இந்த அரசாங்கத்தின் பெரும்பான்மைவாத அரசியல் நமது ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்துகிறது.
தீவிரவாதத்திற்கு எதிரான முக்கியமான வழக்குகளில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிப்போக்குகள் இந்தியாவில் நீதித்துறை அமைப்பு பெரிதும் பலவீனப்படுத்தப்பட்டுவருவதை காட்டுகிறது. மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு, நரோடா பட்டியா கலவர வழக்கு, ஷொராபுதின் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி வழக்கு ஆகியவற்றில் குற்றம்சாட்டப்பட்டிருந்த சுவாமி அசீமானந், மாயா கோடானி மற்றும் பலரும் வழக்குகள் நடத்தப்பட்ட விதம் ஐயத்திற்குரிய வகையில் இருந்த காரணத்தால் பலனடைந்துள்ளனர், இந்த வழக்குகளில் நீதி சென்றிருக்க வேண்டிய திசை மாறிவிட்டது. நீதித்துறையின் செயல்பாட்டை பலவீனப்படுத்துவதற்காக இந்த அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் மாக்கியவல்லி திட்டத்தையே இந்த வளர்ச்சிப்போக்குகள் காட்டுகின்றன.
மெக்கா மசூதி குண்டுவெடிப்பை நிகழ்த்துவதில் சூத்திரதாரியாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட அசீமானந்த் மற்றும் நான்கு பேரை 2018 ஏப்ரல் 16ஆம் தேதி தேசிய புலனாய்வு கழகத்தின் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. வலுவான ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்வதாக நீதிபதி குறிப்பிட்டார். 2007 மே மாதம் ஐதராபத்திலுள்ள சார்மினார் அருகே இருக்கும் 17ஆம் நூற்றாண்டு மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைகள் நடந்துகொண்டிருந்தபோது நடந்த குண்டுவெடிப்பில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் 58 பேர் காயமுற்றனர். முதலில் காவல்துறை கேள்விமுறையின்றி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து அவர்கள் மீது தீவிரவாத குற்றச்சாட்டுகளை சுமத்தி பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் சேர்ந்து இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக ஒப்புக்கொள்ளும்படி அவர்களை சித்திரவதை செய்தது. இந்துத்துவா தீவிரவாதிகளால் திட்டமிடப்பட்டு இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது என்பதை மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) வெளிப்படுத்திய பிறகு காவல்துறையின் இட்டு கட்டிய கதை அம்பலமானது.