ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

என்கவுன்ட்டர்கள் என்ற போர்வையில் படுகொலைகள்

‘‘வளர்ச்சி’’யும் கட்சிரோலியில் ‘‘மாவோயிஸ்டுகள்’’ படுகொலையும்

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

ஏப்ரல் 22ஆம் தேதி காலை மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் பாமாராகட் வட்டத்தில் போரியா கிராமத்திற்கும் கசன்சூர் கிராமத்திற்கும் இடையே மாவோயிஸ்ட் குழு ஒன்று முகாமிட்டிருந்தது. சிலர் காலையுணவு உண்டுகொண்டிருக்க மற்றவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அங்கிருப்பதைப் பற்றி துப்பு கிடைத்த மத்திய சேமக் காவல் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் சி-60 கமான்டோக்கள் மாவோயிஸ்டுகளை சுற்றிவளைத்து கண்மூடித்தனமாக அனைவரையும் சுட்டுத்தள்ளினர். என்கவுன்ட்டரில் 16 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக கூறிய காவல்துறை தெரிவுசெய்யப்பட்ட சில பத்திரிகையாளர்களை மட்டும் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அழைத்துச்சென்றது. அவர்களும் அதிகாரப்பூர்வமான தகவலை அப்படியே விசுவாசத்துடன் வெளியிட்டனர். அடுத்த நாள் மற்றொரு என்கவுன்ட்டரில் ஆறு மாவோயிஸ்டுகளை கொன்றதாக காவல்துறை கூறியது. இந்த முறை ஜிமல்கட்டா காடுகளில் உள்ள ராஜாராம் கந்லா என்ற இடத்தில். பின்னர் ஏப்ரல் 24ஆம் தேதி இந்திராவதி ஆற்றில் 15 உடல்களை மீட்டதாக காவல்துறை கூறியது. இவர்கள் ஏப்ரல் 22ஆம் தேதி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிடுகள். தொடர்ந்து மேலும் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆக, மொத்தத்தில் இரண்டு என்கவுன்ட்டர்களில் 40 ‘‘மாவோயிஸ்டுகள்’’ கொல்லப்பட்டனர். ‘‘என்கவுட்டர் நிபுணர்களுக்கு’’ விருதுகளும் பதவி உயர்வுகளும் காத்திருக்கின்றன, இந்த நிகழ்வு கொண்டாட்டத்திற்கு உரியதானது.

ஆயுதம் ஏந்திய போராளிகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கையானது ஆயுதம் ஏந்தியவர்கள் மற்றும் ஏந்தாந்தவர்களுக்கு இடையிலான வித்தியாசத்தை வேண்டுமென்றே தெளிவற்றதாக்குகிறது. இறந்தவர்களில் 22 பேர் மட்டுமே தங்களது உறுப்பினர்கள் என்று மாவோயிஸ்டுகள் கூறுகின்றனர். மேலும், காணவில்லை புகாரை சில பெற்றோர் அளித்தபோதுதான், ஏப்ரல் 21ஆம் தேதி இரவு காட்டிபள்ளி என்ற கிராமத்திலிருந்து கசன்சூருக்கு ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள இளம் ஆண்களும் பெண்களுமாக எட்டு பேர் சென்றுகொண்டிருந்த போது காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர் என்பது தெரியவந்தது. பின்னர் இவர்களது உடல்கள் இறந்துபோன மாவோயிஸ்டுகளின் உடல்களுடன் சேர்க்கப்பட்டு ஏப்ரல் 22 அன்று நடந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டது என்று நம்பப்படுகிறது. இறந்துபோன மாவோயிஸ்டு தலைவர்களுள் ஒருவரின் தந்தை தனது மகனின் கழுத்தில் ஆழமான கோடாரி வெட்டு இருந்ததை பார்த்தார். இது சித்திரவதையும் கொடூரமும் நடந்துள்ளது என்பதை காட்டுகிறது ஆனால் அரசாங்கம் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.

அரசாங்கம் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ள விஷயம் என்னவெனில் தாதுப்பொருட்களை வெட்டியெடுக்கும் திட்டங்களில் பெரும் வர்த்தக நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்ட வேண்டும், கிடைக்கும் உபரியில் இந்தத் திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவருவதற்காக செயல்பட்ட அரசியல் தலைவர்களுக்கும் ஊழல் அரசாங்க அதிகாரிகளுக்கும் பங்குகள் போக வேண்டும் என்பது பற்றிதான். தங்களது மலைகளை, காடுகளை, ஆறுகளை இந்த சுரங்கத் திட்டங்கள் அழிக்கின்றன, அத்துமீறி நுழையும் முதலாளித்துவ கலாச்சாரம் தங்களுடைய கலாச்சாரத்தை அழிக்கின்றன என்று மடியா கோண்டுகளும் பிற காட்டுவாழ் மக்களும் தாதுப்பொருட்கள் தோண்டியெடுக்கப்படுவதை எதிர்க்கின்றனர். அவர்கள் வேண்டுவது என்னவெனில் சிறிய அளவிலான காட்டு உற்பத்திப் பொருட்களை ஆதாரமாகக் கொண்ட சிறு தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதும் அவை கிராம பஞ்சாயத்துக்களால் மேலாண்மை செய்யப்படுவதும் ஆகும். அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய காட்டு வாழ் மக்கள் (காட்டு உரிமைகள் அங்கீகரம்) சட்டம், 2006, பஞ்சாயத்துகள் (அட்டவணைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டம், 1996 ஆகிய இரண்டு சட்டங்களும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வேண்டுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, வளர்ச்சித் திட்டங்களுக்காக காட்டு நிலங்களை அளிக்க வேண்டியிருக்கும் பகுதிகளில் கிராம பஞ்சாயத்துகளிடம் முழு விவரங்களை தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற கொள்கையை அரசாங்கம் மதிக்க வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட உரிமைகளை அவர்கள் கூட்டாக சேர்ந்து கோரும் போது உள்ளூர் தலைவர்கள் மீது போலி வழக்குகளை பதிவு செய்வது, அவர்களை அரசின் வன்முறைக்கு ஆளாக்குவது போன்றவை நடக்கின்றன. ஒடுக்குமுறையை நீடிக்கச்செய்யும், மறு உற்பத்தி செய்யும் வன்முறையை அவர்கள் எதிர்க்கும் போது மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள், சுரங்கத் திட்டங்களின் நலன்களை காப்பாற்ற ராணுவமயமாக்கப்படுவது அதிகரிக்கிறது.

கட்சிரோலியில் 2007ல் லாயிட் மெட்டல்ஸ் நிறுவனம் சுரங்கத்திற்கான ஒப்பந்தத்தை பெற்றபோது சுரங்கத் திட்டங்களுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு துவங்கியது. அடுத்தடுத்து பல சுரங்கத் திட்டங்கள் தொடர்ந்து வந்தன. அதில் ஒன்றுதான் கோபானி அயர்ன் அன்ட் பவர். இது சுற்றுச்சூழல், காடு, மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்தின் காட்டு ஆலோசனை குழுவால் பரிந்துரைக்கப்பட்டது. மடியா கோண்டுகள் புனிதமாகக் கருதும் சுர்ஜாகட் மலைகளும் கூட இதற்குத் தப்பவில்லை. மடிகா கடவுளான தாக்கூர்டியோவின் புனித உறைவிடம் இந்த மலைகள் என்ற நம்பிக்கை இருப்பது ஒரு புறமிருக்க உள்ளூர் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பாபுராவ் ஷெட்மேக் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்து அந்த மலையடிவாரத்தில் தளம் அமைத்திருந்ததை மக்கள் நினைவுகூர்கிறார்கள். சுரங்கங்கள் அமைக்கப்படும் இடங்களை தாங்கள் வாழுமிடங்களில் ஏற்பட்ட ‘‘ஆழமான சிவந்த காயங்கள்’’ என்றும், கலாச்சாரத்தை, சூழியலை பாழ்படுத்துபவை, உணவையும் தண்ணீரையும் இல்லாமலாக்குபவை, பொருளாதார வாழ்வையே ஆபத்திற்குள்ளாக்குபவை என்று பழங்குடி மக்கள் பார்க்கின்றனர்.

ஞானம் கொண்ட மடியா கோண்டுகள் பார்க்கும் ‘‘ஆழமான சிவந்த காயங்களை’’ இருப்பதையே சரக்கு வழிபாட்டின் பிடியிலிருக்கும் ஆளும் தரப்பு மறுக்கிறது. ‘‘இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் உள்ள அப்பாவி பழங்குடி/உள்ளூர் மக்களை மாவோயிஸ்டுகள் தவறாக வழிநடத்துகிறார்கள், கவர்ந்திழுக்கிறார்கள்’’ என்று உள்துறை அமைச்சகத்தின் ‘‘இடதுசாரி தீவிரவாதப் பிரிவு’’ கூறுகிறது. ஆகவே அரசாங்கமானது தனது ‘‘காவல் படைகளை நவீனமயமாக்கும் திட்டம் என்ற பெரிய திட்டத்தின்’’ ஒரு பகுதியாக ‘‘மீடியா பிளான் ஸ்கீம்’’ என்பதையும் வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் தெரிந்தெடுக்கப்பட்ட ஊடக நிறுவனங்களை அரசாங்கம் தனது திட்டங்களின் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும்.  மாவோயிஸ்டுகளின் காரணமாக ‘‘இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது குடிமைச் சமூகத்தாலும் ஊடகங்களாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்’’ என்பது அரசாங்கத்தின் பிரச்சாரம். கமான்டோக்கள் மட்டுமல்லாமல் ஊடகங்களின் சில பிரிவினரும் கட்சிரோலியில் ‘‘மாவோயிஸ்டுகள்’’ பயங்கரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை கொண்டாடினர். அரசாங்கம் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. இனி ‘‘இடதுசாரி தீவிரவாதத்தின் தாக்கத்தால் பின்னடைவு ஏற்பட்டுவிட்ட’’ ‘‘வளர்ச்சி செயல்பாடு’’ அதாவது ‘‘ஆழமான சிவந்த காயங்களை’’ ஏற்படுத்துவது என்பது செழித்து வளரும்.

Back to Top