அந்தப் பெயரில் அழைக்கப்படவில்லை. சட்டத்திற்கு புறம்பான கிளர்ச்சியாளர்கள் என்று தான் கருதுபவர்கள் விஷயத்தில் இந்தப் பதத்தை பயன்படுத்த இந்திய அரசாங்கம் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக ‘’cease-ops‘’ என்கிற பதத்தை பயன்படுத்துகிறது. இதன் பொருள் வன்மையான நடவடிக்கைகளை குறுகிய காலத்திற்கு நிறுத்திவைப்பது என்பதற்கு மேல் எதுவுமில்லை. ஜம்மு-காஷ்மீரில் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை மக்களுக்கு ரம்ஜான் மாதம் தொடங்கியபோது தாற்காலிக அமைதிக்கான அறிவிப்பு வெளியானது. இந்த நல்லெண்ண நடவடிக்கை வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் அரசியல் வேறு ராணுவம் வேறு என்ற அனைவராலும் மதிக்கப்படும் கொள்கையைப் பற்றி கூட கவலைப்படாது இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி (சீஃப் ஆஃப் ஸ்டாஃப்) பிபின் ராவத் பேசியிருந்தார். ‘’சுதந்திரம்’’ கிடைப்பதென்பது ‘’எப்போதைக்கும் நடக்கப்போவதில்லை’’ என்பதை இளைஞர்களை ஏற்கச்செய்யவேண்டும் என்று காஷ்மீர் உத்தி குறித்து தளபதி ராவத் பேசியிருக்கிறார். அங்கு வன்முறை அதிகரிப்பது என்பது ஒரு பொருட்டேயல்ல. போராளிக் குழுக்களில் புதிதாக ஆட்கள் சேர்ந்துகொண்டிருந்தார்கள் ஆனால் இதனால் எல்லாம் எந்தப் பயனும் இல்லை என்று கூறி ராணுவம் சண்டையிட்டவர்களை ஏற்றுக்கொள்ளவைத்துவிட்டது. ஆகவே இனி பிரச்னையில்லை.

இந்தப் பின்னணியில் ரம்ஜான் மாத போர்நிறுத்தம் கொந்தளிப்பானதாக பகைமை நிறைந்ததாக இருந்தது. ஷோபியன் கிராமத்தில் உள்ளவர்கள் அம் மாவட்ட ராணுவ துருப்புகள் நடத்திய இப்தார் விருந்தை புறக்கணிக்த்ததையடுத்து அங்கு வன்முறை வெடித்தது. ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழகை தொழுகைகளுக்குப் பின்னர் மத்திய சேமக் காவல் படை (சிஆர்பிஎஃப்) ரோந்தை ஆர்பாட்டக்காரர்கள் சுற்றி வளைத்தனர். இதன் விளைவாக பெரும் பதற்றமடைந்த ஓட்டுனர் வாகனத்தை தாறுமாறாக ஓட்டியதால் ஒருவரல் கொல்லப்பட்டார், பலர் பலத்த காயமடைந்தனர்.

அடுத்த நாள் இறுதி ஊர்வலத்தில் ஆர்பாட்டங்கள் வெடித்தன. ஸ்ரீநகர் நாளிதழ் ரைசிங் சன்னின் ஆசிரியர் புகாரி அந்த நிகழ்வுகளின் படங்களை வெளியிடுவது என்று எடுத்த முடிவிற்காக சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டிவந்தது. சமூக ஊடகமான டிவிட்டருக்கே உரிய மொழிநடையில் ‘’சிஆர்பிஎஃப்-ன் செயலை ஆதரிக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு’’ என்றும் ஏனெனில் அது காஷ்மீரை ‘’துண்டு நிலமாக மட்டும்’’ பார்க்கும் பொதுப் பார்வையுடன் ஒத்துப்போகிறது என்று தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்தார். அவரது விமர்சகர்கள் உண்மையிலேயே கவலைகொண்டவர்கள் என்றால் ஏன் ‘’காஷ்மீர் இளைஞர்களிடையே மரணம் பற்றிய அச்சம் இல்லை’’ என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். தலையங்கத்திலும் சரி பல்வேறு பொது விவகாரங்களிலும் சரி குரலில் கீழ்படியாமையும் கருத்துககளில் மிதமான தன்மையையும் கடைபிடிப்பது புகாரியின் அணுகுமுறையாகும். சமீப மாதங்களில், குறிப்பாக 2016 ஜூலையில் வெடித்த வன்முறையிலிருந்து, காஷ்மீருடனான இந்தியாவில் உறவில் கொந்தளிப்பும் பகைமையும் அதிகரித்த நேரத்தில் அவரது குரலில் ஓர் அவசரமும் அழுத்தமும் இருந்தன.

ஜூன் 14 அன்று புகாரியும் அவருக்கு பாதுகாப்பாக இருந்த இரண்டு பாதுகாப்பு வீர்ர்களும் இப்தார் நேரத்தில் அலுவலத்திலிருந்து வெளியே வந்தபோது மிக நெருக்கத்தில் சுடப்பட்டது மிதவாதக் குரலை மெளனமாக்கும் செயலின் உச்சமாகும். இது சூழலின் உண்மை நிலைமையை விளக்குகிறது. இந்தக் கொலையைப் பற்றி யாரும் புலனாய்வு கோரவில்லை. ஏனெனில் காஷ்மீரின் சட்டமின்மை சூழலில் இந்தக் கோரிக்கை பலனற்றது.

பேச்சுவார்த்தை பலனற்றது என்பதை உறுதியாக காட்டும் சமிக்ஞையாக புகாரியின் கொலையை காஷ்மீர் விவகாரத்தில் தீவிர நிலைபாடு எடுக்கும் ஊடகங்கள் பார்க்கின்றன. மனமில்லாது அறிவிக்கப்பட்ட ரம்ஜான் போர்நிறுத்தம் இந்தப் போக்கிற்கு ஓர் உதாரணம். இதற்கு முன்னர் உளவுத்துறையின் தலைவராகவும் இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இருக்கும் அஜித் டோவல் பெயரில் அழைக்கப்படும் கோட்பாட்டின்படி அதிகபட்ச, இடைவிடாத வன்மையான நெருக்கடி தரப்பட வேண்டும். நுண்மையான சாதுரியமான அணுகுறையை இந்தியா வெறுப்பது அது போர்நிறுத்தத்தை ஒருதலைபட்சமாக ரத்து செய்ததிலிருந்தே வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த அணுகுமுறை ஜம்மு-காஷ்மீரின் கூட்டணி ஆட்சியின் ஆதரவைப் பெறப்போவதில்லை என்பதால் மக்கள் ஜனநாயக கட்சியுடனான தனது கூட்டணி உறவை பாரதீய ஜனதா கட்சி முறித்துக்கொண்டு மீண்டும் அங்கு ஆளுனர் ஆட்சியை அமல்படுத்தியுள்ளது.

ஜம்முவில் பெரும்பான்மை இடங்களை வென்று ஆனால் காஷ்மீரில் எல்லா இடங்களில் இல்லாவிட்டாலும் பெரும்பாலான இடங்களில் வைப்புத்தொகையை இழந்த பாஜக ஜம்மு-காஷ்மீரில் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றது. ஆட்சி நிர்வாகத்தில் அதன் செயலூக்கமான பங்கேற்பு என்பதே அதன் விருப்பத்தை திணிப்பதற்காகத்தான். இதன் பலன்கள் அவ்வளவு தெளிவாக இல்லை என்பதுடன் கட்சிக்கு வேறெங்கும் இதனால் பலன் கிட்டவுமில்லை.

இந்தியாவின் தேசிய உரையாடலில் காஷ்மீரி அடையாளம் இல்லாதது குறித்து ஷுஜாத் புகாரி அடிக்கடி கவலை தெரிவித்துவந்தார். ரூசோவின் வார்த்தைகளை கொஞ்சம் மாற்றிச்சொன்னால் மக்கள் என்பவர்கள் தனிநபர்களின் கூட்டுத்தொகை மட்டுமல்ல, அவர்கள் அதற்கும் மேலானவர்கள், அவர்கள் தங்களுக்கிடையே ‘’பொதுவான விருப்பத்தை’’ உருவாக்குவதன் மூலம் தங்களது அடையாளத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள். அப்படியெனில் இப்போது புதிதாக மேற்கொள்ளப்படும் தேசியத் திரட்டல் கணக்கீடுகளில் காஷ்மீருக்கு இடமில்லை. அந்த கணக்கீடுகளுக்கு அது நிலமும் கட்டிடங்களும் நிறைந்த, தங்கள் வசமிருக்க வேண்டிய ஒரு சொத்து மட்டுமே. இப்போதைக்கு அதன் கவனம் முழுவதும் அடுத்து வரவிருக்கும் பொதுத் தேர்தலின் மீதிருக்கிறது. பாஜக உருவாக்க விரும்புவது ‘’பொது விருப்பத்தை’’ அல்ல மாறாக தனக்கு வெற்றி பெற்று தரக்கூடிய பகுதியளவிலான விருப்பத்தைத்தான். ஆக்ரோஷமான பெரும்பான்மை மக்களின் உணர்வுகளே அந்த ‘’பகுதியளவிலான விருப்பம்’’. அதிலிருந்து காஷ்மீரியை விலக்குவதன் மூலம் மட்டுமே அதை உருவாக்க முடியும்.

உலகளாவிய அளவில் ஆக்ரோஷமான பெரும்பான்மைவாதம் நிலவும் சூழலில் காஷ்மீர் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஐநாவின் மனித உரிமைகள் ஆணையரின் அலுவலகம் வெளியிட்ட விமர்சனபூர்வமான அறிக்கையை இந்தியா ஒதுக்கித்தள்ளிய அலட்சியம் எந்த பின்விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. இது அரசு அதிகாரிகளின் பதிலளிக்கும்பொறுப்பை ஆபத்தான அளவிற்கு கீழே கொண்டுசெல்கிறது. காஷ்மீர் மக்களை பொறுத்தவரை வரவிருக்கும் இன்னல்கள் கணக்கிடமுடியாதவை.

Back to Top