தணிக்கை மோசடி
தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் தனக்கிடப்பட்ட ஆணையை நிறைவேற்ற அரசாங்கம் அதன் விஷயத்தில் கவனம் செல்லுத்த வேண்டும்.
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
கடந்த 15 ஆண்டுகளாக, குறிப்பாக 2013லிருந்து, கார்ப்போரேட் நிறுவனங்களின் மோசடி குறித்து புலனாயும், குறிப்பாக உயர்மட்ட அளவிலான முக்கியமான வழக்குகளை புலனாயும் முதன்மையான நிறுவனமாக தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் (சீரியஸ் ஃபிராட் இன்வெஸ்டிகேஷன் ஆபீஸ்; எஸ்.எஃப்.ஐ.ஓ.) உருவாகியுள்ளது. அப்படியிருக்க கார்ப்போரேட் நிறுவனங்களின் தவறான நடவடிக்கைகளை புலனாய்வு செய்யவேண்டிய ஓர் அமைப்பு ஆற்ற வேண்டிய பணிகளில் ஒரு சிலவற்றை மட்டுமே செய்ய முடியும் என்கிற அளவிற்கு அதன் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஏன்?
அரசாங்க அலுவலகங்களில் போதுமான அளவிற்கு பணியாளர்கள் இல்லாதிருப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. ஆனால், கம்பெனிகள் சட்டம் 2013ன் கீழ் சட்டப்படியான அதிகாரங்கள் அளிக்கப்பட்ட பிறகு எஸ்.எஃப்.ஐ.ஓ.வின் பொறுப்புகள் அதிகரித்துள்ளன. 2014 ஏப்ரல் முதல் 2018 ஜனவரி வரை அதற்கு 447 கம்பெனி புலனாய்வு வழக்குகள் தரப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த தரவுகளிலிருந்து தெரியவருகிறது. இது இந்த அமைப்பு 2003ல் தொடங்கப்பட்டதிலிருந்து அதற்கு தரப்பட்ட 667 வழக்குகளில் இது 67% ஆகும். 2014-15லிருந்து அதற்கு அளிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை 133 என்ற நிலையிலேயே தேங்கியிருக்கிறது, 69 இடங்கள் காலியாக இருக்கின்றன.
கார்ப்போரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த எஸ்.எஃப்.ஐ.ஓ. தன்னை ஒரு ‘’பல்துறை’’ அமைப்பாக கூறிக்கொள்கிறது. பொருளாதாரத்துறையில் செய்யப்படும் ஏய்ப்புகளை, மோசடிகளை புலனாய்வதற்குத் தேவையான தடயவியல் தணிக்கை, கார்ப்போரேட் சட்டம், தகவல்தொழில்நுட்பம், மூலதன சந்தைகள், வரி மற்றும் இவை தொடர்பான மற்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை பயன்படுத்துவதாக இந்த அலுவலகம் கூறுகிறது. கார்ப்போரேட் தணிக்கை மற்றும் ஆட்சி நிர்வாகம் குறித்து நரேஷ் சந்திரா குதலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அடல் பிகாரி வாஜ்பாயின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் 2003 ஜூலை 2ஆம் தேதி இந்த அமைப்பை உருவாக்கியது. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2013ஆம் ஆண்டின் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் சட்டப்படியான அதிகாரங்களை இந்த அமைப்பு பெற்ற போதிலும் கைது செய்வதற்கான அதிகாரம் இதற்கு 2017 ஆகஸ்டில்தான் வழங்கப்பட்ட்டது. இந்த அமைப்பிற்கு பல்வேறு துறைகள் தொடர்பான நிபுணத்துவம் தேவை என்பதும் பல்வேறு துறைகளில் பணிபுரியும் குடிமைப் பணி அதிகாரிகளை குறுகிய கால பணிக்கு இந்த அமைப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்பதும் தெரிந்த ஒன்று.
எந்த அளவிற்கு நிதி மோசடி நடந்திருக்கிறாது அல்லது எந்த அளவிற்கு பொதுமக்களின் நலன் சம்பந்தப்பட்டது என்பதன் அடிப்படையிலேயே எஸ்.எஃப்.ஐ.ஓ.விற்கு வழக்குகள் ஒதுக்கப்பட்டன. சமீபத்தில் பஞ்சாப் தேசிய வங்கியில் நடந்த மிகப் மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி வழக்கும் எஸ்.எஃப்.ஐ.ஓ. வசம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் கார்ப்போரேட்டுகளின் ஏய்ப்புகள் பற்றிய பல வழக்குகள் இந்த அமைப்பால் புலனாயப்பட்டுள்ளது. 2ஜி அலைக்கற்றை விவகாரம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் வழக்கு, சாரதா சிட் பண்ட் வழக்கு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி போன்றவை இவற்றுள் அடக்கம். இந்த வழக்குகள் பலவற்றில் குற்றத்திற்கு தணிக்கையாளர்கள் உதவியிருக்கிறார்கள் அல்லது குற்றங்களை கண்டுகொள்ளாது இருந்திருக்கிறார்கள் என்பதை எஸ்.எஃப்.ஐ.ஓ. கண்டுபிடித்திருக்கிறது. இந்தியாவின் ஆகப் பெரிய முதல் 100 நிறுவனங்கள் மற்றும் முதல் பெரிய 500 நிறுவனங்களில் மூன்றில் ஒரு பகுதி தங்களது கணக்குகளை ‘’எப்படியோ அட்ஜஸ்ட்’’ செய்வதாக எஸ்.எஃப்.ஐ.ஓ.-வின் 2015ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. சில வழக்குகளில் தவறாக நடந்துகொள்ளும் தணிக்கையாளர்கள் குறித்து புலனாய்வு செய்யும்படி இன்ஸ்ட்டியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்ட்டன்ஸ் ஆஃப் இந்தியாவை எஸ்.எஃப்.ஐ.ஓ கேட்டுக்கொண்டது. இதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. அமெரிக்காவிலும் உலகின் பல பாகங்களிலும் கார்ப்போரேட் நிறுவனங்களும் எளிதில் வளைந்துகொடுக்கும் தணிக்கையாளர்களும் கூட்டு சேர்ந்தபோது நிதித் துறையானது பெரும் வளர்ச்சி கண்டது. இறுதியில் இது 2007-08ல் உலகளாவிய நிதி நெருக்கடி உருவாவதில் முடிந்தது. இந்த நிலை உருவாகக் காரணமான பல நிறுவனங்களின் தணிக்கை அறிக்கைகள் எதற்கும் தகுதியற்றவையாக இருந்ததும் தெரிய வந்தது.
சுதந்திரமான, நன்கு செயல்படும் எஸ்.எஃப்.ஐ.ஓ.வானது கார்ப்போரேட்டுகளின் பேராசையையும் அவற்றுடன் கூட்டுசேர்ந்து வேலை செய்யும் தணிக்கையாளர்களையும் கண்காணிப்பதன் மூலம் சட்டத்தையும், சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் நலனையும் பாதுகாக்க முடியும். இதை சாதிப்பதற்கு இத்தகைய புலனாய்வுகளை திறம்பட செய்யக்கூடிய நிபுணர்கள் அதற்குத் தேவை. இத்தகைய விஷயங்களில் போதுமான அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட அதிகாரிகள் மிகக் குறைவு என்பது எஸ்.எஃப்.ஐ.ஓ. வில் போதுமான அதிகாரிகள் இல்லாததற்கு சொல்லப்படும் காரணங்களுள் ஒன்று. வழக்குகளின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கும் நிலையில் வெவ்வேறு துறைகளிலிருந்து குறுகிய கால பணிக்காக எஸ்.எஃப்.ஐ.ஓ.விற்கு அதிகாரிகளை அனுப்புவதை விடுத்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட முழுநேர அதிகாரிகளை பணிக்கமர்த்துவதைப் பற்றி யோசிக்க வேண்டும். தனியார் நிறுவனங்களிலிருந்து ஆட்களை குறுகிய காலத்திற்கு பணிக்கமர்த்துவதும் பிரச்னைகளுக்குரியதே (தனியார் நிறுவனங்கள் தரும் சம்பளம் மிக அதிகம் என்ற நிலையில் அதே சம்பளத்தை அரசாங்கம் தருவது கடினம் என்பதுடன் இவர்கள் தங்களது முதலாளிகளுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பதாலும் இது பிரச்சனைக்குரியது). எஸ்.எஃப்.ஐ.ஓ.விற்கென்று தனியே நிரந்தரமான அதிகாரிகள், பணியாளர்கள் வேண்டுமென்பது ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும் அது நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. வீரப்ப மொய்லியின் தலைமையிலான நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவானது (டிசம்பர் 2017ல் வெளியான 33ஆவது அறிக்கை; 2018 மார்ச்சில் வெளியான 59ஆவது அறிக்கை) ‘’பணிக்கு ஆளெடுப்பதற்கான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டபோதிலும் இன்னமும் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இது வழக்குகளை வேகமாக முடிப்பதற்கான திறனையே முடக்குகிறது என்று கண்டறிந்தது.’’ ஆகவே இந்த அமைப்பிற்கென்று தனியாக நிரந்தர அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள்.
எஸ்.எஃப்.ஐ.ஓ.வில் அதிக அதிகாரிகள் பணிக்கமர்த்துவதை உறுதி செய்ய முடியும் என்றாலும் பிற துறைகள் போதுமான அதிகாரிகள், பணியாளர்கள் இன்றி வாடுகின்றன. உதாரணமாக, நெடுங்காலமாக இருந்துவரும் அமைப்பான மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) போதுமான அளவிற்கு பயிற்சியளிக்கப்பட்ட அதிகாரிகள் இல்லாத பிரச்னையை எதிர்கொண்டுள்ள மற்றொரு அமைப்பு. 2017 மார்ச் மாத நிலவரப்படி சிபிஐ-ன் 7,274 பணியிடங்களில் 20% காலியாக இருக்கின்றன.
போதுமான பணியாளர்கள் இல்லாத பிரச்னைக்கு அரசியல் உறுதியின்மையும் ஒரு காரணம். நிதி மோசடியையும் ஊழலையும் தீவிரமான பிரச்னைகளாக தான் கருதுவதாக கூறிக்கொள்ளும் இந்த அரசாங்கம் எஸ்.எஃப்.ஐ.ஓ. மற்றும் சிபிஐ போன்ற முக்கியமான புலனாய்வு அமைப்புகள் தங்களது பணிகளை திறம்பட ஆற்றத் தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்களை பணிக்கமர்த்த தேவையானவற்றை செய்யவில்லை என்பதே யதார்த்தம்.