ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

சதிக் கூப்பாடு

பாரதீய ஜனதா கட்சிக்குத் தேவையான அரசியல் தருணங்களிலெல்லாம்  மோடியை கொல்ல சதி என்ற பூச்சாண்டி உருவாக்கப்படுகிறது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

ஐந்து மாத ஊசலாட்டத்திற்குப் பிறகு பீமா கோரிகான் வழக்கில் பூனா காவல்துறையினர் மும்பை, நாக்பூர், டெல்லி ஆகிய இடங்களில் பல கைதுகளை செய்துள்ளனர். மனித உரிமை செயற்பாட்டாளர்களான சுதிர் தாவாலே, சுரேந்திர காட்லிங், ஷோமா சென், மகேஷ் ராவத், ரோனா வில்சன் ஆகிய ஐவரும் எல்கர் பரிஷத்துடன் தொடர்பிலிருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். பீமா கோரிகான் இருநூறாம் ஆண்டு விழா கொண்டாட்டாங்களின் போது எல்கர் பரிஷத் வன்முறையை தூண்டியதாக காவல்துறை கூறுகிறது. மேலும், இந்த ‘’நகர மாவோயிஸ்டுகள்’’ பிரதமர் நரேந்திர மோடியை ‘’கொல்ல திட்டமிட்டதாக’’ காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்தக் கைதுகள் நடந்துள்ள நேரம், குறிவைக்கப்பட்டுள்ள இலக்குகள், இந்த அரசியல் நடவடிக்கையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை எல்லாம் பார்க்கிறபோது ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கும் பாரதீய ஜனதாவின் முயற்சி தெரிகிறது.

மத்தியிலும் மகாராஷ்டிராவிலும் ஆட்சியிலிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் சுரத்தற்ற செயல்பாட்டை மறைக்க இந்த பெரிய அளவிலான அரசியல் நாடகம் நடத்தப்படுவதாகத் தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் பீமா கோரிகானில் நடந்த வன்முறையானது மகாராஷ்டிரா முழுவதும் தலித்துகள் மத்தியில் போராட்டங்களையும் கோபத்தையும் உருவாக்கியிருப்பது ஆளும் கட்சிக்கான எச்சரிக்கையாகும். அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 2005, ‘’தவறாக பயன்படுத்தப்படுவதை’’ தடுக்கும் வகையில் பாதுகாப்புகளை மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் உருவாக்கிய போது தலித்துகள் நாடுதழுவிய போராட்டத்தை நடத்தியதையடுத்து இது நிகழ்ந்துள்ள நிலையில் தலித்துகளிடமிருந்து பாஜக அந்நியப்பட்டுப்போனது முழுமையடைந்துவிட்டதாகத் தெரிகிறது.

குடிமை உரிமை செயற்பாட்டாளர்கள், தனக்கு வேண்டாத கட்சிகள், அரசாங்கத்திற்கு எதிராக உருவாகிவரும் தலித்துகளின் கோபம் ஆகிய மூன்றும் பாஜகவால் கடைசியாக எறியப்பட்டுள்ள குண்டின் இலக்குகளாகும். இடதுசாரி மாணவர் அரசியலை களங்கப்படுத்த முயற்சித்தப் பின்னர் தன்னை தீவிரமாக விமர்சித்துவரும் இடதுசாரி குடிமைச் சமூக அமைப்புகளை பாஜக குறி வைத்திருப்பதாகத் தெரிகிறது. குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐவரில் நான்கு பேருக்கு பீமா கோரிகான் நிகழ்வுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதிலிருந்தே பீமா கோரிகான் விவகாரம் ஒரு சாக்கு என்பது தெளிவாகத் தெரிகிறது. ’’ஆதாரங்கள்’’ (கொலைத் திட்டம் தொடர்பான விரிவான கடிதங்கள்) காட்டப்பட்டிருக்கும் விதம் (பல முரண்பாடுகளுடன்) கண்டனத்திற்குரியது. இது போதாதென்று ‘’மாவோயிஸ்டுகளை’’ அரசாங்கத்திற்கு எதிரான கருவிகளாக எதிர்க்கட்சிகள் பயன்படுத்துவதாக தனக்கு இக்கட்டை உருவாக்கியிருக்கும் எதிர்க்கட்சிகளையும் பாஜக குற்றம்சாட்டியிருக்கிறது. ‘’அரை மாவோயிஸ்டுகள்’’ என்ற முற்றிலும் புதிய வகை கருத்தாக்கத்தையே நிதியமைச்சர் அருண் ஜெட்லி உருவாக்கியிருக்கிறார். இரகசியமாக செயல்படும் இயக்கத்தின் வெளிப்படையாக முகமாக இருக்கும் இவர்கள் ‘’செயற்பாட்டாளர்கள் என்ற போர்வையில்” ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் அதை பலவீனப்படுத்தவும் செய்கிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967-ன் கீழ் செய்யப்பட்டிருக்கும் இந்த நியாயப்படுத்த முடியாத கைதுகளின் நோக்கம் அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் தலித்/அம்பேத்கரிய அறிவுஜீவிகள் மற்றும் தலைவர்களை அச்சுறுத்துவதே.

பாஜகவின் இப்போதைய இந்த உத்தி ஒன்றும் புதிதல்ல. தலித்துகளின் கருத்து வேறுபாடுகளையும் நீதிக்கான கோரிக்கைகளையும் மாவோயிஸ்டு சதி என்று முத்திரை குத்துவதென்பது 2006ல் மகாராஷ்டிராவில் கைர்லாஞ்சியில் தலித் குடும்பம் ஒன்று பாலியல் வன்புனர்ச்சி கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதிலிருந்தே செய்யப்பட்டுவருகிறது. தலித் எதிர்ப்பை, உறுதியை சட்டத்திற்கு புறம்பான விஷயமாக்கும் உத்தியானது தலித்துகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக ஜனநாயக மற்றும் அரசமைப்புசட்ட வழிமுறைகளில் மீண்டும் மீண்டும் காட்டிவந்திருக்கும் நம்பிக்கையை ஏமாற்றுவதாகும். வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் சேர்த்து பார்க்கிற போது தலித்துகளுக்கு நீதிமன்றங்களின் மூலமோ அல்லது போராட்டங்களின் மூலமோ நீதி கிடைக்கப்போவதில்லை என்ற முடிவுக்குத்தான் ஒருவர் வர முடியும். இந்த நிலையில் தலித்துகள் தேசவிரோதிகளாக மாறும் ஆபத்தை விட முன்பு இருந்ததைப் போல் இந்த நாடு தலித் விரோத நாடாக மாறும் ஆபத்தையே நாம் பார்க்கிறோம்.

பாஜகவிற்கு பீமா கோரிகான் ஒரு திருப்புமுனை நிகழ்வு. பூனாவில் பீமா கோரிகான் நினைவுதினத்திற்கு முன்னதாக நடந்த எல்கர் பரிஷத்தில் பாஜகவின் ஆட்சியை ‘’புதிய பேஷ்வா ஆட்சி’’ என இடதுசாரி முற்போக்கு சக்திகள் அழைத்தது (ஈபிடபிள்யு, 6 ஜனவரி 2018) இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட, தலித் சாதியினரை திரட்டுவதற்கான ஆற்றல் மிகுந்த அரசியல் உருவகமாகும். சாதி எதிர்ப்பு இயக்கங்கள், எதிர்க்கலாச்சாரம் ஆகியவற்றில் நீண்ட வரலாற்றைக் கொண்ட மகாராஷ்டிரா போன்ற மாநிலத்தில் இந்த உருவகம் சங் பரிவாரத்தின் வாய்ப்புகளை பெரிதும் பாதிக்கும் என்பதுடன் நாட்டின் பிற பகுதிகளுக்கும் அது பரவக்கூடும். பீமா கோரிகானுக்குப் பிறகு எழுந்த கோபத் தீயை அணைக்க அரசாங்கம் முயன்ற அதே வேளை அந்த நிகழ்வு அம்பேத்கரிய குழுக்களுக்கும் கட்சிகளுக்கும் புத்துயிரூட்டி மகாராஷ்டிரா அரசியலின் மைய அரங்கிற்கு கொண்டுவந்திருக்கிறது. மேலும், தலித்துகளுக்கு எதிரான கும்பல் வன்முறையில் அவர்களையே குற்றம்சாட்டுவது என்பது இந்துத்துவா குழுக்கள் அந்த வன்முறையை தூண்டிவிட்டதை மறைக்க ஆளும் கட்சி செய்யும் முயற்சியாகும். பீமா கோரிகான் வன்முறைக்கு காரணமாக இருந்ததாக சொல்லப்படும் சம்பாஜி பிடே மறும் மிலிந்த் ஏக்போட்டேவின் கைதுகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கடந்த இரண்டு மாதங்களாக மும்பையிலும் கோலாபூரிலும் ஊர்வலங்களும் எதிர் ஊர்வலங்களும் நடந்துவருகின்றன. ஆகவே பீமா கோரிகான் விவகாரத்திற்கு பின்னால் இருக்கும் இயக்கத்தை தீவிரவாதமாகவும் அரசுக்கு எதிரானதாகவும் காட்டுவதை, உள் நெருக்கடிகளை உருவாக்கி தலித் கோபத்தை ஒன்றுமில்லாதாக்குவதற்கான முயற்சியாக நாம் பார்க்க வேண்டும்.

’’மோடியை கொல்ல திட்டம்’’ செய்தி மையநீரோட்ட ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியபோதிலும் பாஜக எதிர்பார்த்த அனுதாபத்தை அது பெற்றுத்தரவில்லை. மாவோயிஸ்டுகளுடன் எதிர்க்கட்சிகள் தொடர்புபடுத்தப்பட்டபோதிலும் அது பற்றி அஞ்சாது எதிர்க்கட்சிகள், சரத் பவாரின் தேசிய காங்கிரஸ் உட்பட, இந்தக் கைதுகளையும் அச்சுறுத்தல்களையும் கடுமையாக கண்டித்திருக்கின்றன. குஜராத்தின் முதலமைச்சராக இருந்த நாள் முதலே மோடி இக்கட்டான நிலையில் இருக்கும்போதெல்லாம் இந்த பூச்சாண்டி காட்டப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது. சதித்திட்டம் பற்றி கூப்பாடு போடும் மற்றும் பிரதமரின் உடற்பயிற்சி பற்றி சமூக ஊடகங்களில் தினசரி விவரிக்கும் நிலைக்கும் பாஜக வந்துவிட்டது என்பதை அதற்கு எதிரான விமர்சனத்தை திசைதிருப்ப அக் கட்சியின் பாதுகாவலர்கள் படும் பரிதவிப்பு காட்டுகிறது. ஒரு தனிமனிதரின் கட்சியாக இன்று பாஜக ஆகிவிட்டதையும், அந்தத் தனிமனிதரை பேணிக்காப்பதே கட்சியை பேணிக்காப்பது என்றாகிவிட்டதையும் இது அம்பலப்படுத்துகிறது.

Back to Top