மகராஷ்டிராவின் விதர்பா பகுதியில் நிறைவேற்றப்படாது தேங்கிக்கிடக்கும் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மற்றும் தீவிர விவசாய நெருக்கடியின் காரணமாக கடந்த 16 ஆண்டுகளில் அதன் ஆறு மாவட்டங்களில் 14,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து யாவத்மால் மாவட்டம் மற்றும் பிற பகுதிகளிலுள்ள விவசாயத் தொழிலாளர்களும், சிறு விவசாயிகளும் மற்றொரு வகையான பேரிடருக்கு ஆளாகிவருகின்றனர். பூச்சுக்கொல்லி மருந்துகளால் நஞ்சு உட்கொள்வதன் விளைவாக உருவாகும் நோய்க்குறிகளின் காரணமாக இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதத்திலிருந்து 19 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சமீப காலம் வரை இந்தப் பிரச்னை அரசாங்கத்தின் கவனத்தையோ ஊடகங்களின் கவனத்தையோ ஈர்க்கவில்லை. பொதுமக்களிடையே விவசாயிகளின் தற்கொலை ஏற்படுத்திய கோபம், விவசாயத்தின் நிலை ஆகியவற்றின் காரணமாக மாநில மத்திய அரசுகள் இத்தகைய நிகழ்வுகள் மீது அதிக கண்காணிப்புடன் இருந்திருக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் உடலில் நஞ்சு கலந்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் பலர் இறந்தபோதும் தடுப்பு நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. யாவத்மால் மாவட்டத்தில் ஏற்பட்ட 19 சாவுகள் உட்பட மொத்தம் 30 பேர் இறந்திருப்பது பூச்சிக்கொல்லி மருந்துகள் விஷயத்தில் கட்டுப்பாடுகள் தேவைப்படுவதையும் அவற்றின் பயன்பாடு தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் காட்டுகிறது.
2002ல் பி.டி. பருத்தி விற்பனை இந்தியாவில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து விவசாயத்திற்கு மழையை மட்டுமே நம்பியிருக்கும் விதர்பா பகுதியில் இந்த வகை பருத்தி பயிரிடப்பட்டுவருகிறது. விதர்பாவில் பாசன வசதி குறைவு, மண் வளமும் குறைவு. கடந்த ஆண்டு நல்ல விலை கிடைத்ததால் சுமார் 16 முதல் 17 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயிகள் பருத்தி பயிரிட்டனர். இந்தப் பகுதியிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் கடந்த பல ஆண்டுகளாகவே பருத்திப் பயிர்கள் மிக அதிகமான பூச்சித் தாக்குதலுக்கு ஆட்பட்டிருப்பதுடன், பிற வகை பூச்சிகள் மற்றும் பருத்திப்புழுக்களை தாக்குப்பிடிக்க முடியாதவையாகவும் ஆகியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் பி.டி. பருத்தியானது வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் சரியாக வளரவில்லை என்பதுடன் போல்கார்ட் 2 வகை பருத்தியானது ஒயிட்பிளை எனும் பூச்சி மற்றும் பருத்தி செம்புழுக்களால் அழிக்கப்பட்டுவிட்டன. 2009லேயே போல்கார்ட் 1 வகை பருத்தியால் பருத்திக்காய் செம்புழுவின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. 2015ல் குஜராத்திலும் தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் போல்கார்ட் 2 வகையும் பாதிப்பிற்குள்ளானது. 2015&16ல் பஞ்சாப் மற்றும் ஹரியானவில் ஒயிட்பிளை என்ற பூச்சியின் தாக்குதல் காரணமாக பயிர்களில் இழப்பு ஏற்பட்டன. அதிகாரப்பூர்வமற்ற வகையில் பி.டி. பருத்தி தனது எதிர்ப்பு ஆற்றலை இழந்துவிட்டது என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் இந்த வகை பருத்தி விற்பனையை ஒழுங்குபடுத்தவோ அல்லது இதற்கு மாற்றுகளையோ எதையும் இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கு செய்யவில்லை. மாறாக பூச்சிகளின் தாக்குதலிலிருந்து பி.டி. பருத்தியைச் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டனர் என விவசாயிகள் மீது பழி சுமத்தப்படுகிறது.