பனிப்புகையால் மூடப்படுவது என்பது டெல்லியில் ஆண்டுதோறும் நிகழும் விஷயம். அதைப் பற்றிய உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் அப்படியே. இது பெரும் நெருக்கடி என்று நமக்கு சொல்லப்படுகிறது. ஹரியானவையும் பஞ்சாபையும் டெல்லி குற்றம்சாட்டுகிறது; ஹரியானவும் பஞ்சாபும் டெல்லியை குற்றம்சாட்டுகின்றன. எல்லோரும் சேர்ந்து மத்திய அரசாங்கத்தை குற்றம்சாட்டுகின்றனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக செல்லம் கொடுத்து சீராட்டப்படும் மாநகரத்தின் பாதிக்கப்பட்ட குடிமக்கள் தினமும் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறார்கள். சுத்தமான காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு என்பது தொலைதூரக் கனவாக இருக்கிறது. ஏழைகளைப் பொறுத்தவரை, இளைஞர்களுக்கும் சரி வயதானவர்களுக்கும் சரி, உயிருடன் இருக்க சுவாசிக்க வேண்டும் அல்லது சுவாசித்து சாக வேண்டும் என்ற இரண்டே வாய்ப்புகள்தான் இருக்கின்றன. இந்த கோரமான உண்மை பல தலைசிறந்த நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. மாசுபட்ட காற்றின் காரணமாக இந்தியாவில் 2015ல் 25 லட்சம் பேர் இயற்கையாக தங்கள் காலம் முடியும் முன்னரே இறந்துவிட்டனர் என்று பிரிட்டனின் ஆராய்ச்சி இதழான லேன்செட் குறிப்பிடுகிறது.
இந்த ஆண்டு டெல்லி பனிப்புகையால் மூடப்பட்டது நவம்பர் 7ஆம் தேதியாக இருக்கலாம், ஆனால் பல ஆண்டுகளாக இல்லாவிட்டாலும் பல மாதங்களாகவே அதற்கான சூழல் உருவாகிக் கொண்டிருந்தது. 2002லிருந்தே அனில் அகர்வாலும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையமும் தலைநகரக் காற்றின் தரம் பற்றி எச்சரிக்கை மணி ஒலித்ததுடன் எல்லா பொதுப் போக்குவரத்திற்கும் டீசலுக்கு பதில் இயற்கை எரிவாயுவை பயன்படுத்த வேண்டுமென கூறிவந்ததிலிருந்தே நெருக்கடி இருப்பது தெரிந்ததே. ஆனால் எதுவும் செய்யப்படாத நிலையில் இன்று டெல்லி பேரிடரில் சிக்கியிருக்கிறது. மெட்ரோ ரயில் கட்டப்பட்ட போதிலும் டெல்லியின் அகலமான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மேலும் மேலும் அதிகரிக்கிறது. டீசல் லாரிகள் இன்னமும் நகரத்திற்குள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன; திடக்கழிவுப் பொருட்கள் வெட்டவெளியில் எரிக்கப்படுகின்றன; மாசுக்கட்டுப்பாடு விஷயத்தில் தொழிற்சாலைகள் கண்காணிக்கப்படுவதில்லை; மாநகரத்தில் இருக்கும் அனல் மின் நிலையங்கள் சல்பர் டைஆக்சைடை கக்குகின்றன, சாம்பல் துகள்களை வெளியேற்றுகின்றன; நூற்றுக்கணக்கான டீசல் மின்னாக்கிகள் (ஜெனரேடர்) நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன. இவையனைத்தும் சேர்ந்து மாநகரக் காற்றை குளிர்காலத்தில் மட்டுமல்ல ஆண்டு முழுவதும் விஷமாக்குகின்றன, குளிர்காலத்தில் அது பனிப்புகையாக வெளிப்படையாகத் தெரிகிறது.